எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உலகப் புத்தக நாள் - உலகப் புத்தக வாரம் - இவற்றை இவ்வாண்டு சிங்கப்பூர் நாட்டின் சிறந்த புத்தகக் கடைகளுக்குப் படையெடுத்து நல்ல - அல்லது எனக்குப் பிடித்த, அறிந்துகொண்டு மேலும் பக்குவப்படக் கூடிய பல நூல்களை வாங்கினேன் - சில நாட்களுக்கு முன்பே! ஒரு சில நூல்களைப் படித்துப் பயன் பெற்றேன் - பாடம் கற்றேன்.

எடுத்துக்காட்டாக 'Man's  Search For Meaning' என்னும் நூலின் ஆசிரியர் Viktor E. Frankl
மனநலம் மற்றும் நரம்பியல் துறைகளில் டாக்டர் ஆகி, பல மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் பேராசிரியராக வியன்னா, ஜெர்மனி நாடுகளில் பல ஆண்டு காலம் பணிபுரிந்தவர். இவர் ஒரு யூதர்; அந்தக் காரணத்தால் ஹிட்லர் ஆண்ட காலத்தில் இரண்டாம் உலகப் போரில் அந்த சர்வாதிகாரியின் வெற்றிக் கொடி பறந்தபோது - வரலாற்றின் மிகப் பெரிய கறுப்பு அத்தியாயம் ஒன்று படைக்கப்பட்டு இணைக்கப்பட்டது.

Holo caust  என்ற யூத இன அழித்தல் என்பதுதான் அது. பல லட்சக்கணக்கான யூத இருபாலரையும் கைது செய்து, அவர்களை கடும் பனி, குளிர் உறைப் பிரதேசங்களுக்குப் பல லட்சக்கணக்கில் சிறைச்சாலை (Concentration Camps  Prisons)
அமைத்து அடைத்தும், அரைப் பட்டினி, கால் பட்டினி உணவு மட்டுமே தந்து மிருகங்களை எப்படி, மனிதர்கள் அடித்து, ஓட்டி வேலை வாங்குகிறார்களோ அப்படிச் செய்த சிறைச் சாலை என்ற சித்ரவதை முகாம்கள் அமைக்கப்பட்டு, வலிவிழந்த, கடுமையான வேலைக்கு ஆகாத யூத வயதானவர்கள், எலும்பும் தோலுமாய் ஆக்கப்பட்டபின், அவர் களின் உயிர்களைப் போக்கிடுவதற்கு அவர்கள் தனி லாரிகளில் ஏற்றப்பட்டு அனுப்பப் படுவார்கள். அவர்களை மனிதநேயமின்றி நடத்திட அவர்களிலேயே உடல் வலிவுள்ளவர்களைத் தேர்வு செய்து, அவர்களை (சிறைச்சாலையில் 'கான்விக்ட் வார்டன்கள்' மற்ற கைதிகளை மேய்ப்பது போல) மேய்ப்பது, கொடுமையான தண்டனைகளை அளித்தல், உணவு கால் வயிற் றுக்கும் குறைவு,  கடுங் குளிர் தாங்கும் போர் வைகளைக் கூட தராமல் தரைகளில் படுக்க வைத்தல், அவர்களிடம் எந்தப் பொருளும் இல் லாதாவாறு அனைத் தையும் பறிமுதல் செய்து சித்ரவதை முகாமுக்கு (Concentration Camp) சென்றவுடன் அத் துணைப் பேர்களும் நிர்வாணமாக்கப்பட்டு, உடைகளைத் தராமல் மொட்டை அடித்து, சிரைத்து விடுவது முதல் வேலையாம்!

இப்படிப்பட்ட கொடு மையான சிறைவாசம் 4லு ஆண்டு காலம் கழிந்தபோதும், தனது வாழ்நாள் லட்சியமான தனது துறையான மன நலத்தில், 'லோகோ தெரப்பி' (Logotherapy) என்ற ஒரு புதுவகை சிகிச்சை பற்றிய ஆய்வு, அதன் கூறுகள், விழுமிய பயன்பற்றி சிந்தித்து, பயனுறு வாழக்கையாக ஆக்கிக் கொள்வது எப்படி என்பதற்கான ஒரு புத்தகத்தை அந்த கொடுஞ்சூழலிலும், குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு எல் லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு - வாழ்ந்தவர் டாக்டர் விக்டர் இ.பிராங்கல் ஆவார்!

'லோகோ' (Logo) என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'அர்த்தம்'  'புரிந்து கொள்ளுதல்' என்பதுதான் அதன் பொருள். வாழ்க்கை என்பது வெறும் சூழ்நிலைகளால் மட்டுமே உருவாகக் கூடியது என்று மட்டுமோ அல்லது வாழ்க்கையில் நாம் இன்பத்தைத் தேடி அனுபவிப்பது மட்டுமே அதன் குறிக்கோள் என்றோ கருதக் கூடாது.

வாழ்க்கை என்பது கஷ்ட, நஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களின் தொகுப்பும் ஆகும். அதனை ஒரு குறிக்கோளுக்காகவும், துணிவுடன் துன்பங்களை எதிர் கொண்டு, நம்பிக்கையுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்கு, பல்வேறு துன்பங்களை அகற்ற சிகிச்சை முறைகளால் (மனோதத்துவ - அல்லது உளவியல் பூர்வமாக) 'லோகோ தெரப்பி' என்ற புதிய ஆய்வு தத்துவத்தைப் பற்றி இவர் எழுதிய நூல்கள் பிறகு பிரபலமாகியுள்ளன!

அவர் சித்ரவதை முகாம்களில் பட்ட துன்பத்தைவிட, எதிர் கொண்ட மனோதிடம், நம்பிக்கை இவை ஒரு புது வெளிச்சத்தை நமக்குக் கற்றுக் கொடுப்பதாக  இந்த 165 பக்கங்கள் கொண்ட ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் 100 பதிப்புகளுக்கு மேல் (ஆங்கிலப் பதிப்புகள் மட்டுமே) வெளியாகி உள்ளது. 30 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

1959இல் இதன் முதல் பதிப்பு வெளியாகியது. 15 லட்சம் (யூத) மக்கள் அந்த Holocaust இல் கொல்லப் பட்டனர்.

மேலும் 24 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் இது! 120 லட்சம் - ஒரு கோடியே  இருபது லட்சம் மொத்தம் விற்பனையாகி உள்ளது.

1902இல் பிறந்த டாக்டர் விக்டர் இ. பிராங்கல் அவர்கள் 1994இல் இறந்தார்!  'நெருக்கடி கால' - மிசா கைதியாக (1976) இருந்து சிறைச்சாலை, சித்ரவதை, அடியைத் தாங்கி, அவமானச் சொற்களைச் செரிமானம் செய்து, சிறையில் எப்படிப்பட்ட ஒரு பயங்கொள்ளித்தன சூழ்நிலை அலைகளால் அடிக்கடி அடித்துச் சென்று, லட்சிய நம்பிக்கையில் மீண்ட எம்மைப் போன்றவர்கள் அனுபவித்த கொடுமை எனும் துன்பம் பத்தாயிரத்தில் ஒன்று அல்ல அந்த யூத சித்ரவதை உயிர்க் கொல்லி முகாம் நிலைகளோடு ஒப்பிடும்போது!

வாழ்க்கை என்பதை துன்பத்தைத் துணிவுடன் எதிர் கொண்டு, போராடி வெற்றி கொள்ளும் களம் என்ற திடசித்தத்துடன், போராடியும், சகித்தும், துன்ப, துயரங்கள் ஏற்றுப் பழகி, 'காப்புக் காய்ந்த' அனுபவத்தைச் சுவைத்தால், துன்பம் எவ்வளவு பெரிதாக நம்மைத் தாக்கினாலும், மாமலையும் ஓர் கடுகாகி விடும் என்பதைக் கற்றுத் தரும் நல்லதோர் வாழ்க்கைப் பாட நூல் இது!

'கற்க அந்நூலை; நிற்க அதற்குத் தக!'

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner