எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகை உலுக்கிய சிந்தனைப் புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்கள்.

இப்போது அவரது 200ஆம் ஆண்டு பிறந்த நாள் பருவம் - உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

அந்த மாமனிதர், மாணவப் பருவத்திலே பிரஷ்யாவில் (இன்றைய ஜெர்மனி), த்ரியர் நகரத்தில், 'ஜிம்னேஷ் யம்' என்ற பள்ளியில் படித்தவர்.

'நீங்கள் யாராக ஆக வேண்டும்?' - இப்படி ஒருகேள்வி அவரது வகுப்பில் ஆசிரியரால் கேட்கப்பட்டபோது,

ஒரு மாணவன் மட்டும் தனித்தன்மையோடு "நான் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதன் ஆக வேண்டும்" என்றார்.

இக்கேள்வியோடு நிறுத்திக் கொள்ளவில்லை அச்சுட்டி மாணவன்; பதிலையும் எழுதினான்.

"இந்த உலகிலேயே பெரிய பணக்காரன் மகிழ்ச்சி நிறைந்தவனா? ஒரு போதும் இல்லை. தன் செல்வத்தை அதிகரிக்கவும், இருப்பதை இழந்து விடாதிருக்கவும் ஒவ்வொரு நொடியும் கவலைப்படுவான்; அவனுக்கு மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாது."

"மிகப் பெரிய ராஜாதான் மகிழ்ச்சியான மனிதனாக இருப்பானா? இல்லவே இல்லை. தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தவும், உள்ளதைக் காப்பாற்றிக் கொள்ளவும் கவலைப்படுவான். அவனால் சரியாகத் தூங்கவும் கூட முடியாது!"

அப்படி என்றால் யார் மகிழ்ச்சியான மனிதன்? எழுதினான்....

"மற்றவர்களுக்காகச் செயல்படவும், கஷ்டப்படவும் வாய்ப்புக் கிடைக்கும் போதுதான் ஒரு மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறான்! எனக்கு அந்த மகிழ்ச்சிதான் வேண்டும்!"

அந்தப் பையன் இப்படி எழுதும் போது அவனுக்கு வயது 16.

பதினாறு வயதினிலே அவருக்குப் பூத்த காதல் - தொண்டறக் காதல்! சமூகத்தையும், அதில் அவதியுறும் மாமனிதர்களைக் காப்பாற்றுவது - உதவுவதில்தான் அவருக்குக் கொள்ளை இன்பம்!

எத்தகைய சிந்தனை பார்த்தீர்களா?

முளையும் பயிர் விளையும் போதே தெரிந்து விடுகிறது அல்லவா?

(இத்தகவலைத் தந்தவர் 'மேன்மை' இதழ் நண்பர் நாராயணமூர்த்தி என்ற எழுத்தாளர் - நன்றி)

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல                                  (குறள் 39)

வள்ளுவர் கண்ணோட்டத்தில் எது உண்மை இன்பம் - மேலே உள்ள குறளால் புரிந்து கொள்ளலாம்.

"அறவொழுக்கத்தில் வாழ்வதன் மூலம் ஒருவருக்கு விளைவதே இன்பம் ஆகும். அறம் அல்லாத வழிகளில் ஏற்படுபவனவெல்லாம் இன்பம் பயக்காதவை ஆகும். அவற்றால் புகழும் ஏற்படாது.

எல்லா இன்பத்திலும் நீடித்த நிலைத்த புகழோடு நிற்கும் இன்பம் எது தெரியுமா?

கிரேக்கத்துப் பெரியார், அறிஞர் சாக்ரட்டீஸ் செய்யாத குற்றத்திற்கு - 'ஹெம்லக்' என்ற விஷத்தை அருந்தி  மாளச் சொன்ன தண்டனையை நிறைவேற்றிய போது, விஷக்கோப்பை தான் அந்த மாமேதைக்கு இன்ப ஊற்றானது! நேற்றும், இன்றும், நாளையும் தலைமுறை தலைமுறையாக சாகாமல் சாக்ரட்டீசு வாழ்ந்து கொண்டே உள்ளார்!

29 வயதுகூட நிரம்பாத மாவீரன் நாத்திகன் பகத்சிங் தனது முறுக்கான வாலிபத்தை  1929 ஏப்ரல் 8 முதல் 1931ஆம் ஆண்டு மார்ச் 23 வரை - சுமார் இரண்டாண்டு காலம் சிறையில் இருந்தார்; சிந்தித்து தனது லட்சியத்தை அடைய அது சரியான விலை - உயிரையும் சேர்த்து என்று தூக்குக் கயிற்றை முத்தமிட்டானே அவன் அடைந்தது துன்பமா - இல்லை - இன்பம்! இன்பம்!!

இதோ அதற்கு அவனது புரட்சி மணம் வீசு பொறிகளின் எழுத்துக்கள்.

"உயிருள்ள பகத்சிங்கைவிட உயிரற்ற பகத்சிங் ஆதிக்கவாதிகளுக்கு ஆபத்தானவன்.

நான் தூக்கிலிடப்பட்டபின்னர் என்னுடைய புரட்சிக் கருத்துக்களின் நறுமணம் நம்முடைய அழகான தேசத்தின் சூழலெங்கும் பரவும்.

...இது என் உறுதியான நம்பிக்கை!"

பகத்சிங்கின் இன்பத்தின் உச்சி, அவனது கழுத்தினை தூக்கு கயிறு முத்தமிட்டபோது! ஆயிரம் காதலிகளின் முத்தங்கள்கூட அதற்கு இணையாகுமோ?  1938 இந்தி எதிர்ப்புப் போர்! கைதான தந்தை பெரியார்  அவர்களை மாதவ்ராவ் என்ற (பார்ப்பன) நீதிபதி விசாரிக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள், நீதிபதிக்கு முன்னே ஒரு அறிக்கை எழுதி வாசிக்கிறார்.

"ஏன் இந்த விசாரணை நாடகம்?  விரைந்து முடியுங்கள். உங்கள் எஜமானர்களான ஆட்சியாளருக்கு - எனக்கு எவ்வளவு அதிகபட்ச தண்டனை - குறைந்த வகுப்புள்ள கடுங்காவல் தந்தால் மகிழ்ச்சி  ஏற்படுமோ அதனை எனக்குத் தந்து இந்த  நாடகத்தை முடியுங்கள் என்று கனம் கோர்ட்டார் அவர்களை நான் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்." என்றாரே!

என்னே துணிச்சல்! சிறைக்குப் போவதில்தான் எத்தனை இன்பத் தேடல்கள்!

எனவே இளைஞர்களே, தற்காலிக, மின்னல்களாகத் தோன்றி மறையும் இன்பங்களை நாடுவதில் உங்கள் கருத்தையும், உழைப்பையும் செலுத்துவதைவிட வாழ்வின் இலக்கு குறித்த சமூக நலம் சார்ந்தவைகளே இன்பம்!

இன்பம் உங்களுக்குள் இருந்து ஊற்றெடுக்கட்டும்; வெளியிலிருந்து திணிக்கப்படக் கூடாது, மறவாதீர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner