எழுத்துரு அளவு Larger Font Smaller Font

15.8.2018 அன்று 'பெரியார் மெடிக்கல் மிஷன்' நடத்திய நல வாழ்வு சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மூத்த மருத்துவப் பேராசிரியரும், சிறந்த கருத்தாளருமான டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் தனது சுருக்கமான தலைமை உரையில் பல்வேறு அரிய தகவல்களை கேட்டோருக்குப் பாடம் நடத்துவது போலக் கூறினார்.

"தமிழ்நாடு - 'மருத்துவத்தின் மெக்கா' என்று அழைக்கப்படுவதுண்டு.

அரசு பொது மருத்துவமனையில் (தனியார் அல்லாதவை) ஒவ்வொரு நாளும் வெளிப்புற சிகிச்சை நோயாளிகள் (o.p.) 12000 பேர் ஆவார்கள். 2400 பேர் உள் நோயாளிகள் சிகிச்சை (எந்த செலவுமில்லாமல், அல்லது மிகக் குறைந்த செலவில்) பெற்று வருகின்றனர். இன்ஷுரன்ஸ் என்ற காப்பீட்டுத் திட்டம் காரணமாகவே பல தனியார் மருத்துவமனைகள் கொழுத்து வளருகின்றன.

நிஞிறி  என்றெல்லாம் பொருளாதார வளர்ச்சி பற்றி பல நாடுகளில் அரசுகள் பெருமையாகக் குறிப்பிடுகின்றனவே -  அதைவிட முக்கியம் குடிமக்களின் மகிழ்ச்சி Happiness index அளவுகோல்தான் மிகவும் முக்கியமானது.

சுற்றுச்சூழல் தூய்மை, மாசுக்கட்டுப்பாடு மற்றும் அமைதி இவைகளுக்கெல்லாம் இந்தியாவிற்கு நெருக்கமாக உள்ள பூட்டான் நாடு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. ஒரு அரசரின் கீழ் நடைபெறும் அந்த ஆட்சியில் ஊழலோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை. நாம் காணும் பல ஜனநாயக நாடுகள்  எப்படி இந்த குற்றச் சாட்டுகளின் உறைவிடமாக உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே" என்று புதுமையான தகவலைக் கூறினார்.

தந்தை பெரியார் அடிக்கடி மேடைகளில் கூறுவார், அரசர்கள் ஆண்ட காலம், இந்த ஜனநாயக  வாக்கு வங்கியால் ஆளப்படுவதைவிட உயர்ந்த சிறந்த காலம்; எப்போதோ எங்கோதான் அந்த அரசன் கொடுமைக்காரனாக இருந்திருப்பான் மற்றபடி தவறு நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட இடத்தோடு முடிந்து விடும்; இப்போது ஜனநாயகம் என்ற பெயரில் காலித்தனத்தின் நாயகம் அல்லவா பரவலாக எங்கும் காணப் படுகிறது என்று  மேடைகளில் கூறியதை நினைவு படுத்துவது போல இருந்தது நமக்கு!

உடல் உறுப்புகளை கொடையாக வழங்கும் பழக்கம் பலருக்கும் ஏற்படுவது மிக நல்லது.

விழிக்கொடை தருவதன்மூலம் அந்த கண் வேறொருவருக்கு பொருத்தப்பட்டு, பார்வை இழந்தவர் பார்வை பெற்று மகிழும்போது, இறந்தவர் மீண்டும் வாழ்கிறார் என்பதுதானே பொருள் என்று, பலத்த கை தட்டலுக்கு இடையே கூறினார்.

மேலும், ஒருவருக்குக் கொடையாக அளிக்கப்படும் ஒரு உடல் உறுப்பினால்! (சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள்); உடற் கொடையால் குறைந்தபட்சம் 7 பேர் மீள் பயன் அடைகிறார்கள். நீங்கள் பகுத்தறிவாளர்கள், பெரிதும் இந்த முயற்சிகளில் ஈடுபடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அரசு பொது மருத்துவமனையில் பிரபல மானவர்கள், முக்கிய தலைவர்கள் போன்றவர்கள் சென்று சிகிச்சை எடுத்தால், வெகு மக்களுக்கு அங்கு அளிக்கப்படும் சிகிச்சையின்மீது நம்பிக்கை ஏற்படும்.

(இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் தா. பாண்டியன் போன்றவர்கள் தான் அரசு பொது  மருத்துவ னையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பிரபலத் தலைவர் ஆவர்!) ஏராளமான நோயாளிகள் வருவதால், தூய்மைப் பராமரிப்பு கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். என்றாலும் அங்கு செல்ல வேண்டும். சிகிச்சை அளிப்பதில் தரமானதாகவே உள்ளது  என்று அறிவுரை கூறினார்.

ஜஸ்டீஸ் A.K ராஜன் அவர்கள், சுருக்கமாக தமது உரையில், இதய வலி, நெஞ்சில் ஒரு மாதிரியான கனத்த உணர்வு ஏற்படுகையில் அது ஏதோ வாயுத் தொல்லை என்று அலட்சியமாக இருந்து வெறும்2'ஜெலுசில்' சாப்பிட்டால் போதுமென்று சிலரும், வாயுத் தொல்லையாகவே இருப்பதை, இதய மாரடைப்பு என்று பயப்படும் பலரும் உள்ள நிலையில் அவ்வப்போது உடற்பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று நல்ல அறிவுரை கூறினார்.

சிறு நீரகவியல் துறையில் தலை சிறந்த பிரபல மருத்துவர் டாக்டர் ஏ. இராஜசேகர் அவர்கள் வெகு சுருக்கமாகப் பேசி, முன்பு தொடர்ந்து பிரபல மருத்துவர்களைக் கொண்டு அவ்வப்போது பெரியார் திடலில் நலவாழ்வுச் சொற்பொழிவுகளை நாங்கள் ஏற்பாடு செய்து பலருக்கும் பயன்படுமாறு செய்த முயற்சியின் தொடர்ச்சியே இது என்பதை எடுத்துக்காட்டி, இவர் போன்ற (டாக்டர் கார்த்திகேசன்) - மருத்துவ நிபுணர்களின் விளக்கம் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வரும்முன்னர் காப்பதற்கும் பயன்படுவதாகும் என்று விளக்கினார்.

அக்கூட்டம் நல்லதோர் அறிவு விருந்தாகும் என்று ஊக்கப்படுத்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner