எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜான் மெக்கெயின் அவர்கள், வியட்நாம் போரில் யுத்தக் கைதியாக வியட்நாமியர்களால் சிறை பிடிக்கப்பட்டு தனது 31 வயதில் 5 ஆண்டு தனிமைச் சிறையில் பல்வேறு சோதனைகள்  - வேதனைகளுடன் வாழ்ந்தார்.

கருத்த முடியுடன் கைதியாகப் பிடிபட்டு, தன்னாட்டுக்காக, இராணுவக் கைதியாக வியட்நாமின் சிறைச்சாலையில், பல நேரங்களில் தனிமைச் சிறையில் வதிந்த நேரத்திலும் நம்பிக்கை இழக்காமலிருந்த இந்த மாபெரும் மேதை 5 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து வெளியே வரும்போது, நரைத்த முடி, இளைத்த உடலுடன் - ஆனால் தளரா உறுதியுடன் வெளியே வந்தார்!

இவர் பாரம்பரியமான இராணுவக் குடும்பம் - கப்பற்படை அதிகாரியாக இவரது  தாத்தா, தந்தை இவர்கள் எல்லாம் பணிபுரிந்துள்ளனர் என்பதை அறிந்து, இவருக்குச் சிறையில் சலுகை காட்டி, விடுதலை செய்ய (முன்கூட்டியே) முன்வந்த நிலையில், இவர் தனது சக கைதிகள் - இராணுவ போர்க் குற்றவாளிகளான (POW - Prisoner of War) அத்தனைப் பேர்களும் விடுதலை செய்யப்பட்டாலொழிய தான் வெளியேற  மாட்டேன் என்று பிடிவாதம் காட்டி, வெற்றியடைந்த ஒரு மாமனிதர் இவர்!

சிறைச்சாலைதான் மனிதர்களின் சுயநலம் எத்தகையது என்பதை அளந்து காட்டும் அற்புத பரிசோதனைக்கூடம் என்பதை மிசா கைதியாக 1976இல் சென்னை மத்திய சிறைச்சாலையில் நான் இருந்தபோது நேரில் பார்த்து அனுபவித்து உணர்ந்தவன்.

சக கைதியான ஒரு தோழர், ஆறு பேர்கள் கொண்ட எட்டடி கொட்டகை அறையில்  (Cell) ஒருவர் இரவில் போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டு, அவருக்கு வந்த ஒரு ஆப்பிள் பழத்தை இரவு எல்லோரும் தூங்கி விட்டார்கள் என்ற நினைப்பில் பிறகு மெதுவாக கடித்து - மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவே செய்ததைக் கண்டு நாங்கள் நகைத்து ரசித்தோம். மனிதர்களின் சுயநலம் எப்படி வெளியே உலா வருகிறது அங்கே என்று புரிந்து கொண்டவன் இதை எழுதுகிறேன்.

ஆனால், ஜான் மெக்கெயின் போன்றவர் தனக்கு விடுதலை தந்து - கருணை காட்டி - அங்குள்ள ஜெயில் அதிகாரிகள் முன்வந்தபோதுகூட அதை ஏற்காது, சக தோழர்களுக்கும் விடுதலை கிட்டினால்தான், தான் வெளியே செல்ல முடியும் என்ற அவரது உறுதி எவ்வளவு மகத்தான மாமனிதர் அவர் என்பதை உலகுக்குக் காட்டுவதாக இருந்தது!

பண அரசியல், தரந்தாழ்ந்த பிரச்சாரப் புழுதி - இவைகள்தான் தேர்தல் அரசியலில் காணப்படும் அம்சங்கள் அமெரிக்காவில் கூடவா என்று மூக்கின் மேல் விரலை வைக்காதீர்கள்!

அமெரிக்காவாக இருந்தால் என்ன? வேறு நாடாக இருந்தால் என்ன? எங்கும் மனிதன் மனிதன்தானே!

மனித சுபாவமும், ஆசா பாசங்களும் எல்லாம் ஒரே மாதிரியான அடிப்படையைக் கொண்டதுதானே!

இவரை எதிர்த்து நின்ற  ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பேரக் ஒபாமா, அவரைப்பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் "அவர் ஒரு தீவிரவாதி; அராபியக் குடும்பத்தவர்" என்றெல்லாம் இவருடைய கட்சியின் தேர்தல் பிரச்சாரகர்கள் பேசியபோதுகூட அதனை மறுத்து "அப்படிக் கூறாதீர்கள்; அவர் ஒரு கண்ணியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்த பெருமகன்"  என்று கூறி தனது கட்சிக்காரர்களின் ஒத்துழைப்பையேகூட இழக்கத் தயாரான நேர்மையாளர் இவர்!

தரந் தாழ்ந்த பிரச்சாரத்திற்கு இவரால்கூட பலியா காமல் தப்பிக்க முடியவில்லை - தேர்தல் கால பிரச்சாரப் புழுதியில்!

மின்னஞ்சல்கள், வதந்திகளும், மொட்டைப் பிரசுரங்களும் நல்ல மனிதனரான இவர்மீதும் பாயவே செய்தன!

இந்த மனிதர் குடியரசுத் தலைவர் வேட்பாளர், ஒரு சட்ட விரோத, இனக் கலப்புள்ள குழந்தையின் தந்தை என்றெல்லாம் 'கப்சாக்'களை கட்டி உலவ விட்டனர்! அவதூறு சேற்றை வாரி வீசினர்!

ஜான் மெக்கெயினும், அவரது துணைவியரும் வங்கதேசத்துப் பெண் குழந்தையை எடுத்து தங்களது வளர்ப்பு மகளாக்கி வளர்த்தார்கள் என்பது எவ்வளவு அருமையான, இவர் "யாவரும் கேளிர்" என்ற பரந்து விரிந்த மனப்பான்மையுடைய மாண்பமை மனிதர் என்பது புரியவில்லையா?

ஏன் 'கிசு கிசு' - பிரச்சாரத்தால் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது என்றெல்லாம்கூட கதை கட்டி விட்டனர்!

வெற்றி - தோல்வி என்பது தேர்தல்களில் உண்டு; ஆனால் மனிதத்தைத் தூக்கிப் பிடிக்கும் மகத்தான தொண்டறப் போரில் அவர் என்றுமே தோற்றதில்லை. மறைந்தும் மறையாமல் மக்கள் நெஞ்சில் நிறைந்து வாழுகிறார் அவர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner