எழுத்துரு அளவு Larger Font Smaller Font

6. உங்கள் எடையை ஒழுங்குபடுத்தி வைத்துக் கொள்க!

அதிக கூடுதல் எடையும், ஊளைச்சதையும் நமது உடலில் இரத்த அழுத்தத்தையும் (B.P), அதன் விளைவாக பக்கவாதத்தையும் (Stroke)  உருவாக்கக் கூடும். (எனவே இந்த நோய்களிலிருந்து தப்பிடுவதற்கு சரியான வழி எடை நம் உடலுக்கும், உயரத்திற்கும் (BMI Body Mass Index) ஏற்றபடி உள்ள எடையை அவ்வப் போது விடாமல் கண்காணித்து வருவது மிகவும் அவசியமாகும்).

சரியான எடையை எப்போதும் சீராக வைத்திருப்ப தற்காக டாக்டர் இனோஹாரா அவர்கள் உணவுப் பழக்கத்தை ஒழுங்காக்கிக் கொள்வதில் அதிக கவனஞ் செலுத்துகிறார்.

ஒரு குவளை ஆரஞ்சு பழச்சாறு, காஃபி, ஆலிவ் எண்ணெய் என்பவை இவரது காலை உணவு (Breakfast) ;

குக்கீஸ் எனப்படும் ரொட்டித்துண்டு வகையறாவும், ஒரு குவளை பாலும் தான் இவரது மதிய உணவு (Lunch);

ஒரு குவளை சோறு, காய்கறிகள், மீன் - இவை தான் இவரது இரவு உணவு (Dinner);

கூடுமான வரை இவர் மெல்லிய இறைச்சியை 100 கிராம் வாரத்திற்கு இரு முறை எடுத்துக் கொள்கிறார்!

(அவரைப் பொறுத்தும், அந்நாட்டு உணவுப் பழக்க முறைகளையும், வயதையும் பொருத்து அது சரி; ஆனால் நம் நாட்டில் நீங்கள் மருத்துவ, ஊட்டச்சத்து உணவு வல்லுநர்கள் வழங்கும் ஆலோசனை  கருத்துப் படியும், உங்கள் உடல் ஏற்கும் வகையான உணவுகளைத் தேர்வு செய்து உண்ணுவதே உசிதம்).

7. உண்மையான உடலுக்கான சக்தி (Energy) என்பது 'நாம் நன்றாக இருக்கிறோம்' என்ற மகிழ்வுடன் கூடிய உணர்விலிருந்தே பிறக்கிறது.

இது உணவிலிருந்து உண்மையில் வருவதைவிட நம் மகிழ்ச்சியான உணர்விலிருந்தே ஊற்றெடுக்கிறது என்று கூறுகிறார் டாக்டர் இனோஹாரா அவர்கள்!

அதேபோல தூக்கமும்கூட இந்த உணர்வுக்கு மூல காரணமாக அமைவதில்லை என்கிறார் இந்த டாக்டர். நமது மன உற்சாகம்தான் அடிப்படை.

இதுபோன்ற ஆக்க ரீதியான சக்தியை முதுமை யடைந்தவர்கள் பெறுவதற்குரிய ஒரே வழி - குழந்தைகளைப் போல நாம் நடந்து கொண்டு, எந்த வித கட்டுப்பாட்டிற்கும், விதிமுறைகளுக்குட்பட்டும் நடக்காமல், தாராளமான விளையாட்டு பிள்ளைகளைப் போல அன்றாடம் நடப்பதே உற்சாகத்தை, சக்தியை நமக்கு அள்ளித் தருவதாக அமையக் கூடும்.

8. முதுமை என்பதைக் கண்டு பயப்படாதீர்கள்;

அதைப் பெருமையுடன் ஏற்று, சகஜமாகப் பழக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர் களே, வயது கூடி விட்டதே என்று கலங்காதீர்கள் - அஞ்சாதீர்கள். முதுமைக்கு வரவேற்புக் கூறி மகிழ்ச்சியுடன் அதனை எதிர் கொள்ளுங்கள்!

டாக்டர் இனோஹாரா தனக்கு முதுமை வந்து விட்டதே என்று சிறிதும் கவலைப்படவே இல்லை. (அது இயல்பான ஒன்று வாழ்வில் என்று புரிந்து கொண் டால் இப்படி கவலைப்படுவது முட்டாள்தனம் அல்லது அறியாமை என்பது  எவருக்கும் புரியுமே)

இவருக்கு வயது முதிர்ந்த நிலை ஏற்பட்ட பிறகும் கூட, ஒரு நாளில் 18 மணி நேரம் ஊக்கத்துடன், மகிழ்ச் சியுடன் இவர் வாழ்ந்து தான் வாழும் சமுதாயத்திற்கான தொண்டறப் பணிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்!

நாளும் 18 மணி நேர உழைப்பு!

அதுவும் ஏழு நாட்களும் (விடுமுறைக்கு விடுமுறை கொடுத்துவிட்ட மாமனிதர் இவர்)

இவ்வளவு 'சுறுசுறுப்புத் தேனீயாக' உழைத்து வாழும் இவர் தனது ஒவ்வொரு கணத்தையும் பயனுறும் வழியில் அனுபவித்து வருகிறாரே!

9. நீங்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டானவர் 'Role Model' - ரோல் மாடலைத் தேர்வு செய்து, அவரைப்போல  முடிந்த அளவு நடந்து மகிழுங்கள்.

உழைப்பால் நமது கலைஞருக்கு ரோல் மாடல் தந்தை பெரியார் என்பதை ஈரோட்டு குருகுல வாசத்திலேயே புரிந்து, பின்பற்றத் தொடங்கி விட்டதால் -  94 வயது வரை உழைப்புத் தேனீயாக வாழ்ந்து வரலாறு படைத்து விட்டார் அல்லவா!

தனக்குச் சோதனை ஏற்படும் போதெல்லாம் இந்த டாக்டர் - தனது தந்தையாரை எடுத்துக்காட்டானவராகக் கொண்டவர் ஆனபடியால் - இந்த நேரத்தில் தனது தந்தை இந்த சோதனையை எப்படி எதிர் கொண்டி ருப்பார் என்று சிந்தித்து செயல்பட்டு, அதன் மூலம் அந்தச் சோதனையை தனது சாதனையாக மாற்றிடுவார் என்று கூறுகிறார்.

(என்னைப் பொருத்தவரை எனக்கு நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் 'இத்தகைய சோத னையை எப்படி எதிர்கொண்டு, தீர்வு கண்டிருப்பார்' என்ற  பெரியார் தந்த புத்தியையே பயன்படுத்தி அதிலிருந்து மீண்டும் வருவதும் எனது நடைமுறை; அது வெற்றியே தந்துள்ளது என்பதை மிகுந்த அடக்கத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்)

10. எதற்கும் அதிகமாகக் கவலைப்பட்டு அலுத்துக் கொண்டு மனச்சோர்வடையாதீர்!

வாழ்க்கை என்பது எத்தனையோ எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பேயாகும்!

எது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வாக  எதிர்பாராமல் ஏற்படும் போது - அதுபற்றி அதிகமாக கவலைப்பட்டு நாம் நம் சக்தியை - புத்தியை ஏன் வீணடித்துக் கொள்ள வேண்டும்? இது புத்திசாலித்தனம் அல்லவே!

டாக்டர் இனோஹாரா கூறுகிறார்:

சின்ன சின்ன அற்ப விஷயங்களுக்கெல்லாம் மனக் கவலை கொண்டு உழற்றிக் கொள்வது, தேவையற்ற ஒன்று மட்டுமல்ல; மன அழுத்தத்தையும் அது வெகுவாக உண்டாக்கி நமக்குத் தொல்லை தருவதாக அமையுமே! உடல் நலமும் மிக பாதிக்கப்படும்!

சில நிகழ்வுகள் நடப்பதைக் கண்டு நாம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல், அமைதியுடன் அதை அலட் சியம் செய்தோ அல்லது நிதானமாக யோசித்தாலோ தீர்வு தானே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனோ வாழுதலே சிறந்தது என்கிறார் டாக்டர் இனோஹாரா.

(நாளையும் தொடரும்)