எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடலில் ஏற்படும் குடல்புண் - அல்சர் (Ulcer) பற்றிய வயிறும் -வாழ்வும் - குடற்புண் சிகிச்சைகள் என்பதைப்பற்றி தஞ்சையில் உள்ள பிரபல குடல் அறுவை சிகிச்சை நிபுணர் - மருத்துவர் - டாக்டர் நரேந்திரன் (Ph.D) அவர்கள் நமது 'பெரியார் மெடிக்கல் மிஷன்', பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் (10.10.2018, சென்னை பெரியார் திடலில்) மிகச் சிறந்ததோர் விரிவுரை - விளக்கவுரை நிகழ்த்தியும், கேள்விகளுக்குப் பதில் அளித்தும் (இரண்டும் இணைந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குமேல்) உரையாற்றினார்.

'வகுப்பெடுத்தார்' என்பதே பொருத்தமான சொற்றொடர் ஆகும்.

தலைமை தாங்கிய பிரபல பொது மருத்துவர் பேராசிரியர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்களும் அவருக்கே உரித்தான முறையில் அருமையாக - வந்திருந்தோருக்குப் 'பாடம்' நடத்தினார்.

அவர் கூறியவற்றில் அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பல மனச் சிக்கல்களை எளிமைப் படுத்திப் பேசினார்.

தினம் தினம் காலையில் எழுந்தவுடன் கழிப் பறைக்குச் சென்று மலம் கழித்தலை ஒரு பழக்கமாக்கிக் கொள்வது உடல் நலத்திற்கு மிகப் பெரிய உதவிடும் செயல்.

அமர்ந்து சில நிமிடங்கள் இருந்து பழக்கப்படுத்திக் கொண்டால் நமது உடலின் மணி (Body Clock) அதற்குப் பெரிதும் ஒத்துழைக்கும்; தவறி ஒரு நாள் மலம் கழிக்கா விட்டாலும்கூட சிலர் அதனையே பெரிதாக நினைத்து பதற்றம் அடைந்து, ஏதோ கிடைக்க வேண்டிய  ஒன்று கிடைக்காமல் இழந்து விட்டதுபோல மனசஞ்சலம் (Obsession) கவலை அடைவார்கள். அது தேவை யில்லை,  வேண்டியதில்லை.

மலச்சிக்கலால் எவரும் செத்ததாக வரலாறு கிடையாது. இயல்பாக அந்த உடல் உறுப்புகளே அதனை வெளியே தள்ளி விடும்.

பெருத்த உடல்  (Obesity) பருமன் இருப்பவர் களுக்குக் குடல் புண் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு. மதுப் பழக்கம், காரத்தை அதிகம் எடுத்து உண்ணல், சில தொற்றுக் கிருமிகள் (வைரஸ்) - இவற்றால் ஏற்படலாம்!

அதிக மது குடிப்பவர்களுக்குத்தான் இந்த 'அல்சர்' குடற்புண் ஏற்படும் என்பதில்லை.

'Non - alcoholic cirrhosis of liver' என்ற நோய் - மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட ஏற்படக் கூடும். வயிறுபெருத்தல் ("மகோதரம்" - என்று கூட கிராமங் களில் கூறுவதுண்டு) இதில் ஒரு சிறு பகுதியை வெட்டி எடுத்து Biopsy ஆய்வுக்கு அனுப்பி, இதில் புற்று நோய் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து அதற்கேற்ப தக்க சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது!

புகைபிடித்தல் (Smoking) இதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். புகை பிடிப்பதால் நுரையீரல்கூட பாழாகி புற்று நோய்க்கு வரவேற்புக் கொடுக்கும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் இதனை எதிர்பார்க்கத்தான் வேண்டும் - எச்சரிக்கையாக (பரிசோதனை மூலம்) இருப்பது எப்போதும் நல்லது!

தவறிப் போய் இந்த அல்சர் புண் நோய் முற்றுமே யானால், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக பட்சம்  5 ஆண்டுகள் வாழக் கூடும்; இடையிலும் மரணம் வரக்கூடும்!

உணவில் அதி-காரம் தவிர்ப்பீர்களாக! உடல் பருமனுக்கும் இடந்தராதீர்!

இப்படி பலப் பல பயனுள்ள அறிவுரைகளை வழங்கி, பிறகு குடற்புண் நோய் மருத்துவர்தம் விளக்கத்திற்குச் சரியான நுழைவு வாயிலை அமைத்துக் கொடுத்தார் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன்.

டாக்டர் நரேந்திரன் விளக்கங்களை அடுத்து பார்ப்போம்!

(தொடரும்)