எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1924ஆம் ஆண்டு - இன்றைய தேதியான அக்டோபர் 30 அய் உலக சிக்கன நாளாகக் கடைப்பிடிப்பதென, இத்தாலி நாட்டின் மிலான் நகரில் நடைபெற்ற முதல் பன்னாட்டு சேமிப்புக் காங்கிரஸ் - மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு, 94 ஆண்டுகளாக அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்!

சிக்கனம் - சேமிப்பு என்பது வாழ்வின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய தேவையான கூறுபாடுகளில் ஒன்றாகும்!

செலவே செய்யக் கூடாது என்று இதைத் தவறாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.

தேவையானவற்றிற்குச் செலவழித்துத் தான் தீர வேண்டும் என்பது வாழ்க்கையின் தத்துவம் ஆகும் - 'வரவு' என்ற சொல்லுடன் இணைந்தே வரும் மற்றொரு சொல் 'செலவு' என்பதாகும்!

வரவினைக் கொண்டு செலவழித்தல் ஒரு வகை; செலவிற்காக வரவினைத் தேடுவது இன்னொரு முறை.

சென்ற நூற்றாண்டான 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பொருளாதார வல்லுனரான ஜான் மேண்ட் கீன்ஸ் என்ற பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் அழகான ஒரு எளிய தத்துவத்தைக் கூறினார்.

'ஒருவரது செலவு, மற்றவரது வரவு' என்று அவர் கூறினார். (One Man's Expenditure  is another man's income)

பணத்தின் பெருமை - முடங்கிக் கிடப்பதில் இல்லை; மாறாக, நடைமுறை புழக்கத்தில் அது எவ்வளவு பேர்களிடம் கை மாறுகிறதோ (Velocity of Circulation of Money) அவ்வளவுக்கவ்வளவு பொரு ளாதார நடவடிக்கை, வளர்ச்சிக்கு வழிகோலும்!

சிக்கனம் - சேமிப்பு என்பதெல்லாம் கூட பொருளா தார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும்!

சேமிப்பு என்பதில்கூட கூர்த்த அறிவும், மிகுந்த நம்பகத் தன்மையுடைய அமைப்புகளான வங்கிகள், நிதி நிறுவனங்களில்தான் போட வேண்டும்.

செய்திதாள்களைத் திறந்தால், 'டெப்பாசிட் இழந்த வர்கள் சங்கத்தின்' தீர்மானங்களையும், போராட்டங் களையும் பற்றி படிக்கும் போது நம் கண்களில் கண்ணீர் அருவியெனக் கொட்டுகின்றது; காரணம், பல முதியவர்கள், ஓய்வூதியதாரர்கள் கடும் உழைப்பு - பல்லாண்டு கால பணிகள் மூலம் கிடைத்த பணிக் கொடை வரவு - இவைகளை தவறானவர்களை நம்பி, கூடுதல் வட்டி கிடைக்குமே என்ற தவறான ஆசை - ('பேராசை' என்ற சொல் அவர்களுக்குப் பொருந்தாது) காரணமாக உள்ளதை இழந்த, திடீர் பூகம்பம் ஏற்பட்டு உயிருடன் தப்பி, வீதியில் நிற்கும் முன்னாள் பணக்காரர்களைப் போல ஒரே நாளில் மீண்டும் அவர்களை வறுமைத் தேள் கொட்டி, விஷத்தை ஏற்றி விட்டதே என்ற அவல நிலை!

எனவேதான் சேமிப்பினைக்கூட சரியான அடை யாளத்துடன் கொண்ட நாணயம் தவறாத அமைப்பில் பண முதலீடு செய்ய வேண்டும் - விழிப்புணர்வுடன் செய்தல் - அவசியம்.

உங்கள் வாழ்வில் சேமிப்பு - மிச்சப்படுத்தல்பற்றிய இலக்குபற்றி தாளை எடுத்து எழுதுங்கள்.

1. குறைந்த காலத் திட்டம் (Short Term)

2. நடுமை காலத் திட்டம் (Medium Term)

3. நீண்ட காலத் திட்டம் (Long Term)

இதற்குமேல் "எதிர்பாராத செலவுகள்" என்பதற்கு உங்களது  வரவு - செலவுத் திட்டத்தில் ஒரு முக்கிய பங்கை ஒதுக்குங்கள். செலவாகாமல் அத்தொகையில் மீதம் ஆனால் பெரு மகிழ்ச்சியை அதுவே தரும் - இல்லையா?

நம் வருமானத்தில் - வரவில் - ஒரு பகுதியை 10 விழுக்காடு, 15 விழுக்காடு, 20 விழுக்காடு என்று வாய்ப்புக்கும், வசதிக்கும் ஏற்ப ஒதுக்கி, சேமிப்பில் போடுங்கள்.

உண்டியலில் போடும் பழக்கத்தை குழந்தைகளுக் குக்கூட சிறு வயதிலேயே உருவாக்கிவிடுங்கள். அந்த தொட்டிற் பழக்கம் பிறகு "சுடுகாடு"  மட்டும் நீடிக்கும்!

இப்படி ஒழுங்கான, முறையான சேமிப்புப் பழக்கம் - என்பது உங்களது நீண்ட காலத் திட்டத்திற்கு உதவிடும் முதல்படி என்பதை உணருங்கள் - மறக்காதீர்கள்!

முதலில் சிறு தொகையிலிருந்தே ஆரம்பியுங்கள்.

இந்த சேமிப்பை "தற்காலிகமாக" "வசதியாக" மறந்து விடுங்கள்! உங்கள் செலவு பட்ஜெட் அயிட்டங்களில் இதனைக் கணக்கில் கொண்டு வராதீர்கள்!

(நாளையும் தொடரலாம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner