எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலக மனித குல வளர்ச்சியை பல பருவங்களாக பற்பல உலக எதிர்கால நோக்காளர்களான சிந்தனை யாளர்கள் பார்த்தனர்; பகுத்தனர்!

ஆல்வின் டாஃப்ளர் (Alwin Toffler) என்ற சிந்தனையாளர் 'மூன்று அலைகள்' ஒன்று விவசாய அலை (Agricultural Wave),  இரண்டு  தொழில் அலை  (Industrial Wave), மூன்றாவது மின்னணுக் கால அலை (Electronic Age Wave) என்றார். ''Third Wave''  மூன்றாம் அலை என்ற நூலில்!

இதை மேலும் பெருக்கியதுபோல, புகழ் வாய்ந்த நிர்வாக இயல் பரப்புரையாளரும், பல ஊக்கமூட்டும் நூல்களை எழுதி பல லட்சக்கணக்கில் பரப்பியவரும் அமெரிக்க நாட்டு ஸ்டீபன் கோவி (Stephan Covey)  அவர்கள் ஒரு நூலில்,

(1) வேட்டையாடி சேகரிக்கும் பருவம்

(2) விவசாய பருவம்

(3) தொழிற் புரட்சி பருவம்

(4) மின்னணு பரவிய தகவல் தொழில் நுட்ப பருவம்

(5) கூர்த்த  அறிவு பருவம் (Age of Wisdom)  என்று பகுத்தார்.

மின்னணுவியல் காரணமாக மனித குலம் அடைந் துள்ள நன்மைகள் மிகப் பல.

ஆயுள் விருத்தி, டிஜிட்டல் தொழில் நுட்பம், மருத் துவத் துறையில் ஸ்கேன், துல்லிய ஒளி, ரோபொட்டிக் அறுவை - வென்ட்டிலேட்டர் - போன்ற பற்பல வசதிகள்!

தொழில் நுட்பக் கருவிகளும், மருத்துவ அறிவும், அனுபவமும் மனித வாழ்வின் சராசரி ஆயுளை வெகுவாக நீட்ட உதவியுள்ளன!

உடனடியாக உலகத்தோடு தொடர்பு கொள்ள மின் அஞ்சல் - மின் வர்த்தகம், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது ஒரு பக்கம்; இதற்கு  மறுபக்கமும் உண்டே!

தனி மனித அந்தரங்கம், தனி மனித ரகசிய காப்பு  (Right of Privacy, Personal Datas) எல்லாவற்றையும் இழந்து விட்டோம். நமது குளியல் அறையில் குளிக்கும் பெண்களைக்கூட படம் எடுத்து, பார்க்கும் கயவர்களின் கீழ்த்தர ரசிகத் தீனியும் இதன்மூலம் கிடைக்கிறது!

எல்லாவற்றிற்கும் இரண்டு முனைகள் உண்டுதானே! காய்கறி வெட்டும் கத்தியால்தானே கொலைகளும் நடக்கின்றன!

சமைக்க உதவும் நெருப்புதானே  'திடீர்த் தீ' மூலம் பல உயிர்களைப் பலி வாங்குகிறது.

மூச்சுமூலம் வாழ வைக்கும் காற்றுதானே தனது "விஸ்வரூபத்தால்" பல நூறு உயிர்களைப் பலி வாங்குகிறது!

எனவே எல்லாவற்றிலும் நன்மை - தீமைகள் இணைந்தே உள்ளன!

ஆனால் இந்தத் தகவல் தொழில் நுட்பம் நமது கையில் உள்ள ஒரே உரிமையை - வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் கொடுமையையும் நிகழ்த்துகிறது.

நமது மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகப்படுத்திய சீரிய சிந்தனை யாளரும், இளம் எழுத்தாளரும், பொறியாளர், மனோ தத்துவமும் படித்துப் பயன்படுத்தும் பயனுறு சமூகச் சிந்தனையாளர், சமூக நலனைப் பாதுகாக்கும் எழுத்துப் போராளியுமாகிய நண்பர் வினோத்குமார் ஆறுமுகம் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து பெரியார் திடலில் சந்தித்து அவர் எழுதிய 'டிஜிட்டல் மாஃபியா - நீங்கள் டிஜிட்டல் உலகில் சோதனை எலிகள்' என்ற 132 பக்கங்கள் கொண்ட ஓர் அற்புதமான நூலைத் தந்தார்.

உடனே படித்தேன். நம்மில் பலரும் கணினி அறிவு உலகத்தைப் பொருத்து வெறும் 'தற்குறிகளே!'

பல வீடுகளில் நமது பேரக் குழந்தைகளும், பேத்திகளும், பேரன்களும் தான் தொலைக்காட்சி  முதல் கணினியை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் 'குமரகுரு' போன்ற ஆசிரியப் பெருமகன்கள்.

அது வயதைப் பொருத்தது அல்ல

அறிவைப் பொருத்தது!

கணினி உலகின் 'தற்குறிகளாகிய' நமக்கு அவர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்; நாம் கற்றுக் கொள்கிறோம்; நல்லதுதானே!

வினோத்குமார் என்ற கணினி ஆசிரியருடைய பாட வகுப்பில் சேர்ந்தேன் கற்றுக் கொண்டு வருகிறேன். நீங்களும் வாரீர்களா?

முதல் அறிமுகம் இதோ:

இந்த நூலிலிருந்து  மேலும் வகுப்பைத் தொடரலாம்.

ஏன் நீங்களேகூட இந்த நூலை வாங்கி வைத்துக் கொண்டு கணினி பற்றிய திடுக்கிடும் அதிர்ச்சியூட்டும் அதிசயத் தகவல்களை அறிந்து பிறருக்குப் பரப்பலாம்.

விலை : ரூபாய் 120.

வீ கேன் புக்ஸ் (We can) (அலுவலகம்), சென்னை

பெரியார் திடலிலும் கிடைக்கும். நாளை மறுநாள் வாங்கலாம்!

(தொடரும்)