எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'டிஜிட்டல் மாபியா' என்ற நூலில் அறிமுகம் என்பதில் தோழர் வினோத்குமார் விளக்குகிறார்.

"2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு மாலை நேரம். இந்தியர்கள் பயன்படுத்தும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இப்படியெல்லாம் கூட நடக்குமா? என அனைவரும் மலைத்துப்போய் நின்றார்கள். பூமியில் இந்தியாவின் எதிர்ப்புறம் உள்ள அமெரிக்காவில் மாலை வேளை. இந்தியர்களைப் போல அமெரிக்க மக்களும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். அமெரிக்கா வின் அதிபர் தேர்தல் முடிவுகள் அப்போது வந்து கொண்டிருந்தன. அமெரிக்காவின் புதிய அதிபராக டோனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தார். இந்தச் செய்தி பரவத் தொடங்கியதும் உலகமே சற்று அதிர்ச்சி யுடன் அமெரிக்காவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

ட்ரம்பின் வெற்றி யாருமே எதிர்பாராதது. அவர் வெற்றியை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கக் காரணம், உலகின் இரண்டாவது ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் ஒரு முடிவுடன்தான் பரப்புரைகள் செய்தார். அவரின் பரப்புரை முழுவதுமே இனவெறுப்பு கருத்துகளைக் கொண்டிருந்தது. முஸ்லிம்களை, மெக்ஸிகர்களை, ரஷ்யாவை, சீனாவை என பட்டியலிட்டுத் திட்டினார். ஜனநாயகவாதிகளை, தாராளவாதிகளை, கம்யுனிஸ்ட் டுகளை என ஒருவரையும் விட்டுவிடாமல் திட்டித் தீர்த்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி க்ளிண்ட்டன் மீது அவதூறுகளை அள்ளி வீசினார். இவ்வளவு வெறுப்பை அதுவரை அமெரிக்க அரசி யலில் யாரும் கண்டதில்லை . அதனால், அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் முடிவுகளும் ஹிலாரிக்கு ஆதரவாகவே இருந்தன. ட்ரம்பை யாரும் பொருட்படுத்தவில்லை.

ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தன. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப் வெற்றிபெற்றார். கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி க்ளிண்ட்டன் தோல்வியடைந்தார். கண்டிப்பாக வெல் லுவார், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையுடன் ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஹிலாரியின் தோல்வி அமெரிக்காவில் இருந்த ஜனநாயகவாதிகளையும், தாராளமயவாதி களையும் நன்றாகக் கிளறிவிட்டது. தோல்விக்கு ஆளுக்கொரு காரணம் அதற்கொரு கோட்பாடு எனக் கிளம்பினார்கள். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அறிவு ஜீவிகள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹிலாரியின் தோல்விக்குக் காரணத்தை அடுக்கிக் கொண்டே சென்றனர். விவாதம் அமெரிக்காவில் மட்டு மல்ல, உலகம் முழுவதும் நடந்தது. ட்ரம்ப் எப்படி வெற்றிபெற்றார் என்ற மர்மத்தின் விடை தேடி அனைவரும் கிளம்பினார்கள்.

அமெரிக்கா முழுவதும் நடந்த விவாதங்கள் மெல்ல ஒரு திசையை நோக்கி நகர்ந்தது. ட்ரம்ப் சும்மா எல்லாம் ஜெயிக்கவில்லை. கணிசமான ஓட்டை அறுவடை செய்திருந்தார். இதனைக் கணக்கில் கொண்டு முதல் குற்றச்சாட்டு ரஷ்யா மீது வைக்கப்பட்டது. கருத்துக் கணிப்புக்கள் ஹிலாரிக்கு ஆதரவாக இருக்க ட்ரம்பிற்கு எப்படி ஓட்டுகள் குவிந்தன. அப்படியென்றால், ட்ரம் புக்கு ஆதரவாக ரஷிய நாட்டைச் சேர்ந்த கணிப்பொறி ஹேக்கர்கள் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளைச் சேமிக் கும் கணிப்பொறிகளை ஹேக் செய்து முடிவுகளை ட்ரம்பிற்கு ஆதரவாக மாற்றியிருக்க வேண்டும். இப்படி யான ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது (ஆனால், இந்தக் குற்றச்சாட்டுப் பின்னால் ஏஜென்சிகளால் ஆதாரப் பூர்வமாக மறுக்கப்பட்டுவிட்டது).

அடுத்து, இன்னொரு சாரார் முன் வைத்த குற்றச் சாட்டு, ட்ரம்ப் பல பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றித் தன் பக்கம் திசைதிருப்பியிருக்கிறார் (பொய் சொல்லாத அரசியல்வாதிகளா?). அப்படி ட்ரம்புக்கு ஆதரவாகப் பொய்யான செய்திகளைக் குவிக்கக் காரணமாக இருந்தது பேஸ்புக் என்னும் சமூக வலைதளம். ஃபேஸ்புக் மீது வைத்த இந்தக் குற்றச்சாட்டு அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தது, பணம் கொடுத்தார், பயமுறுத்தினார் என்பது மாதிரியான காரணங்களை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது இலவசப் பொருட்களைக் கொடுப்பதாக அறிவித்தார் என்றால் கூட நம்பும் படியாக இருந்திருக்கும். ஆனால், சற்றும் தொடர்பில்லாத மக்களின் பொழுதுபோக்கு வலை தளமான ஃபேஸ்புக் அமெரிக்க அதிபரைத் தேர்ந் தெடுக்கக் காரணமாக இருக்கிறதென்றால்... அதை எப்படி எடுத்துக்கொள்வது? நம்ப முடியுமா!

ட்ரம்பின் வெற்றியை விட அதற்குக் காரணமாக ஃபேஸ்புக்கைக் குறிப்பிடும்போது அனைவரின் புருவமும் உயர்ந்தது. இந்தக் குற்றச்சாட்டை ஃபேஸ்புக் மறுக்கவில்லை என்பதுதான் சுவாரஸியம். (நாமும் பொழுதுபோக்குக்காக அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளமான ஃபேஸ்புக் இருப்பதை நினைவில் கொள்க).

ஒரு சில நாட்களில் ட்ரம்ப் தன் சாகசத்தைத் தொடங்க ஃபேஸ்புக் பற்றிய இந்தக் குற்றச்சாட்டை அனைவரும் மறந்துவிட்டார்கள். செய்திகளில் இருந்து இது காணாமல் போய்விட்டது. பல மில்லியன் டாலர் நிறுவனமான ஃபேஸ்புக்கின் தலைவரும், அதை உருவாக்கியவருமான மார்க் ஜுக்கர்பர்க் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால், எல்லாம் சில மாதங்கள்தான்.

சில மாதங்கள் கழித்து...

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம். அமெரிக்காவில் சனிக்கிழமை இரவு நேரம். இன்னும் சில மணி நேரங்களில் ஞாயிறு உதயமாகப் போகிறது.

'தி சன்டே அப்சர்வர்' பத்திரிகையின் தலைப்புச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியாக்கப் போகிறது என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சனிக்கிழமை முடிந்து தனக்கு சனிதோஷம் பிடிக்கும் என்று ஜுக்கர்பர்க்கும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அன்றைய தலைப்புச் செய்தியில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலை உருட்டப்பட்டிருந்தது.

அந்தச் செய்தியின் சுருக்கம் இதுதான்.

(தொடரும்)