எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறிய நாடாக இருந்தாலும் சிங்கப்பூர் நாட்டின் அரசு - மக்கள் நலம் பேணும் சிறப்புக்குரிய ஆட்சியைப் பெற்றுள்ள நாடாகும்.

"கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம்" (Controlled Democracy) என்பதும்கூட வரவேற்க வேண்டிய ஒன்றுதான்!

பொதுவாக ஆட்சிகள் என்பவை 17,18ஆம் நூற் றாண்டுகளில் வெறும் (Police State) சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதுதான் முக்கிய வேலை என்பதாக இருந்தவை.

ஆனால் 19ஆம் நூற்றாண்டு இறுதி - 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்தக் கருத்து, மாற்றத்திற் குள்ளாகியது;  மக்கள் நலம் பேணுவது (Welfare State) அரசின் கடமைகளாக மாறி விட்டன.

இப்போது கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் - இத்தகைய வாக்குறுதியின் தொகுப்புகளாக வெளி வருகின்றன.

லீக்வான்யூ (Leekuan yew) நவீன சிங்கப்பூரின் தந்தை. அவரது மக்கள் செயல் கட்சி (People's Action Party) தான் தொடர்ந்துவெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகின்றது. பலம் பொருந்திய எதிர்க்கட்சிகள் இல்லை - சில தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகள் இருந்த போதிலும்கூட!

மக்கள் தேவை - மனோபாவம் - அறிந்து தூய்மைக்கு முன்னுரிமை தந்து - கையூட்டு (லஞ்சம்), ஊழல் அற்ற ஆட்சியாக சிங்கப்பூர் அரசு தொடர்கிறது.

அமைச்சர்கள் அதிக சம்பளம் பெறும் அரசியல் விற்பன்னர்கள். வெளியில் "கை நீட்ட வேண்டிய அவசி யமில்லாத" வகையில் அதிக ஊதியம் அவர்களுக்கு!

சென்ற ஆண்டு பட்ஜெட்டில் உபரி கண்ட தொகையிலிருந்து குடி மக்களுக்கு 28 ஆயிரம் டாலர் வரை ஆண்டு வருமானத்துடன் சொத்து ஒன்று மட்டும் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 300 டாலர்களும், ஒரு லட்சம் டாலருக்குள் ஆண்டு வருமானத்துடன் சொத்து ஒன்று மட்டும் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 200 டாலர்களும், ஒரு லட்சம் டாலருக்கும் மேல் ஆண்டு வருமானத்துடன் 2 அல்லது கூடுதலாக சொத்துள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 100 டாலரும் அளிக்கப்பட்டுள்ளது. வியப்பிலும் வியப்பு இது!

சுற்றுச்சூழல், புதுப்புது மக்கள் நலத் திட்டங்கள் குடியிருப்பு வசதிகள் குடி மக்களுக்கு, இத்தியாதி... இத்தியாதி...

மாணவ - மாணவிகள் எடையை அங்கே அவ்வப்போது பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்; பெற்றோர்களுக்குத் தகவல் (Optimum)  எவ்வளவு சீரான எடை என்பதை  அறிவித்து அதற்குரிய  ஏற்ற இறக்கம் உட்பட கண் காணிக்கப்பட்டு வரும் நல்ல முறை!

அண்மையில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட Fitness - Fitbiz  உடல் சீராய்வு பற்றி நாம் கையில் கட்டிக் கொண்டிருக்கும் கடிகாரம் நாம் ஒவ்வொரு நாளும் எத்தனை அடிகள் நடந்தோம்; நமது இதயத் துடிப்புப் பதிவுகள் இப்படி பல அம்சங்களை நமது செல் போன்களிலே, அய்.பேட் (I-Pad) இணைத்து அதுவே - நவீன மின்னணுவியல் கடிகாரம் நமது இரத்த அழுத்தம் குறைந்தாலோ, அதிகம் கூடினாலோ எச்சரிக்கை மணி அடிப்பதுபோல டாக்டருக்கு தகவல் போய்ச் சேரும் அளவுக்கு அதுவே செய்கிறது.

ஆப்பிள் கைகடிகாரம் ஈ.சி.ஜி. (ECG) படம் உட்பட எடுத்து டாக்டர்களுக்கு அனுப்பிவிடுகிறது. அவரது கவனத்திற்குச் சென்று விடும். இதுபோல வேறு சில கம்பெனிகளும் செய்துள்ளன.

ஆச்சரியமாக இல்லையா? மிச்சியோ காக்கு (Michio kaku) என்ற (அமெரிக்க - ஜப்பானியர்) அறிவியல் பேராசிரியர்  தான் எழுதிய ஒரு நூலில்  Chip-அய்த் தாங்கள் அணியும் 'டை'யிலோ, அல்லது காலில் உள்ள (Shoes) 'ஷூ'விலோ இணைத்து விட்டால் டாக்டருக்கு நபர்களின் இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் குறைந்தால் கூட தெரிவித்துவிடும். அவரது டாக்டருக்கு அதை இணைத்து விட்டால் என்று கூறினார். அது நடைமுறை சாத்தியமாக கையில் கட்டும் கைக் கடிகாரத்திலேயே பொருத்தப்பட்டு தனி நபர்கள் வாங்கிக் கட்டிக் கொண்டு நடந்தால் - எல்லாம் பதிவாகி, உடல் நலம் பற்றிய முக்கியத் தகவல்களைப் பதிவு செய்து விடும். இப்போது சிங்கப்பூர் அரசு தனது குடிமக்கள்  "தொங்கு சதை", "அமர்வு நாற்காலி - உருளைக்கிழங்கு" போல இருக்கிறார்கள் பலர் என்பதால் - நடைபயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு வாழ ஒவ்வொரு பகுதியில் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம், எடை நிதானம் பற்றிய தகவல்களை பதிவு செய்ய கைகடிகாரம் இலவசமாக குடிமக்களுக்கு அனுப்பி  அவர்களை உற்சாகப் படுத்துகிறது.

சரியான உடல் எடை, நடை பேணுவோரில் சிறந்தவருக்கு இலவசப் பொருள்களை NTUC என்ற தொழிற்சங்கம் நடத்தும் பண்ட விற்பனைச் சாலையில் பெற்றுக் கொள்ள வவுச்சர்களை (Coupons) யும் தந்து ஊக்கப்படுத்துகிறது!

மருத்துவமனைகளில் நோயாளிகள் குறையவும், மக்கள் ஆயுள் நீளவும் நல்ல ஊக்கப்படுத்தும் அருமையான ஏற்பாடு அல்லவா இது!

இங்குள்ள அரசுகள் இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களைத் தரக் கூட வேண்டாம்; 'HIV' இரத்தத்தை கர்ப்பிணிகளுக்கு ஏற்றிடாத அளவுக்குக் கவனமாக இருந்தாலேகூட போதும்; என்னே கொடுமை! எவ்வளவு அலட்சியம்! வேதனையோ வேதனை இது!

'சிங்கப்பூர் சிறிய நாடு' என்ற சமாதானம் எடுபடாது. ஆரோக்கிய வாழ்வு, சுற்றுச்சூழல் தூய்மையை - ஏட்டளவில் பாராட்டி நாட்டளவில் செயல்படுத்து வோமாக.

நாட்டு மக்களின் விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் அடிப்படையானவை என்பதும் முக்கியம் தானே!