எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்புள்ள அம்மா, பாட்டிக்கு,

உங்களால் சீராட்டி சிறப்புடன், கண்டிப்புடன் ஊட்டி வளர்க்கப்பட்டு, "சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பார் செய்கைக்கு நாணிக் கண்ணுறங்கு, நகைத்து நீ கண்ணுறங்கு!" என்று தங்கள் விழி இமையாய் என்னை, எங்களைக் காத்து வளர்த்து ஆளாக்கினீர்கள்.

தங்களின் நூற்றாண்டு தொடங்கும் நாளில் நன்றிக் கண்ணீர், மகிழ்ச்சிக் கண்ணீருடன் எண்ணிப்பார்க்கிறேன்.

எங்களை விட்டு பாழும் உடல்நோய் உங்களைப் பிரித்த போது, அதுவரை அனாதைகள் இல்லை; காரணம் எங்கள் பெயருக்குப் பின்னால் ஈ.வெ.ரா.ம. கலைமணி, அருள்மணி, அன்புமணி என்றெல்லாம் E.V.R.M. என்ற முன்னெழுத்துக்கள் (Intials) எங்களுக்குத் தந்து பெற்ற தாயினும் மேலான உற்ற தாயாக எங்களை நாளொருமேனியும், பொழுதுதொரு வண்ணமும், கவலையுடனும், அதே நேரத்தில் கண்டிப்புடனும் வளர்த்து ஆளாக்கிவிட்டுச் சென்று விட்டீர்!

எங்கள் அண்ணனும், அக்காவும், புலவர் அண்ணனும் தங்காத்தாளும்,  எங்களின் இழப்பை ஈடுசெய்ய முன் வந்து கடமையாற்றி பாசப்பொழிவினை பரிவுடன் காட்டி, எங்களது படிப்பை வளர்த்தனர்.

எங்கள் திறமை, ஆற்றல் பற்றி நாங்களே கூட அறியாத போது அவர்கள் உணர்ந்ததோடு, எங்களுக்கும் உணர்த்தினர்!

நான் "பிளஸ் டூ" நம் கல்வி நிறுவனத்தில் முடித்த வுடன், அண்ணனிடம் சொன்னேன் - அக்காவிடம் கூறினேன். "எனக்கு ஓர் ஆசிரியப் பயிற்சி டிப்ளோமோ பட்டயப் படிப்பில் போட்டு கரையேற்றுங்கள்" என்று.

அவர்களோ "முடியாது, நீ பட்டதாரி - அதுவும் என்ஜினியரிங் பட்டதாரியாக வரவேண்டும்" என்று பிடிவாதமாகக் கூறி, என்னை உலகின் முதல் பெண் பொறியியல் கல்லூரி - வல்லத்தில் தொடங்கிய பெரியார்  மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரியில் சேர்த்து, கணக்கில் சுணக்கம் எனக்கு, என்ஜினியரிங் கஷ்டம் அண்ணா என்று தயங்கியபோது, உனக்கு ஸ்பெஷல் வகுப்பு கணக்கு வாத்தியார் வந்து சொல்லிக்கொடுக்கச் சொல்கிறேன் என்று கூறி, அதன்படி செய்து என்னை நன்றாக B.E பாஸ் செய்ய வைத்தார்கள்.

நானும் ஒத்துழைத்தேன் - முடித்து சம்பளம் பூராவும் அய்யா டிரஸ்ட்டே எனக்குக் கட்டியது!

பாஸ் செய்த பிறகு எனக்குத் திருமண ஏற்பாடு - என்னைப்புரிந்து, கொள்கை உணர்வுக்காக குழந்தைகள் இல்லத்துப் பெண்களையே மணக்க விரும்புகிறேன் என்ற லட்சிய நோக்குக் கொண்ட மானிட நேயர் - சுயமரியாதை வீரரை மணமகனாக்கியதை அக்காவும் தங்காத்தாள் அக்காவும், அண்ணன் விருப்பப்படி அவர்கள் இல்லம் சென்று சம்மதம் பெற்று குடந்தையில் மாநாடு போல - மக்கள் தலைவர் மூப்பனார் முன்னிலையில் அண்ணா - அக்காவால் நடத்தி வைக்கப்பட்டது.

வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் அண்ணன் என்னை விரிவுரையாளராக நியமித்து, வகுப்பெடுக்க வாய்ப்பளித்து, பக்குவப்படுத்தினார்!

மேலும் திருச்சி RECயில் B.E தாண்டி M.E முடித்தேன். வாழ்விணையரும் பெரும் ஒத்துழைப்பு - ஊக்கம் தந்தார். ஒரு பெண் குழந்தை. குடும்பத்தார் அனைவரும் எங்களிடம் பாசம் காட்டியதில் பஞ்சமே இல்லை - குடும்ப உறவு, குருதி உறவு எல்லாம் மிகவும் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தது!

மேலும் நான் குடந்தை பல்கலை- ஒரு பொறியியல் கல்லூரியில் இணைப்பேராசிரியராக உயர்வு பெற்று Ph.d என்ற டாக்டர் பட்டத்திற்கு பதிவு செய்து ஆராய்ச்சிப் பட்ட மேல் நிலைத் தகுதியும், என் பெயருக்குமுன் முனைவர் பட்டமும் பெற்றேன்.

எங்கள் மகள் நன்றாகப் படித்து மாநிலத்தில் முன்னணி மதிப்பெண்கள் பெற்று, இன்று ஆடிட்டிங் படிப்பில் அப்பாவுக்கு உதவியாய் இருக்க ஆயத்தமாகி வருகிறாள்.

தாத்தா, பாட்டி கூட்டங்களுக்கு வரும்போதெல்லாம் சந்திப்போம்; மகிழ்வோம். நான் குடும்பத்தினருடன் மாநாடுகள், விழாக்கள்,  குடந்தை, பாபநாசம், கபிஸ்தலம் பகுதியில் வரும் போதெல்லாம் எங்கள் இல்லம் விழாக்கோலம் - விருந்து உபசரிப்பு பல நூறுபேர்களுக்கு.

எங்களுக்குத்தான் எத்தனை எத்தனை கொள்ளை மகிழ்ச்சி!

எங்கள் அன்பை, மரியாதையை அவர்கள் பெறும்போ தெல்லாம் அவர்கள் வாஞ்சையுடன் எங்கள் உச்சிமோந்து பாராட்டி மகிழ்வதை விட அவர்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி - வேறு என்ன கைமாறு தேவை?

பெரியார் தாத்தாவை, மணிப் பாட்டியை நான் பார்த்ததில்லை - எங்கள் அம்மா அவர்கள் வளர்ப்பில் தான் வளர்ந்து ஆளாகி இன்று என்னை நல்லாசிரியையாய், நல்ல தாயாய் ஆக்கினார். எனக்கும் தாத்தா, பாட்டி அன்பைக் கொட்டி அரவணைத்து வழிகாட்ட இருக்கிறார்களே அது பெரிய வாய்ப்பு அல்லவா?

இந்தக் குடும்பம் ஒரு தோப்பு போலே! இதில் இது போல எத்தனையோ பழமரங்கள் பூத்து, காய்த்து, கனியாகி, பழுத்துத் தொங்கி சிறப்பாக இருக்கிறதே.

அந்த விதை நட்டு நீர் பாய்ச்சி உழவுக்காரருக்கு நூற்றாண்டு விழா என்றால் என்னைப் போன்ற விழுதுகளுக்கு இதை விட வேறு விழா வேண்டுமா? மகிழ்ச்சி கண்ணீருடன், அந்தத் தாத்தாவின், பாட்டியின் கைப்பற்றி குலுக்கி மகிழ என தலைமுறைக்கு வாய்ப்பில்லை. இதோ எங்கள் பாட்டியும், தாத்தாவும் கைப்பிடித்து குலுக்கி மகிழும் நிலையில் அவர்கள்  கைகளில் எனது, எங்களது கண்ணீர்தான் விழுந்து ஈரமாக்கி, அவர்களது ஈரமுள்ள இதயங்களை குளிர்விக்கிறதே அது போதாதா?

இப்படிக்கு

நாகம்மை விடுதியின் விழுதும், விழுதின் விழுதும்!

(அன்னையார் நூற்றாண்டில் இப்படி கடிதம் - கற்பனை என்றாலும் உண்மைகளை -

உணர்வுகளை உள்ளடக்கிய கற்பனைக் கடிதம் - அன்னையார் நூற்றாண்டுத் தொடக்கம் அல்லவா?)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner