

பலமாகக் கைதட்டுதல் என்பது - மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு, நம்மை நலத்துடன் வாழ வைக்க உதவுகிறது என்பது பல பேருக்குத் தெரிய வேண்டிய உண்மையாகும்.
என்ன, ஆசிரியர் வித்தை காட்டு பவர் போல இப்படி எழுதியுள்ளாரே என்று ஏளனப் பார்வையோடு பார்க்காதீர்கள்!
நாம் அறிந்துகொள்ளாத அலட் சியப்படுத்துகிற சிறு செய்திகள்கூட பெரும் பலனைத் தருவதாக அமையும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அக்குப் பிரஷர் என்ற மருத்துவ முறைப்படி, ஜின்-ஷின்-டூ அண்டு சுஜோக் சிஸ்டம் என்ற முறைகள் - மாற்று மருத்துவ முறைகளாக (Alternate Medicine) கருதப்படுபவைகள்.
பலமாகக் கைகளைத் தட்டும்போது ஏற்படும் அழுத்தம் (Pressure points) நமது உள்ளங்கைகளின் மூலம் உடல் நலத்தைப் பெருக்குகிறது!
பொதுக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், திருமண நிகழ்வுகள் - இவற்றில் அமர்ந்து பேச்சைக் கேட்போர் பலர் கைகளைத் தட்டுவதற்குக் கூட முடியாத சோம்பேறிகளாகவே உள்ளார் கள்; இதில் போலிக் கவுரவம் வேறு புகுந்துவிடுகிறது! ஏதோ கை தட்டினால் இவர்களை தரம் தாழ்ந்தவர்களாகக் கருதிவிடுவார்களோ என்று தாங்களே ஒரு கட்டுக் கற்பனை வட்டத்தை மனதிற்குள் வரைந்து கொண்டு அந்தச் சிறையில் சிக்கி விடுதலையாக மறுக்கும் விதண்டாவாத வீணர்கள்!
மகிழ்ச்சி, உற்சாகம், பேசுபவருக்கோ, பாடுபவருக்கோ, நடிப்பவருக்கோ ஏற்படுவ தற்காகத்தான் கைதட்டவேண்டும் என்பது மாறி, இப்போது வரும் மருத்துவ நிபுணர்கள் தரும் ஆய்வு மூலம் - கைதட்டுபவர்களுக்கு மிகப் பெரிய லாபம் - உடல் நலத்திற்குப் பயன்படுகிறது என்பது புதுக் கருத்தாகும். இதன் பிற காவது நமது மக்கள் கலகலப்பாகக் கைதட்டி சுவைக்க வேண்டியவைகளை, மன ஒதுக்கீடு ஏதும் இன்றி தாராளமாய், ஏராளமாய், கைதட்டி மகிழ்ந்து உடல் நலம் பெருக்கும் அரிய வாய்ப்பை நழுவவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
பலமாகக் கைகளை இணைத்துத் தட்டும்போது அது ஏற்படுத்தும் பலமான ஒலிஅலைகள் சூழ்நிலையையே கல கலப்பாக ஆக்குகிறது (அரங்கத்தில் உட்கார்ந்து தூங்குகிறவர்களைக் கூட எழுப்பிவிடும் அலாரம் மணி ஓசையாகவும் ஆகிறதே!) நமது இரத்த செல்களை (Blood Cells) பலப்படுத்தி, நமது உடலின் நோய்த் தடுப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது!
கை தட்டும்போது கூட ஏதோ சவுத்துப் போன மாதிரி பெயருக் குக் கைதட்டிவிட்டு கணக்கை எண்ணக் கூடாது. மருத்துவர்கள் கூற்றுப்படி.
வலது கையின் நான்கு விரல்களை இடது கையின் அடிப் புறம் ரேகைப் பகுதியோடு இணைத்து, கைதட்டி, அதன் மூலம் எழுப்பும் ஒலி ஒரே சீராக, கேட்பதற்கே ரம்மியமாக இருப்பதைப் போல கை தட்டினால், அவை கலகலப்பாவதோடு, உடல் நலம் பெருக்க அங்கேயே ஒரு உடற்பயிற்சியை நாம் செய்துவிட்ட மன மகிழ்ச்சி நமக்கு ஏற்படுமே!
செரிமானக் கோளாறு உடையவர்கள், இம்மாதிரி கைதட்டுதலை நன்கு பழக்கி, வாடிக்கையாகவும் வாய்ப்பாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். முதுகுத் தண்டு வட வலி, ரொமாட்டிசம் என்ற வாதம் உள்ளவர்கள், முதுகு வலியால் அவதியுறுவோர், சுமார் 10 மணித் துளிகள் நாள் தவறாமல் கைகளைத் தட்டித் தட்டிப் பழகிடுவது நல்ல உடற்பயிற்சியாகும்! ஒரு கையில் உள்ள விரல்களை, மறுகை விரல்களோடும் உள்ளங் கைகளுடனும் இணைத்து ஓசை எழுப்பும் அளவுக்குக் கை தட்டவேண்டும்.
லோ பிளட் பிரஷர் (Low B.P.) என்ற நோய் உள்ளவர்களுக்கும் கூட இந்த கைதட்டல் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
நின்று கைகளைத் தட்டும்போது நேரே நில்லுங்கள். கடிகார ஓட்டத்தைப் போல கைகளை இணைத்து, சுற்றிச் சுற்றி, ஒரு வட்டம் வரைவது போல கைகளைத் தட்டுங்கள். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக அமையும்; நுரையீரல், இருதயம் - சீரான ரத்த ஓட்டம் மூலம் நலம் பெற வாய்ப்புள்ளது!
எங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கைதட்டல் ஒரு வகையான பேட்டண்ட் போன்ற விசித்திர, தனித் தன்மை வாய்ந்த கைதட்டல்!
அது மட்டுமா? துளைத்து சலிப் படையச் செய்யும் - மக்கள் மொழியில் போர் அடிக்கும் - பேச்சாளரை பேச்சை முடித்து உட்கார வைக்க இதை விடச் சிறந்த உத்தி வேறு உண்டா? (ஆனால், ஒரு எச்சரிக்கை - சில மேடைகளில் அப்பாவி போர் பேச்சாளர்கள் அதை ஏதோ பெரிய கூடியுள்ள மக்களின் பாராட்டு - வரவேற்பு என்று தவறாகப் புரிந்து கொண்டு, மேலும் ஒரு அரை மணி நேரம் பேச ஆரம்பித்துவிடும் வினோதங் களும், விபரீதங்களும் கூட ஏற்படுவது உண்டு).
இது போலவே, கலகலவென்று சிரித்து மகிழ்தல் உடலுக்குப் புது உற் சாகத்தை, மனதிற்கு மகிழ்ச்சியைப் பெருக்கித் தரும் மாமருந்து. அதுபற்றி நாளை எழுதுவோம்.
(டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வந்த உடல் நலக் குறிப்பினைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா)