ஆசிரியர் அறிக்கை

 

 

சேலத்திற்கான புறவழிச்சாலை அமைப்பை எதிர்த்து வழிநடைப் பிரச்சாரம் செய்ய, திருவண்ணா மலையிலிருந்து நேற்று (1.8.2018) துவங்கி பிரச்சாரம் செய்வதை ஏன் தமிழக காவல்துறையினர் தடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களையும் அவருடன் சென்ற சுமார் 500 தோழர்களையும் கைது செய்தது. ஜனநாயக நாட்டின் கருத்துரிமை, பேச்சுரிமை, கூடும் உரிமைகள் ஆகிய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற செயலாகும்.

வன்முறைகளில் ஈடுபட, அவர்கள் இயக்கம் நடத்தவில்லை; குமுறும் ஏழை, எளிய விவசாயிகள், உழவர்களின் உரிமைக் குரலாய் கிளம்பியுள்ளனர்.

இதனை ஈர நெஞ்சத்தோடு தமிழக அரசு அணுக வேண்டும்; மக்கள் விரும்பாத, மக்கள் எதிர்க்கின்ற திட்டங்கள் ஒரு போதும் "மக்கள் நலத் திட்டங்கள்" ஆகா!

எனவே மக்களின் ஆதரவினை - ஒப்புதலைப் பெற்று மக்கள் நலத் திட்டங்களில் அரசுகள் ஈடுபடுதலே ஜனநாயக மாண்பினைக் காப்பதாகும்.

சுமார் 200 கோடிக்கு மேல் மக்கள் வரிப் பணம் செலவில் சேது சமுத்திர கால்வாய்த் திட்டம், சென்னை - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், கட்டிய தூண்கள் துருப்பிடிக்கிறதே என்று எண்ணி கவலை கொள்ளும் வண்ணம்  போன்றவைகளை முடிக்க தமிழக அரசு, மத்திய அரசினை வற்புறுத்தினால் தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் மேலும் சிறப்படையும்  அதில் தமிழக அரசும் முதல்வரும் கவனம் செலுத்துவது அவசர அவசியம்.

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

2.8.2018

‘க.ச.' அய்யா என்று அந்தப் பகுதியில் மிகுந்த அன்போடும், மதிப்போடும் அனைவராலும் அழைக்கப்படும் பொத்தனூர் மானமிகு க.சண்முகம் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.

திருச்சி நேஷனல் கல்லூரியில் படித்த மாணவர் பருவந்தொட்டு, திராவிடர் கழகக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் தொடங்கி இன்றுவரை நூலிழை பிறழாமல் கொள்கைத் தீவிரத்துடனும், கட்டுப்பாட் டுடனும், கண்ணியத்துடனும் பண்பாட்டின் பெட்டகமாக அடக்கத்தின் உருவமாக நம்மிடையே அவர் வாழ்ந்து வருகிறார் என்பது அவருக்கு மட்டுமல்ல; நமக்கும், இயக்கத்திற்கும் பெருமையாகும்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தலைவராகவும், மண்டலத் தலைவராகவும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் (தந்தை பெரியார் காலத்திலேயே), அதன் துணைத் தலைவராகவும், தற்போது அதன் தலைவராகவும் இருக்கக் கூடிய கொள்கைச் சீலர் ஆவார்.

சேலம் மாவட்டத் தலைவராக இருந்து கழகம் நடத்திய பேராட்டங்களில் எல்லாம் புன்னகை முகத்தோடு பங்கு கொண்டு சிறைப்பட்டவர்.

‘மிசா'வில் சிறைப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தவர்.

அவருடைய பொதுவாழ்வு என்பது திறந்த புத்தகம் - கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மதிக்கத் தக்க பண்பாளர்.

அவரின் தனிவாழ்வுக்கும், பொதுவாழ்வுக்கும் உற்ற துணைவராக இருந்தவர் அவரது துணைவியார் மறைந்த திருமதி சுந்தரம்பாள் அம்மையார் ஆவார். இந்த நேரத்தில் அவரையும் நினைவு கூர்வது அவசியமாகும்.

இவர் தந்தை பெரியார் வாழ்ந்த வயதுவரை வாழ விரும்பினார் - அதனைச் சாதித்தும் முடித்துள்ளார்! மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் நூற்றாண்டும் கண்டு இயக்கத்திற்கும், பொதுத் தொண்டுக்கும் பயன்படவேண்டும் அதற்கு நல்ல உடல் நலத்துடன் அவர் நீடு வாழ வேண்டும் என்பதே நமது அவா!

கடவுள் மறுப்பாளர்கள் பலரும் இத்தகைய 90 ஆண்டுகளைத் தாண்டி 100 ஆண்டு சதம் அடித்தவர்கள் உள்பட விரைவில் ‘‘கழகப் பாராட்டு விழா'' ஒன்றை சென்னையில் சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.

96 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்குக் கழகத்தின் சார்பில் அன்பு நிறைந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

2.7.2018

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிறிவி) நாளேடான 'தீக்கதிர்' 56ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு 84ஆம் ஆண்டில் உள்ள 'விடுதலை' நாளேடு  வாழ்த்துகிறது.

கொள்கை ஏடுகள் - அதிலும் நாளேடு நடத்துவது சறுக்குப் பாறையில் ஏறும் பணி; எதிர் நீச்சல் பணியே!

லட்சியங்களைப் பரப்பும் போது லட்சங்களை எதிர்பார்க்க முடியாது.

நமது கொள்கை நாளேடுகளான 'முரசொலி' 'தீக்கதிர்'; இப்போது வார ஏடான, 'ஜனசக்தி' போன்றவைகளை பொது மக்கள் வாங்கிப் படித்தால், அவர்களின் அறியாமை இருள்போய், பொது அறிவும், சமூகநீதி பற்றியும், வருண - வர்க்கப் போராட்ட வரலாறும், பின்னணியும் புரியும்.

இந்த அறிவாயுதங்கள் இன்றைய இருள்சூழ்ந்த கால கட்டத்தில் மிகவும் தேவை.

வாழ்க  பணி - வெல்க, வெல்கவே!

- கி. வீரமணி

ஆசிரியர்

'விடுதலை'

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தமிழர் தலைவர் கருத்து

சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றும், அதில் தலையிட முடியாது என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் கூறியிருக்கிறார்.

மற்றொரு நீதிபதி ஜஸ்டிஸ் சுந்தர் சபாநாயகரின் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

மூன்றாவது நீதிபதியின் முடிவே இறுதி யானது என்பது சட்டப்படி உள்ள நிலை.

ஜனநாயகம் தனது பயணத்தில் பாதி சென்றுள்ளது; அடுத்து எப்படியோ என்பதுதான் யதார்த்தம்.

தமிழ்நாட்டில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிழைக்குமா - பிழைக்காதா என்பது பிறகே தெரியும் - விரிவான அறிக்கை பிறகு.

 

- கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

14.6.2018

கருத்து சுதந்திரம் - ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதா?

தொலைக்காட்சி விவாதத்தில்  ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர்  தாக்குதல் நடத்துவதா?

கோவையில் 8.6.2018 அன்று 'புதிய தலைமுறை'யின் சார்பில் நடைபெற்ற  கோவை வட்ட மேசை தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற திரைக் கலைஞர் அமீர்  மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு ஆகியோர்மீது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதற்கு திராவிடர் கழகத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் செய்தியாளர்மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஊடக கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கின்ற எதேச்சதிகாரப் போக்கு எனவும்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் இன்று (10.6.2018) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் "புதிய தலைமுறை" தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சிக்காக அதன்மீது  வழக்கு, அமீர் போன்ற கலைஞர்கள்மீதும் தமிழக அரசு வழக்குகளைப் போட்டிருப்பது ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கின்ற எதேச்சதிகாரப் போக்காகும்.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கக் கூடிய அளவிற்கு அதீதமாகச் சென்றுள்ள நிலையை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. கூட்டத்தில் பார்வையாளர்களாக வந்து கலவரம் செய்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் மீது எந்த வழக்கும் இல்லாததும், விவாதத்தில் பங்கேற்றவர்கள்மீதே வழக்குகளைப் போட்டிருப்பது என்பதும்  அடித்தவனை விட்டு விட்டு, அடிபட்டவன் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் கொடுஞ் செயலாகும். தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையே நிலவுகிறது. இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

10.6.2018

Banner
Banner