ஆசிரியர் அறிக்கை

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் தலை மாணாக்கராகிய அறிஞர் அண்ணாவின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள் (15.9.2017) இன்று!

இந்தப் பிறந்த நாளில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கலாம்; அண்ணா வாழ்க என்று முழக்கமிடலாம், இவை தேவைதான்!

அதேநேரத்தில், இவை வெறும் சடங்காக ஆகாமல், அண்ணாவின் சிந்தனைகளை, கொள்கைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அந்தக் கொள்கையை நாட்டு மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்.

அண்ணா அவர்கள் முதலமைச்சராகக் குறைந்த கால அளவில்தான் இருந்தார். அந்த மூன்று ஆண்டுகாலத்தில், மூன்று முத்திரைச் சாதனைகள்.

1. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல்

2. தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம்

3. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை - இந்திக்கு இங்கு இடமில்லை என்ற நிலைப்பாடு.

நான்காவதாக அரசு அலுவலகங்களில் எவ்வித மதச் சின்னங்கள், வழிபாட்டு உருவங்கள், படங்கள் இருக்கக் கூடாது. அதற்குப் பெயர்தான் அரசின் மதச்சார்பின்மைக்குப் பொருள்.

‘அண்ணா வாழ்க’ என்று சொல்லும் எவரும் அண்ணா வின் இந்த கொள்கை உரைக் கல்லில் உரசிப் பார்க்கட்டும்!

குறிப்பாக, அண்ணா பெயரில் கட்சி நடத்தும், ஆட்சி நடத்துவோர் படத்துக்கு மாலை போடுவதோடு - அவர் தந்த பாடத்தையும் கடைபிடிக்கவேண்டும்.

திராவிட இயக்கக் கொள்கைகளுக்குச் சவால்கள் எழுந்து நிற்கும் இந்தக் காலகட்டத்தில் அண்ணாவை - வெறும் படமாகப் பார்க்காமல், பாடமாகப் பார்க்கட்டும்!

வாழ்க தந்தை பெரியார்!

வாழ்க அறிஞர் அண்ணா!

 

 

கி.வீரமணி

தலைவர்,     திராவிடர் கழகம்.

சென்னை
15.9.2017

 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரகசிய செயல் திட்டங்களில் ஒன்று - சிறு இளைஞர்கள், மாணவர்களைப் பிடித்து “யோகா” உடற்பயிற்சி என்ற போர்வையில் அவர்களது மூளைக்குள் காவிச்சாயத்தை ஏற்றுவது என்பதாகும்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், ATCH THEM YOUNG என்றே ஒரு இயக்கத்தைத் தங்களது ‘ஷாகா’ மற்றும் முகாம்கள் மூலம் ஒரு வேலைத்திட்டமாக வைத்தே களத்தில் இறங்கியுள்ளனர்!

மதுபோதை, ஜாதி போதையை விட சிறு பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைப் பாய்ச்சும் இம்முயற்சியின் ஒரு பகுதியாக, நேரிடையாக கால் ஊன்ற முடியாத பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எச்.ராஜா என்ற ஒரு பண்பற்ற அரசியல் அநாகரிகச் சொற்களை உதிர்த்தே “பெரிய விளம்பரவாதியாகி” விட நப்பாசைக் கொண்டுள்ள ஒருவர் - கல்வியை காவிமயமாக்க ஸ்கவுட் (SCOUT) என்ற மாணவ தொண்டு அமைப்பான சாரணர் இயக்கத்திற்குள் நுழைந்து, அதனைக் கைப்பற்றிட, தமிழக அரசு - கல்வித்துறை அமைச்சு மூலம், தலைமைக்குப் போட்டியிட ஏற்பாடாகியுள்ளது. தமிழக அரசு கல்வி அதிகாரிகளை அச்சுறுத்தி வாக்களிக்க கட்டாயப்படுத்துவது எவ்வகையில் நியாயம்?

இந்த திரைமறைவு நிகழ்ச்சியை உரிய நேரத்தில் அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது சரியான நேர சரியான அறிக்கையை வரவேற்கிறோம்.

அரசியல் சார்பற்ற, ஓய்வு பெற்ற மேனாள் கல்லூரி கல்வி இயக்குநர் திரு. மாரி அவர்களை வெற்றி பெறச் செய்து, கல்வியில் காவிகளின் படையெடுப்பைத் தடுத்திட அஞ்சாது, துஞ்சாது வாக்களிக்க வேண்டுகிறோம்.

இது ஒரு ஆரிய - திராவிடப்போர்! சூழ்ச்சிகள் வென்று விடாமல் உறுதியுடன் சாரணர் இயக்கத்தில் சாயமேற்படாமல் காப்பாற்ற வேண்டியது அனைவரது கடமையாகும்.

கி.வீரமணி
தலைவர்,        திராவிடர் கழகம்


சென்னை
12-9-2017

இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ‘புளூவேல்’ விளையாட்டையும், ரம்மி சூதாட்டத்தையும் தடை செய்ய வேண்டும்என்று மத்திய மாநில அரசுகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நீலத் திமிங்கிலம் (புளூவேல்) என்பது ஒரு ஆன்லைன் தற்கொலை விளையாட்டாகும், இதில் பங்கேற்பவர்கள் 50 நாட்களுக்கு பல சவாலான சவால்களை முடிக்க வேண்டும்.  50 நாட்களும்  விளையாடுவோருக்கு கடினமான சவால்கள் வழங்கப்படும். திகில் நிறைந்த திரைப்படங்கள், அதிகாலையில் உறக்கத்தில் இருந்து எழுவது, அவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பல்வேறு சவால்கள் மற்றும் கைகளில் புளூ வேல் என கிழித்துக் கொள்வது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.  ஒவ்வொரு சவாலை முடிக்கும் வரை விளையாட்டின் படைப்பாளர்களுக்கு ஒளிப்பட ஆதாரங்களை (றிலீஷீtஷீs) அனுப்புமாறு கேட்கப்படுகிறார்கள். அவர்களிடம்  அந்த ஒளிப்படங்களை ஆதாரமாக அனுப்புமாறு கேட்கிறார்கள் அல்லது அச்சுறுத்தல்களை அனுப்புவார்கள்.
புளூ வேல் இறுதி சவால் போட்டியாளர் தற்கொலை செய்து  கொண்டு உயிரிழக்க வேண்டும்.

அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று, அதற்கான வழிகாட்டுதலை அவ்விளையாட்டின் ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்துவதன்பேரில் சிறுவர்கள் உயிரிழக்கின்றனர்.

மதுரையில் 19 வயதான ஜெ.விக்னேஸ்வரன் என்னும் கல்லூரி மாணவர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

ருசியாவில் உருவாக்கப்பட்ட இந்தக் கேடு கெட்ட விளையாட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரியது.

மதுரைக்கிளை உயர்நீதிமன்றம், தானே முன்வந்து இந்த வழக்கை எடுத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது.

இதே போன்ற இணையதள விளையாட்டுகள் ஒருபுறம், ரம்மி சர்க்கிள்.காம் என்ற பெயரில் சூதாட்டம் நடக்கிறது. வெளிப்படையாக இந்த சூதாட்டம் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது.

அறிவியல் சாதனங்களை விஞ்ஞான வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர அழிவுக்கும், சூதாட்டத்திற்கும், அறிவை நாசப்படுத்துவதற்கும் பயன்பட அனுமதிக்கப்படக்கூடாது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக இவற்றைத் தடை செய்ய வேண்டும். இந்த வகையில் உயர்நீதிமன்ற தீர்ப்பும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.சென்னை     தலைவர்
3-9-2017       திராவிடர் கழகம்

90 ஆண்டு காணும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், வேலூர் மாவட்டத்தில் திராவிடர் கழகம் தழைத்தோங்க ஒல்லும் வகையெல்லாம் அயராது பாடுபட்டவர், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர், பல கல்வி நிறுவனங்களை நடத்தும் குழுவில் அங்கம் வகிப்பவர், ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் (நவம்பர் 6) சென்னையில் உள்ள பெரியார் திடல் - தலைமையிடத்துக்கு வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அய்யா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து,  கழகத் தலைவரைச் சந்தித்து, வாழ்த்துப் பெற்று கழக நிதியைத் தந்த தாராள உள்ளத்திற்குச் சொந்தக்காரர், செய்யாறு வட்டாரத்திலும், அம்மாவட்டத்திலும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் மத்தியிலே பொது மரியாதையுடையவராக ஒளி வீசியவர், கழகத் தூணாக விளங்கி, தாடி அருணாசலம் என்று அன்பொழுக அழைக்கப்பட்டவர், மண்டலத் தலைவர், மாவட்டத் தலைவர் என்று கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர், கழகப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்; இன்று  (28.8.2017) விடியற்காலை மறைவுற்றார் என்பதை அறிந்து  வருந்துகிறோம்.

ஏழ்மையில் இருந்து தமது அயரா உழைப்பால் செல்வந்தர் ஆனவர். "நான் அதிகம் படிக்கவில்லை, என்றாலும் அய்யா பெரியார் கொடுத்த பகுத்தறிவு, தன்னம்பிக்கை, வாழ்க்கை அனுபவங்கள் எல்லாம் சேர்ந்து என்னைக் கை தூக்கிவிட்டன" என்று எப்பொழுதும் கூறக் கூடியவர்; அவர் இன்று சுயமரியாதைச் சுடரொளியாகிவிட்டார்.

அவருக்கு  மூன்று மகன்கள், நான்கு மகள்கள். அவரது மகன் அ. இளங்கோவன்தான் செய்யாறு மாவட்டக் கழகத்தின் இன்றைய தலைவர். தனக்குப் பின்னாலும் கழகப் பணி தமது குடும்பத்தின் சார்பில் தொடரப்பட வேண்டும் என்ற அவரின் கொள்கை உள்ளத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். தனது இணையர் அமிர்தம் அம்மையாருடன் தமிழ்நாட்டுக்குள் மட்டுமல்ல; டில்லியில் கழக நிகழ்ச்சி என்றாலும் தவறாது வரக் கூடிய கழகக் குடும்பம் அவருடையது.

அவரின் அரும்பெரும் இயக்கத் தொண்டினை நினைவு கூர்ந்து, அந்தப் பெரு மகனாருக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளை காலை, நான் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்துகிறேன்.

அவரது பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கி.வீரமணி
தலைவர்,      திராவிடர் கழகம்


தஞ்சை  
28.8.2017

நீட்: மத்திய அரசின் நடவடிக்கை நம்பவைத்துக் கழுத்தறுப்பு

மாநில அரசு இனியும் தலையாட்டிப் பொம்மைதானா?

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய கண்டன அறிக்கை

“தாமரை இலை தண்ணீர் போல”  தமிழ்நாட்டின் ஆட்சி நிலை!

சென்னை, ஆக. 23- நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று நம்பவைத்து மத்திய பிஜேபி அரசு கழுத்தை அறுத்துள்ளது; தமிழக அரசு இனியும் தலையாட்டிப் பொம்மையாகத் தொடரப் போகிறதா என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

நம்ப வைத்துக் கழுத்து அறுப்பது என்ற வழக்கு நம் நாட்டில் உண்டு. இதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானது - தமிழ்நாட்டுக்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற வழக்கில் மத்திய பிஜேபி அரசு நடந்துகொண்டதாகும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், ஓர் அவசர சட்டம் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஒப்புதல் தர மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  சொன்னார்.  அதனை வழிமொழியும் வகையில் மற்றொரு தமிழக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கூறினார். தமிழ்நாடு அரசு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய நிலையில், மத்திய அரசின் கடமை என்ன? அந்த சட்டத்திற்கு அங்கீகாரம் அளிப்பது தானே சரியானது - அறிவு நாணயம் கூட!

17க்கும் 22க்கும் இடையில் நடந்தது என்ன?

அவசர சட்டத்தில் மேலும் பல தகவல்கள்  தேவை என்று மத்திய அரசு சொன்ன நிலையில் அதனை நம்பி தேவையான தகவல்களையும் தந்தது தமிழ்நாடு அரசு.

கடந்த 17ஆம் தேதி தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் 5 நாள்களுக்குள் கருத்தை மாற்றிக் கொண்டதன் மர்மம் என்ன? பிஜேபி தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது ஏன்? ஏன்?

கடந்த 17ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபோது கூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை  என்று மத்திய அரசு சார்பில் சொல்லப்படவில்லை. இவ்வழக்கில் மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். நீட்' அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய - மாநில அரசுகள் வாதாடின.சட்டச் சிக்கல் ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன சொன்னார்கள்?

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் என இரு தரப்பினரும் பாதிப்படையாத வகையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் செவ்வாயன்று அந்தத் திட்டத்தோடு வருமாறும் உத்தரவிட்டனர்.

அதன்படி ஒரு திட்டம் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டதா? உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அது குறித்து கேள்வி எழுப்பாதது அதைவிட ஆச்சரியமும் அதிசயமும் ஆகும்.

இதைப்பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் பேசாமல் வழக்கு விசாரணை தொடங்கிய முதல் நிலையிலேயே, மத்திய அரசின் சார்பில் ஏற்கனவே ஒப்புக்கொண்டவைகளுக்கு முற்றிலும் எதிராக, அதிர்ச்சியூட்டும் வகையில்  தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் இல்லை என்று சொன்ன அந்த மாத்திரத்திலேயே அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்கு முடிக்கப்பட்டது அசாதாரணமானது அதிர்ச்சிக்குரியது.

எதிர் மனுதாரர் வழக்குரைஞருக்கு ஒரு வாய்ப்பும் அளிக்கப்படாமல்  வாயடைத்ததை எல்லாம் பார்க்கும் பொழுது சமூகநீதி என்றாலே இந்தக் காலகட்டத்தில் அதிகாரம் படைத்தவர்களுக்கு உகந்ததாக இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழ்நாடு அரசு தலையாட்டி பொம்மையாகத்தான் இருக்கப் போகிறதா?

தமிழ்நாடு அரசு தன் இயலாமையை ஒப்புக் கொள்கிறதா? இன்னும் எத்தனை நாளைக்குத் தலையாட்டிப் பொம்மையாக இருக்கப் போகிறது? சமூகநீதியில் தவறிழைத்தவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்பித்த வரலாறை மறக்க வேண்டாம்.

ஒரு மாநிலத்திற்கு விதிவிலக்குக் கேட்டால் மற்ற மாநிலங்களும் கேட்பார்களே என்ற கேள்வியில் அர்த்தம் இருக்கிறதா? மற்ற மாநிலங்கள் கேட்காததாலேயே தமிழ்நாடு அரசு கேட்கக்கூடாது என்பது சட்டப்படியான கேள்வியா?

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 50 சதவிகிதத்துக்கு மேல் 69 சதவீத இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்ட ஒன்பதாவது அட்டவணை பாதுகாப்போடு வலிமையாக இருக்கிறதே, அத்தகைய ஒரு மாநிலம் சமூகநீதியிலே இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்து உரத்த குரலில் ஒலிக்கிறது என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றம்  மற்றும் மத்திய அரசும் கூறிய கருத்தையே ஒப்புக் கொள்வதாக இருந்தால் கடந்த ஆண்டு இதே பிரச்சினையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டதே அது எப்படி?

கடந்த ஆண்டு சொல்லப்பட்ட அதே காரணம் இப்பொழுதும் தொடர்கிறதா இல்லையா? நீட் வினாத்தாள்கள்  மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடானது தவறு, சமநீதியாகாது என்று ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம் அதன் அடிப்படையில் நீட்தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்திருக்க வேண்டாமா?

உச்சநீதிமன்றம் 2013இல் கூறியது என்ன?

இதே உச்சநீதிமன்றம் 2013இல் என்ன தீர்ப்பு வழங்கியது?

தலைமை நீதிபதி அல்தாமஸ்கபீர் தலைமையில் நீதிபதி விக்ரமஜித் சென் மற்றும் ஏ.ஆர்.தவே அடங்கிய அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் என்ன தீர்ப்புக் கூறினார்கள்? இந்திய அரசமைப்புச் சட்டம் 19,25,26,29,30 பிரிவுகளின்படி இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு தேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை என்று சொல்லப்படவில்லையா?

2013 இல் ஒரு சட்டம் 2017 இல் மாறான சட்டமா?

சமூகநீதி மறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இந்தக் கேள்வி எழுந்து நிற்கிறது. ஆனால் ஒன்று! சமூகநீதிக்கு எதிராக எந்த அதிகாரபீடம் நிமிர்ந்து நின்றாலும் வீதியில் திரளக்கூடிய பெரும்பான்மை மக்களுக்கான சமூகநீதியே வென்று தீரும்!

இதற்கு முழுக் காரணமான இன்றைய அதிமுக எடப்பாடி அரசும், மத்திய அரசும் கூட்டாக இப்படி நமது மருத்துவக் கல்லூரிகளில் மற்ற மாநிலத்தவருக்கு கதவுகளை அகலமாகத் திறந்து, தமிழகப் பிள்ளைகளின் வயிற்றில் அடிக்கலாமா? இதற்குப் பிறகும் பாஜக ஆட்சியை பாராட்டுவதா? இவர்களுக்கு எதிர்காலத்தில் தக்க நேரத்தில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்பது உறுதி!

தீர்ப்புகள் திருத்தப்படும்

இந்த அடிப்படையில் எத்தனையோ சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன, தீர்ப்புகளும் திருத்தப்பட்டுள்ளன! ‘நீட்’ எதிர்ப்பிலும் வெற்றி பெறுவோம் என்பதில் அய்யமில்லை.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் வலியுறுத்திய சமூக ஜனநாயகம் என்பதற்கும் அர்த்தம் அதுவாகத்தான் இருக்க முடியும்.

 

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்

சென்னை
23.8.2017   

Banner
Banner