ஆசிரியர் அறிக்கை

 

சென்னைப் பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்புக் கூட்டம் - நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரும் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இரு மசோதாக்களுக்கும் குடியரசு தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 12ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பினைக் கொடுத்துள்ளது.

முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் பெருந்திரளாகக் கூட வேண்டும்.

இதற்கான முயற்சிகளில் கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள் உடனடியாக ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின், இயக் கங்களின் மாணவர், இளைஞர் அமைப்புகளின் பொறுப்பாளர்களை  மற்றும் அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்க அதிக முக்கியம் கொடுத்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்று முதல் அதற்கான பணிகளில் ஈடுபடுவீர்! ஈடுபடுவீர்!!

 

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

ஒருங்கிணைப்பாளர்,

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு

சென்னை
5.7.2017

குறிப்பு:            காவல் நிலையத்துக்கு

உடனே விண்ணப்பிக்கவும்

முதுநிலைப் பட்டம் படிக்க தேர்வு செய்யப்பட்ட அரசு மருத்துவர்களின் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அரசு துறையில் பணியாற்றும் டாக்டர் கள் முதுநிலைப் பட்டப் படிப்புப் பெற தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருந்து வந்தது. மருத்துவக் கவுன்சிலின் தேவையற்ற தலையீட்டால் அது ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் மருத்து வர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவிகித மதிப்பெண்கள் வழங்கும் ஆணை ஒன்றினை  தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணோடு இந்தக் கூடுதல் மதிப்பெண்ணும் சேர்க்கப் பட்டு, முதுகலைப் படிப்புக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 1000 அரசு மருத்துவர்கள் முதுநிலைப் படிப்பில் சேர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்தப் பட்டியலை ரத்து செய்துவிட்டது. இது ஒரு பேரிடி போன்ற நிலையாகும்.

ஏற்கெனவே அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, முதுநிலைப் படிப்பில் சேர்ந்த பிறகு நீதிமன்றத்திலிருந்து இப்படி ஒரு உத்தரவா?

சமூகநீதியின்மீதுசரமாரியான தாக்கு தலை மத்திய அரசு தொடுத்துக் கொண்டுள்ளது - நீதிமன்றங்களும் அதற்குத் துணை போவது பெரும் வேதனையாகும்.

இந்தநிலைகண்டிக்கத்தக்கது! மறுபடியும் டாக்டர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலையை உருவாக்குவது விரும்பத்தக்கதல்ல. சமூகநீதிதான் நீதிகளில் உயர்ந்தது என்பது மட்டுமல்ல; அரசியல் சட்டத்தின் பீடிகையில் முன்னுரிமை  ஆகும்!

தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து தமிழ்நாட்டில் கட்டிக் காக்கப்பட்டு வந்த சமூகநீதியைக் காப்பதில் கவனம் செலுத்துமாறுகேட்டுக்கொள்கிறோம்.சட்ட மன்றம் நடந்துகொண்டுள்ளதால், இதில் முக்கிய அறிவிப்பையும், எதிர்பார்க்கிறோம்!

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.

 

17.6.2017
சென்னை

ம.தி.மு.க. பொதுச் செயலாளர்  சகோதரர் வைகோ அவர்கள் முறைப்படி விசா பெற்று, மலேசியாவில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, கோலாலம்பூர் விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுக்கப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சிக்குரியது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்றும், மலேசிய அரசுக்கு ஆபத்தாளர் பட்டியலில் அவர் பெயர் இருக்கிறது என்றும் காரணம் சொல்லப்பட்டுள்ளது. மேலும்  வைகோ அவர்கள் அங்கு நடத்தப்பட்ட விதம் கண்ணியமற்றது, கண்டிக்கத்தக்கது!  இவ்வளவுக்கும் வைகோ அவர்கள் பங்கேற்கச் சென்றது பினாங்கு மாநிலத் துணை முதல்வர் வீட்டுத் திருமண நிகழ்ச்சி; அரசியல் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கச் செல்லவில்லை. பினாங்கு துணை முதல்வர் தலையிட்டும், அதிகாரிகள் இசைந்து கொடுக்கவில்லை. வைகோமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் திடீரென்று 'ஞானோதயமாகப்' புலப்பட்டதா? 'விசா' கொடுக்கும்போது - அந்நாட்டின் தூதரகம் இங்கு என்ன செய்து கொண்டு இருந்தது?

வைகோ அவர்கள் பயங்கரவாதப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறாரா? அது உண்மை என்றால் அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டாமா? விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் எல்லாம் பயங்கரவாதிகளா? அப்படியென்றால் தமிழ்நாட்டையே அந்தப் பட்டியலில் சேர்க்கப் போகிறார்களா!

எந்த வகையில் பார்த்தாலும் மலேசிய அரசு வைகோ பிரச்சினையில் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கதே!

ஓர் இந்தியக் குடி மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அவமானத்துக்கும் பொறுப்பேற்று இந்திய அரசாங்கம் துரிதமாக மலேசிய அரசுடன் தொடர்பு கொண்டு, இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டும்.  தனிப்பட்ட வைகோ அவர்களுக்கு ஏற்பட்டது என்று இதனைக் கருதக் கூடாது; கட்சிமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்.

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிமீதான தாக்குதலைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதுடில்லியில் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்டு) கட்சி யின் அலுவலகத்தில் புகுந்து, கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள்மீது சங் பரிவாரைச் சேர்ந்த இருவர் தாக்குதல் தொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

தாக்குதலுக்கு ஆளான தோழர் யெச்சூரி அவர்கள் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளதுபோல, ‘‘வன்முறை, தீவிரவாதம் இல்லாமல் தனது அரசியல் செல்வாக்கை ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் அதிகரிக்க முடியாது’’ என்பது சரியான கணிப்பும், உண்மையுமாகும்.

வன்முறைதான் இந்த இந்துத்துவா காவிகளின் கைகண்ட ஆயுத அணுகுமுறை என்பது உலகுக்கே தெரிந்த ஒன்றே! மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும், அதன் மூர்க்கத்தனம் கொம்பு முளைத்து, தங்களுக்கு எதிரானவர்களை முட்டி சாய்க்க முற்பட்டுள்ளது.

உ.பி.யில் என்ன நடந்துகொண்டுள்ளது? கோமாதா பாதுகாப்பு என்ற பெயரில் அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு, லத்திகளை, கொம்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு திரிகிறார்கள். உ.பி.யில் காவல்துறையின் வாகனத்திலேயே வந்து தாக்குகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். வன்முறை - பயிற்சிகள் பொது இடங்களிலேயே தங்குத் தடையின்றி நடக்க ஆரம்பித்துள்ளன.

அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டும் உள்ளன. சென்னையில் பொதுப் பூங்காக்களில் இத்தகு பயிற்சிகள் நடந்துகொண்டும் உள்ளன. காவல்துறை அதனை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று தெரியவில்லை.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி யில் இருக்கிறது. அதன் பரிவாரங்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு திரிந்து கொண்டுள்ளன. பிஜேபி ஆட்சியின் கடைக்கண் பார்வையல்ல - நேரடியான ஆசியே அமர்க்களமாகக் கிடைத்துக் கொண்டுள்ளது. அதன் விளைவு பி.ஜே.பி.,க்கே எதிர்விளைவை ஏற்படுத்தப் போகிறது. பொதுமக்கள் மத்தியில் பி.ஜே.பி.யின் உண்மையான பேருருவம் அம்பலமாகப் போகிறது.

இப்பொழுதெல்லாம் பொதுமக்களே நேரிடையாகவே களத்துக்கு வர ஆரம்பித்து விட்டனர். பி.ஜே.பி.,க்கு எதிரான மக்கள் புரட்சி வெடிப்பதற்குமுன், பி.ஜே.பி.யும், சங் பரிவார்களும் தங்கள் வாலைப் பத்திரமாக சுருட்டி வைத்துக் கொள்வது நல்லது.

தோழர் சீதாராம் யெச்சூரிமீது வன்முறையை மேற்கொண்ட வர்களை சட்டத்தின் முன்னிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தருவதில் அக்கறை எடுத்துக் கொள்வதன்மூலம் மத்திய பி.ஜே.பி. அரசின் போக்கில், சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையாவது காட்டிக் கொள்ளுமா என்று பார்ப்போம்.

 

கி.வீரமணி

தலைவர் , திராவிடர் கழகம்.

திருச்சி: பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநில மாநாடு மகத்தான வெற்றி!

அரும்பாடுபட்ட கழக வீராங்கனைகள் அனைவருக்கும் பாராட்டு

தந்தை பெரியார் படத்தை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்பீர்!

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலை மகளிர் உள்ளந்தோறும் சென்றடைய உழைப்பீர்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

பிஜேபி ஆட்சியின் மதவாத இந்துத்துவா போக்கை எதிர்த்து, கண்டித்து  மே 30 மாலை சென்னை பெரியார் திடலில் மாபெரும் பொதுக் கூட்டம்

கடந்த சனியன்று (மே 27) திருச்சியில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பில் நடத்தப்பட்ட ‘‘பெண் ணுரிமைப் பாதுகாப்பு மாநாடு’’ வெற்றிகரமான மாநாடு, கழகத்தின் எதிர்காலம் ஒளிமிகுந்ததாகும் என்பதை எடுத்துக்காட்டும் மாநாடு என்றும் குறிப்பிட்டு, இல்லந்தோறும் தந்தை பெரியார் படம் இடம்பெறவேண்டும்; தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ எனும் நூல் உள்ளந்தோறும் சென்றடையவேண்டும் என்றும், அதற்காக கழக மகளிரணி யினர், பாசறையினர் பாடுபடவேண்டும் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

கழகத்தின் எதிர்காலம் வெகுவாக ஒளிமிகுந்ததாகும்

திருச்சியில் கழக மகளிரணியும், திராவிடர் மகளிர் பாசறையும் இணைந்து, கடந்த சில மாதங்களாக எடுத்த தொடர்முயற்சிகள் காரணமாக, இவ்வாண்டு பிப்ரவரியில் திருவாரூரில் துவங்கிய எழுச்சி, திருச்சியில் 27.5.2017 நடைபெற்ற மாநில மகளிரணி கலந்துரையாடலிலும் சரி, அன்று மாலை திருச்சி உழவர் சந்தையில் ‘‘பஞ்சப்பட்டி சாவித்திரி’’ அம்மாள் நினைவரங்கத்தில் நடைபெற்ற ‘‘பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாடு - கருத் தரங்க’’த்திலும் சரி, 1200 கழக மகளிர் - பெரிதும் இளைய தலை முறை, நடுத்தர வயதினர் (மூத்தோர் எண்ணிக்கைக் குறை வாகவே இருந்தது) கலந்துகொண்டது ஒரு புத்தாக்கத்தையும், கழகத்தின் எதிர்காலம் வெகுவாக ஒளிமிகுந்ததாகும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாகவும் அமைந்தது! இது மிகையல்ல; யதார்த்தமான அனுபவ உண்மை.

பெண்களின் ஈடுபாடும், ஆதரவும்தான் என்பதை எவரே மறுக்க முடியும்?

எந்த அமைப்பானாலும், ஏன் கலைத்துறை போன்றவற்றில் கூட, அவை பரவலாகி, மக்களை ஈர்த்து வேர்ப்பிடித்து - எளிதில் வீழ்த்திட முடியாத அளவுக்குப் பிடிப்புடன் இருப்பதற்கான அடிக்கட்டுமானத்தின் பெரும்பகுதி பெண்களின் ஈடுபாடும், ஆதரவும்தான் என்பதை எவரே மறுக்க முடியும்?

திருச்சியில் வந்தவர்கள் அனைவரும் கொள்கைத் தங்கங்கள்; போராட்டக் களத்திலும், புது முறுக்கோடு இறங்கிட என்றும் தயாராக உள்ள வீராங்கனைகள் ஆவார்கள்!

காலையில் பெரியார் கொள்கைகளை வீச்சுடன் எடுத்து விளக்கி 35 முதல் 40 பேர் பேசினார்கள்!ஒவ்வொரு பேச்சும் ‘நறுக்குத் தெறித்த’ நல்ல சொல் அம்புகளாகப் பாய்ந்தன!

அவர்களின் தெளிவும், துணிவும் - உரை வீச்சில் பளிச்சிட்டது; அனைவரையும் வியக்க வைத்தது!

‘இல்லந்தோறும் பெரியார்!’

‘உள்ளந்தோறும் பெரியார்!’

தந்தை பெரியார் படம் ‘இல்லந்தோறும் பெரியார்!’ மக்கள் குறிப்பாக மகளிர் ‘உள்ளந்தோறும் பெரியார்’ என்ற ஒரு தனித்த முயற்சிதான் அவர்களின் தொடர் ஓட்டத்தின் தொய்வில்லா அடுத்த பணியாகும்!

‘பெரியார் தம் அருட்கொடை

அனைத்தும் மக்களுக்கே!’

‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலும், ‘பெண்களுக்குப் பெரியார் அறிவுரை’ நூலும், அழகுற - பெண்ணுரிமை பேணியத் தந்தை பெரியாருக்கு 1938 இல் ‘‘பெரியார்’’ பட்டமளித்தபோது கூறப்பட்ட காரண விளக்க வாசகம் கருத்துரைகள் - அழகுமிகு தந்தை பெரியார் படத்தையும் வீட்டுக்கு வீடு, அது கிராமம், நகரம், மாநகரம் என்றெல்லாம் பேதமிலா விநியோகத்தை - எளிய நன்கொடைகளைப் பெற்று, ஒருவகையான திண்ணைப் பிரச்சாரத் திட்டம் - ‘பெரியார் தம் அருட்கொடை அனைத்தும் மக்களுக்கே’ என்று தந்து சென்ற ஒப்பாரும் மிக்காருமிலாத தலைவர் அவர் என்ற கருத்தினை வலியுறுத்தி விளக்கிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பகுதிகளில் இப்பணி அரும்பணியாகிட வேண்டும்!

தொண்டறத்தைப்போல உற்சாகமளிக்கும் மாமருந்து வாழ்வில் எதுவுமே இல்லை என்பதை அப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்களால் மட்டுமே உணர்ந்திட முடியும்!

வற்றாத மகிழ்ச்சிதான், அதனால் நாம் பெறும் விளைச்சல்!

திராவிடர் மகளிர் பாசறை, மகளிரணி பொறுப்பாளர்களான மானமிகு செயல்வீராங்கனைகளான தோழர்கள் கலைச்செல்வி, செந்தமிழ்ச்செல்வி, உமா, இன்பக்கனி, தகடூர் தமிழ்ச்செல்வி, கிரேசி போன்றவர்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்த அனைத்துக் கழக கொள்கைத் தோழர்களான மகளிரணிப் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டு உள்ளடங்கிய ஒன்றுதான் என்பதைக் கூறத்தான் வேண்டுமா?

ஒவ்வொரு பகுதியிலும் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை முளைத்துக் கொண்டும், கிளைத்துக் கொண்டும் இருக்கவேண்டும்!

மாநாட்டு வெற்றிக்கு ஒத்துழைத்த திருச்சி மாவட்ட, நகர தோழர்களுக்குப் பாராட்டுகள்!

பிரச்சார களத்தையும், போராட்டக் களத்தையும் இரண்டு தளங்களாக்கி

‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’ என்ற பெருமிதத் துடன் பிரச்சார களத்தையும், போராட்டக் களத்தையும் இரண்டு தளங்களாக்கி விரைந்து இலக்கை நோக்கிய பயணத்தை இன்னும் வேகமாக முடுக்கி விடுங்கள் - மகளிரணித் தோழர்களே!

நெஞ்சம் வழியும் பாராட்டுகள்!

உங்களுக்கு எங்கள் நெஞ்சம் வழியும் பாராட்டுகள்! வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வாழ்த்துகள்!

அணிவகுப்பீர்!

பணி முடிப்பீர்!!

உங்கள் தோழன்,

 

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை
30.5.2017

 

Banner
Banner