ஆசிரியர் அறிக்கை

 

போக்குவரத்துத்தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்பட பிரச்சினை குறித்து,  7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை இதுவரை 5 கட்டமாக நடைபெற்றுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றும் சுமூகமான ஒப்பந்தம் எட்டப்பட வில்லை.

போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாய் வேறு துறைகளுக்குச் செலவு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக பணியாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் கிடைக்கப் பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்றவர்கள்கூட இத்தொகைகள் கிடைக்கப் பெறாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

12 ஆவது ஊதிய ஒப்பந்த காலம் கடந்தாண்டு ஆகஸ்டு 31 ஆம் தேதி முடிந்த நிலையில், 13 ஆவது ஊதிய ஒப்பந்தம் இன்றுவரை முடிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் வேறு வழியின்றி பேருந்து வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறி வித்துள்ளன.

தொழிலாளர்கள் தங்களின் சேமிப்புப் பணத்தைத்தான் கேட்கிறார்கள். இதில் போய் கிழக்கு மேற்குப் பார்ப்பது அரசின் சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.

கொளுத்தும் கோடையில் பேருந்து போக்கு வரத்து வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பெரும் அல்லலுக்கு ஆளாகும் நிலையை தவிர்த்திட, அரசுதான் உரிய முறையில் நல்லதோர் முடிவுக்கு வரவேண்டும்.

பேருந்து ஓடாமல் இருந்தால் ஏற்படும் நட்டத்தையும் ஒருபுறம் எண்ணிப் பார்த்து, பணியாளர்களுக்குக் நியாயப்படி, சட்டப்படி கிடைக்கவேண்டிய தொகையைக் கிடைக்க ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

தவிர்க்க இயலாத நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு திராவிடர் கழகம் தனது ஆதர வைத் தெரிவித்துக் கொள்கிறது. ஏற்படும் அசவுகரியத்திற்குப் பொதுமக்கள் பொறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

- கி.வீரமணி,

தலைவர்,      திராவிடர் கழகம்.

சென்னை
14.5.2017

மானுட குலத்திற்கு மகத்தான புதியதோர் விடியலைத் தந்த மாமேதை பிறந்து, மனித குலம் உய்ய அருமையான புது ஒளியை-புதியஉலகம் உருவாக்க வழிகாட்டிய காரல் மார்க்ஸ் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (5.5.2017).

பேதமிலாப் பெருவாழ்வை விரும்பும் அனைவரும் கொண் டாடுவர்.

வர்க்கப் பேதம் நிலவிய ஒரு சமுதாயத்தினை அவர் முக்கிய மய்யமாகக் கொண்டார்!

வருண பேதக் கொடுமை தனது ‘ஆக்டோபஸ்’ கொடுங்கரங்களை நீட்டிய சமுதாயம்பற்றி அவர் ஓரளவு குறிப்பிட்டுள்ளார்!

மனுதர்மத்தின் கொடுமைபற்றி அவரால் குறிப்பிட முடிந்தது; ‘குரங் கைக் கடவுளாக்கிக் கொண்டாடும் குறைமதியோர்' இந்திய சமூகத்தில் உள்ளனர் என்பதையும் அவர் தமது எழுத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்!

வெளிநாடுகளில் பேதம் என்றால், வர்க்க (Class) பேதம்தான்.

ஆனால், நமது பரந்து விரிந்த இந்த இந்தியாவில் வர்க்க பேதமும் உண்டு; அதற்கு ‘‘அப்பனாக’’ வருணபேதமும் (Caste) நிலைத்து வாழுகிறதே!

வருணத்திற்கும், வர்க்கத்திற்கும் மூல நம்பிக்கையாக கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை, எல்லாம் என் தலைவிதி, ‘தலையெழுத்து’ என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கே மயக்க மருந்து தந்து, புரட்சி வெடிக்காமல் செய்ய புல்லறிவாளர்களின் சூழ்ச்சி அவை என்று அவைகளைப்பற்றிய அடிப்படை உண்மைகளை - ‘நோய் முதல் நாடி’ ஆய்வு செய்தால் ஒழிய, பேதமிலாப் பெருவாழ்வு சம வாய்ப்புச் சமுதாயம் ஒருபோதும் நிறைவேறாது!

நேற்றைய பணக்காரர் இன்றைய ஏழை ஆகலாம்!

இன்றைய ஏழை நாளைய பணக்கார முதலாளி ஆகலாம்!

ஆனால், ஜாதி.... வர்ணாஸ்ரமம் அப்படியா? நேற்றைய உயர் ஜாதிப் பார்ப்பான், இன்றும் உயர்ஜாதிப் பார்ப்பான் - என்றும் உயர்ஜாதி பார்ப்பான் - சுடுகாட்டில்கூட அவனுக்கென்று தனி இடமே கூட ஒதுக்கப்பட்டுள்ளது!

இது பிறவிக் கூறு! இதை இந்நாட்டு தர்ம சாஸ்திரங்களிலிருந்து அரசியல் சட்டத்தை அமல்படுத்தும் உச்சநீதிமன்றம்வரை உறுதி செய்கின்றன!

எனவே, நம் நாட்டைப் பொறுத்தவரை சமுதாய, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் வரவேண்டுமானால், அதற்கு ஒரே வழி, மார்க்சியமும் - பெரியாரியமும் இணைந்த ஒன்றுதான் விடியலுக்கான ஒரே  வழியாகும்!

எனவே, இக்கருத்தாளர்கள் கைகோத்து பீடுநடை போட்டு, மதவெறி சக்திகளை விரட்டி - சமூகநீதிக் கொடியை பறக்கவிட்டு ‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’, ‘‘எல்லார்க்கும் எல்லாமும்‘’ கிட்ட எப்போதும் சூளுரைப்போம்!

வாரீர்! வாரீர்!!


கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

சென்னை
5.5.2017

மே நாள் என்பது தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த வெற்றித் திருநாள்!

"அனைவருக்கும் அனைத்தும்" என்ற சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியாரும்,  பொது உடைமைச் சிற்பி

மா. சிங்காரவேலரும், திராவிடர் இயக்கமும், பொது உடைமை கட்சியும் மக்கள் விழாவாக 80 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடச் செய்த விழா!

"காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன்

காணத்தகுந்தது வறுமையோ?

பூணத் தகுந்தது பொறுமையோ?"

என்று புரட்சிக் கவிஞர் எழுப்பிய கேள்விக்கு சரியான விடையும், மாற்றமும் இன்றும் கிட்டாத நிலையில், மேதினியெங்கும் மே தினம் கொண்டாடினாலும் தொழிலாளிகளைப் பங்காளிகளாக்கிப் பார்க்கும், பெருத்த மாற்றத்தை நோக்கி இவ்வையம் நடக்கட்டும்!

அனைவருக்கும் மே நாள் வாழ்த்துக்கள்.

 


கி.வீரமணி
தலைவர்,       திராவிடர் கழகம்

ஒப்பாரும் மிக்காரும் இலாத ஒரே தலைவரான

தந்தை பெரியார் தம் சுயமரியாதைச் சூரணத்தை,

கவிதைத் தேனில் குழைத்துத் தந்த குவலயம்

போற்றிட்ட நம் புரட்சிக்கவிஞர் புதுஉலகம்

காண பூபாளம் பாடிய கவிதை மழையோன்!

பெயரில் ‘பாரதிக்கு தாசன்’ என்பது  நன்றியாலும், பண்பாலும்.

ஆனால், கொள்கை லட்சிய நெறியில்

அவருக்கு இணை எவருமிலர்!

‘‘காற்செருப்பை பிறறொருவன் கழிவிடத்தில்

தள்ளிடினும் பொறாத உள்ளம்‘’  -

இதைவிட சுயமரியாதைக்கு விளக்கம் எளிதாக எவரால் தர முடியும்?

‘‘கோழியும் தன் குஞ்சுதனைக் கொல்லவரும்

வான்பருந்தை சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத

தொல்புவியில்....’’

என்னே சுயமரியாதை உணர்வின் கொப்பளிப்பு!

‘‘காட்டிலொரு முயற்குட்டி துள்ளக்கூடும்

கருஞ்சிறுத்தைக் கண் விழித்தால் தெரியும் சேதி!

தோட்டத்து புடலங்காயா? தமிழர் நாடு

உடையோன் தூங்கி விழித்தால்

உரிப்பான் தோலை!’’

எப்படி உரிமை முழக்கங்கள்!

இன்றும் பொருந்தும் பொய்யா மொழிகள் அல்லவா இவைகள்?

புரட்சிக்கவிஞரின் புகழ் வேண்டா லட்சிய நோக்கு,

‘‘மானம் ஒன்றே நல்வாழ்வெனக்கொண்டு

வாழ்ந்த எம் மறவேந்தர்

பூனைகள் அல்லர்; புலிநிகர் தமிழ்மாந்தர்!’’

என்ற பிரகடனங்கள் இன்றும் முழக்கப்பட வேண்டிய அவர் தந்த கவிதை ஆயுதங்கள்!

இந்த மானுடக் கவிஞன் மாப்புகழ் பாடி, மானமீட்பர்களாகத்  திகழ சூளுரைப்போம்!

அந்த சுயமரியாதைக்கு சூடு போட்ட கவிஞனின் பிறந்த நாளில்...!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.


சென்னை
29.4.2017  

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார் இல்லையா?

‘இந்து’ (தமிழ்) நாளேட்டில் குத்தூசி குருசாமி ‘சுயமரியாதையின் அடையாளம்‘ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் எழுத்துச் சீர்திருத்தத்தை முதன் முதலாகப் பேசியவர் குருசாமி என்றும், அதனை ‘குடிஅரசில்’ முதன் முதலாகப் பயன்படுத்தவும் செய்தார் என்றும், குத்தூசி குருசாமிமுன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவிற்குப் பிறகு 1978 இல் எம்.ஜி.ஆர். அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது என்றும் ஒரு புதிய ஸ்தலப் புராணம் புனையப்பட்டுள்ளது.

இதற்கு எந்தவித ஆதாரத்தையும் எடுத்துக்காட்டாமல் மனம் போன போக்கில் யாரோ கிறுக்குவதையெல்லாம் வெளியிடுவது சரியானதுதானா?

அதற்கான ஆதாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. மொட் டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்பதுபோல ஒருவர் எழுது வதும், அதனை ஓர் ஏடு வெளியிடுவதும்தான் பத்திரிகா தர்மமா?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்றாலே அது பெரியார் கொண்டு வந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்பற்றி ‘பகுத்தறிவு’ இதழில் (30.12.1934) தந்தை பெரியார் அறிவித்து, 13.1.1935 ‘குடிஅரசு’ இதழில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணையிலேயே (பொதுத் (செய்தி மக்கள் தொடர்பு) துறை செய்தி வெளியீடு எண்: 449 நாள்: 19.10.1978) - ஓர் உண்மை தெளிவாகவே திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

‘‘பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது’’ என்று ஆணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ் ‘இந்து’ ஏட்டில் வெளிவந்துள்ள கட்டுரையிலோ குத்தூசி குருசாமி முன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவிற்குப் பிறகு 1978 இல் எம்.ஜி.ஆர். அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது என்று எழுதுகிறது என்றால், இது எவ்வளவுப் பெரிய பொய் மூட்டை என்பது எளிதில் விளங்கும்.

யார் மூளையிலோ உதித்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தானே கொண்டு வந்தது போல ஆக்கிக் கொள்ளும் அவசியம் தந்தை பெரியாருக்குக் கிடையாது - அந்தத் தன்மை உடையவரல்ல தந்தை பெரியார் என்பது நாடு அறிந்த ஒன்று.

ஒரு மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார்;  அவர் தொடர்பான கருத்தை வெளியிடும் போது யோக்கியமான அணுகுமுறையும், பொறுப்புணர்ச்சியும் இருக்கவேண்டாமா?


கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.

சென்னை
26.4.2017     

Banner
Banner