ஆசிரியர் அறிக்கை

‘‘இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது ஜாதியே!''

உலக புத்த மார்க்கத்தின் தலைவர் தலாய்லாமா கூறும் நிலைதான் இன்றும்!

சுதந்திர நாட்டில் ஜாதி ஒழிப்புக்கான அரசின் திட்டம் என்ன?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சிந்தனைக்குரிய அறிக்கை

பெண்களைப்

இந்திய நாட்டின் வளர்ச்சிக்குத் தடை ஜாதியே என்று உலகப் புத்த மார்க்கத்தின் தலைவர் தலாய் லாமா கூறும் நிலைதான் இன்றும்! சுதந்திர இந்தியாவில் ஜாதியை ஒழிக்க அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள ஜாதி ஒழிப்புச் சிந்தனையைத் தூண்டும்  அறிக்கை வருமாறு:

டாக்டர் அம்பேத்கரின் 125 ஆம் ஆண்டுபிறந்த நாளை கருநாடக அரசு சார்பாக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மிகச் சிறப்பாக நேற்று (23.4.2017) பெங்களூருவில் நடத்தியுள்ளனர்.

அதற்குத் தலைமை விருந்தினராக திபெத் - தலாய்லாமா அவர்களை அழைத்துள்ளனர். தலாய் லாமா நோபல் பரிசு பெற்ற ஒரு தத்துவ ஞானியான புத்த நெறி பரப்பும் தலைவர்.

அண்ணல் அம்பேத்கர் எடுத்த

22 உறுதிமொழிகள்

பவுத்தம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - மூன்றும் நிறைந்த வாழ்க்கை நெறி, ஜாதிக்கே இடம்தராத, கடவுள் - ஆத்மா நம்பிக்கையற்ற, பெண்ணடிமையை ஏற்காத ஒரு நெறி என்பதால்தான், ‘நான் சாகும்போது ஒரு ஹிந்துவாக சாகமாட்டேன்?’ என்று அய்ந்து லட்சம் தாழ்த்தப்பட்ட சகோதர, சகோதரிகளுடன் நாக்பூரில் அவர் 22 உறுதிமொழிகள் கூறி பவுத்தத்தைத் தழுவினார்!

பி.ஜே.பி. ஆளும் உ.பி.யில்

தாழ்த்தப்பட்டோர் எரிப்பு!

ஜாதிதான் இந்திய சமூகத்தின் மிகப்பெரிய கேடுகளின் உற்பத்தி மய்யம். இன்றும் ஹிந்து சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட தலித் சகோதரர்களின் வீடுகள் மற்ற ஹிந்து உயர்ஜாதியாரால் தீக்கிரையாக்கப்பட்டு, கொல்லப்படும் நிலையும் தொடரும் சூழ்நிலையும் அன்றாடக் காட்சிகளாகின்றன.

70 ஆண்டு ‘‘சுதந்திரம்‘’ அவர்களை மனிதர்களாக்க முயற்சிக்கவே  இல்லை. தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் அம்பேத்கர் அவர்களும் நாம் வாழும் காலத்து ஒப்பற்ற ஜாதி ஒழிப்புப் புரட்சியாளர்கள்!

அவர்கள் அரும்பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.

95 ஆம் வயதிலும் ஜாதி ஒழிப்புக்

களத்தில் நின்ற தந்தை பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் தனது 95 வயதில்கூட ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கான திட்டமான அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகர் ஆகவேண்டும் - அதன்மூலம் கோவில் ‘கர்ப்பகிருகம்‘ என்ற கருவறையினுள் ஒளிந்து இன்னமும் ஜாதி காப்பாற்றப்படும் வர்ணதர்மம் அழிக்கப்படவேண்டும் என்பதற்காகவே போராட்டக் களத்தில் நின்றார்.

அவரது குருகுல மாணவரான, இன்று 94 வயதில் அடியெடுத்து வைக்கும் ஒப்பற்ற முதல்வராகத் திகழ்ந்த மானமிகு சுயமரியாதை வீரரான கலைஞர்மூலம் சட்டக் களத்தில் வென்றார்; இரண்டு தனிச் சட்டங்கள்; அவை செல்லும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு - என்றாலும் செயற்பாட்டிற்கு வராமலேயே - ஆட்சியாளர் கொடுத்த வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றாது உள்ள வேதனையான வெட்கப்படும் நிலை உள்ளது!

இதனைக் கூர்மைப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கையை - கிளர்ச்சிகளை - சட்டப் போராட்டக் களம் உள்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், உலகம் முழுவதும் சுற்றும் பவுத்தக் கொள்கை பரப்பு நெறித் தலைவரான தலாய் லாமா இந்தியாவின் மிகப்பெரிய கறை ஜாதி முறை - அதை அறவே ஒழித்தால் ஒழிய முன்னேறாது இந்தியா என்று நேற்று (23.5.2017) கூறியுள்ளார்!

நவீன சிங்கப்பூரின் சிற்பியும் கூறியது என்ன?

உலகின் தலைசிறந்த நிர்வாகியாகக் கருதப்பட்ட ‘நவீன சிங்கப்பூர் நாட்டின் தந்தை’யென அழைக்கப்படும் மேனாள் பிரதமர், மதிஉரைஞர்  ‘லீ குவான்  யூ’ (Lee Kuan Yew) அவர்கள் உலக நாடுகள் பலவற்றைப் பற்றிய கருத்துகளைத் தொகுப்பாக தனது இறுதி நாள்களில் எழுதிய ஒரு நூலில் ‘இந்தியா’ என்ற தலைப்பில், ‘‘இந்தியாவின் வளர்ச்சிக்கு இரண்டு பெரும் தடைகள் - முட்டுக்கட்டைகள் உண்டு. 1. அதன் ஜாதி முறைக் கொடுமை 2. அடிக்கட்டுமான குறைபாடு’’ என்று கூறியுள்ளார்.

‘‘சுதந்திரம்‘’ பெற்று 70 ஆண்டுகளில் இன்னமும் இங்கு மாட்டுக்குத் தரப்படும் வசதிகளும், மதிப்பும் - உழைக்கும் மனிதனுக்குத் தரப்படாததோடு, அவர்களை வாழவிடாமல் கொலை, தீக்கிரை, கலவரம் என்ற நிலைக்கு ஆட்படுத்துவது பெருமையானதா? இழிவானதா?

ஜாதி முறையை, பெண்ணடிமையை ஒழித்து பகுத்தறிவை வளர்ப்பதுதான் - சித்தார்த்தனாக இருந்து ‘புத்தராக’ மாறிய புத்தி மார்க்கத் தலைவரின் புத்தநெறி!

தலாய் லாமா கூறுவதைக்

கவனியுங்கள்!

தலாய் லாமா அதே ஜாதியை எதிர்த்து 2500 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நாட்டில் பேசியாக வேண்டியதானது - நம் நாட்டிற்கு அதுவும் சுதந்திர நாட்டிற்குப் பெருமையா? சிறுமையா? எண்ணிப் பாருங்கள்!

இந்த மாற்றத்திற்காக அரசிடம் என்ன திட்டம் உள்ளது?

மாறாக வளர்க்க அல்லவா முயலுகிறது!

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

குறிப்பு: தலாய் லாமாவின் முழு உரை 3 ஆம் பக்கம் காண்க.

 

சென்னை 

24.5.2017

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து நாடாளுமன்றத்தில் எதிர்த்து முறியடிப்பீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

பெண்களை 'பாவ யோனியில்' பிறந்தவர்கள் என்றும், நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்றும், பகவான் கிருஷ்ணன் சொன்னான் என்றும் கூறும் கீதையைப் பள்ளிகளில் பாடநூலாகக் கட்டாயமாக வைக்க வேண்டும் என்ற பி.ஜே.பி.யின் முயற்சியை எதிர்த்தும், இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்துக் குப்பைக் கூடையில் போட வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்தியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பெறும் மோடி தலைமையிலான பா.ஜ.க. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, என்.டி.ஏ. என்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்ற பெயருடனே கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

வளர்ச்சி, வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், விவசாயிகளின் வாழ்வைப் பன்மடங்கு வளப்படுத்துவோம் என்றெல்லாம் தேர்தலில் கூறிவிட்டு, ஆட்சிக்குப் பெரும் பலத்தோடு வந்துவிட்ட பிறகு ‘மதச் சார்பற்ற’ என்ற அரசமைப்புச்சட்டம் விதித்துள்ள ஆட்சிமுறையையே தூக்கி எறியும் வண்ணம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு

கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்து ஒற்றை ஆட்சிமுறை (Unitary System) யைக் கொண்டு வரும் வகையில், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் பணியையும் அடக்கமாகவும், அதேநேரத்தில் உறுதியாகவும் திட்டமிட்டே நடத்துகின்றது.

பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள ஜனநாயகக் குடியரசினை மாற்றி Ôஹிந்து ராஷ்டிரமாக்கிடÕ அவ்வப்போது தொடர்முயற்சிகளை பல்வேறு ரூபத்தில் நடத்திட முயலுகின்றது.

ஜாதி, வர்ணாஸ்ரமம், அந்நிலைக்கு கர்ம வினைப்பயனே காரணம்; ஆத்மா அழியாதது ஆகையால் நாட்டில் கொலைகள் உடலை மட்டும்தான் அழிக்கின்றன என்ற  ஜாதி தர்மம் நிலைக்கப்பாடுபட வேண்டும்.

பகவத் கீதை பள்ளிகளில் கட்டாயமாம்!

மக்கள் தொகையில் சரிபகுதியாக உள்ள பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்பது போன்ற அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை உள்ளடக்கிய Ôபகவத் கீதைÕ என்ற நூலை கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் கட்டாயமாக்கிட வேண்டும் என்று பா.ஜ.க.வின் எம்.பி. ரமேஷ் பிடாரி என்ற ஒருவர் தனி நபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மசோதா நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும், இதை அமலாக்காத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மசோதா கூறுகிறது.

அரசின் மதச்சார்பின்மை பலி!

அரசின் மதச்சார்பின்மை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத் தப்படுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா?

சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது!

பெண்களை அசிங்கமாக அருவருக்கத்தக்க வகையில் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று  கீதை கூறுகிறது!

கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் - காந்தியாரைக் கொன்ற கோட்சே, Ôநான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன்Õ என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான்.

இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா?

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து

எதிர்க்க வேண்டும்

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடித்து, குப்பைக் கூடைக்கு அனுப்ப வேண்டும்.

கல்வி எப்படி காவிமயமாக்கப்படுகிறது பார்த்தீர்களா? வன்மையான கண்டனங்கள் குவியட்டும்.

பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு - கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.

மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

 

சென்னை 

23-5-2017       

இந்திய ராணுவ அதிகாரியான குல்பூஷன் ஜாதவின்மீது, பாகிஸ் தானில் உளவு பார்த்தவர் என்று போலித்தனமாக ஒரு குற்றம் சுமத்தி, அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது பாகிஸ்தான் நாட்டு நீதிமன்றம்.

இதனை எதிர்த்து மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுவிக்கவேண்டும் என்று நெதர்லாந்து நாட்டிலுள்ள உலக நீதிமன்றத்தில் இந்தியா தொடர்ந்த வழக்கில், உலக நீதிமன்றத்தின் நீதிபதிகள், பாகிஸ்தான் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்ததன்மூலம் அவரது உயிர் காப்பாற்றப்பட்டு மனிதாபிமானம் வென்றிருக்கிறது. நிரந்தரமாகவே அவர் விடுதலை செய்யப்படும்பொழுதுதான் நீதி வென்றது - மனித நேயம் நிலைநாட்டப் பெற்றது என்பதற்கான அடையாளமாகும்.

நம்மைப் பொறுத்தவரை, தூக்குத் தண்டனையே ரத்து செய்யப் படவேண்டும்; தூக்குத் தண்டனை ஒரு அநாகரிகமான காலத்துத் தண்டனை - குற்றவாளிகள்கூட திருத்தப்படல் வேண்டும் என்கிறபோது, இப்படிப்பட்ட செய்யாத குற்றத்திற்காக அநியாய தண்டனைகள் எங்கும் எவருக்கும் வழங்கப்படவே கூடாது!

உலக நீதிமன்றத் தீர்ப்பை பாராட்டுகிறோம்;

முயற்சி எடுத்த மத்திய அரசும் பாராட்டப்படவே வேண்டும்!

கி.வீரமணி

தலைவர்,              திராவிடர் கழகம்.

சென்னை 
19.5.2017

தமிழக அரசின் முக்கிய கவனத்திற்கு....

‘டாஸ்மாக்' பணியாளர்கள் பிரச்சினை

பணி இழக்க இடம் தரக்கூடாது!

முழு மது விலக்குத் தேவை என்ற முழக்கம் பட்டிதொட்டியெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டது. பெண்களே களத்தில் இறங்கி மதுக்கடைகளைக் காலி செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப்படும் நிலை! இதனை வரவேற்கும் அதே நிலையில், டாஸ்மாக்கில் பணியாற்றுவோரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது!

20  ஆண்டுகளுக்குமேல் பணியாற்றுவோரின் நிலை என்ன? 20 ஆயிரம் பணியாளர்கள் என்றால், 20 ஆயிரம் குடும்பங்கள் என்று பொருள்.

ஒரே ஒரு ஆணையில் ஒரு நாளில் இவர்களை வீட்டுக்கு அனுப்பினால் அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆவது?

முன்பு சாலைப் பணியாளர்கள் விடயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா முரட்டுப் பிடிவாதமாக நடந்துகொண்ட நிலையில், உச்சநீதிமன்றம்வரை சென்று சாதகமான ஆணையைப் பெற்றனர் தொழிலாளர்கள். அதற்குப்பின் கிராம நலப் பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளியேற்றப்பட்டு அவர்களும் பிச்சை எடுக்கும் போராட்டம் எல்லாம் நடத்தியதுண்டு -

டாஸ்மாக் பிரச்சினையில் அந்த நிலையை இன்றைய அரசு மேற்கொள்ளாது என்று எதிர்ப்பார்க்கிறோம்; டாஸ்மாக் மூலம் கோடிக் கோடியாக அரசுக்கு வருவாய் வந்தது என்றால், அதற்கு இந்தப் பணியாளர்களின் பங்கும், உழைப்பும்  முக்கியமானதுதான்!

அரசு துறைகளில் மூன்று லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில், பல்லாண்டுக்காலம் - அரசுப் பணியையே நம்பி பணியாற்றியவர்களைக் கொண்டு நிரப்புவது அவசியமாகும்.

அரசுப் பணிக்கே உத்தரவாதம் இல்லை என்பது ஆரோக்கியமானதல்ல - இதில் மனிதாபிமானக் கண்ணோட்டமும் முக்கியமானதாகும்.

கி.வீரமணி,

தலைவர்
திராவிடர் கழகம்.


சென்னை
18.5.2017

 

போக்குவரத்துத்தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்பட பிரச்சினை குறித்து,  7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை இதுவரை 5 கட்டமாக நடைபெற்றுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றும் சுமூகமான ஒப்பந்தம் எட்டப்பட வில்லை.

போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாய் வேறு துறைகளுக்குச் செலவு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக பணியாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் கிடைக்கப் பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்றவர்கள்கூட இத்தொகைகள் கிடைக்கப் பெறாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

12 ஆவது ஊதிய ஒப்பந்த காலம் கடந்தாண்டு ஆகஸ்டு 31 ஆம் தேதி முடிந்த நிலையில், 13 ஆவது ஊதிய ஒப்பந்தம் இன்றுவரை முடிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் வேறு வழியின்றி பேருந்து வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறி வித்துள்ளன.

தொழிலாளர்கள் தங்களின் சேமிப்புப் பணத்தைத்தான் கேட்கிறார்கள். இதில் போய் கிழக்கு மேற்குப் பார்ப்பது அரசின் சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.

கொளுத்தும் கோடையில் பேருந்து போக்கு வரத்து வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பெரும் அல்லலுக்கு ஆளாகும் நிலையை தவிர்த்திட, அரசுதான் உரிய முறையில் நல்லதோர் முடிவுக்கு வரவேண்டும்.

பேருந்து ஓடாமல் இருந்தால் ஏற்படும் நட்டத்தையும் ஒருபுறம் எண்ணிப் பார்த்து, பணியாளர்களுக்குக் நியாயப்படி, சட்டப்படி கிடைக்கவேண்டிய தொகையைக் கிடைக்க ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

தவிர்க்க இயலாத நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு திராவிடர் கழகம் தனது ஆதர வைத் தெரிவித்துக் கொள்கிறது. ஏற்படும் அசவுகரியத்திற்குப் பொதுமக்கள் பொறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

- கி.வீரமணி,

தலைவர்,      திராவிடர் கழகம்.

சென்னை
14.5.2017

Banner
Banner