ஆசிரியர் அறிக்கை

 

வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி சென்னை -  ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்தத் தொகுதியைப் பொருத்த வரையில் இது இரண்டாவது இடைத்தேர்தலாகும்.

புறக்கணிக்கப்படும் தொகுதி

தொடர்ந்து இந்தத் தொகுதி ஆளுங்கட்சிக்கு ஆதரவானதாக இருந்தாலும், வளர்ச்சித் திட்டம் என்பது வருத்தப்படக் கூடியதாகவே இருக்கிறது. பலவகைகளிலும் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாகவும் இருந்து வருகிறது.

குறிப்பாக குடிதண்ணீர் என்பது எல்லாப் பருவக் காலங்களிலுமே இந்தத் தொகுதியைப் பொருத்தவரை பொதுமக்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வந்திருக்கிறது.

அத்தொகுதிப் பொதுமக்கள் தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படையாகவே தெரிவித்தும் வருகின்றனர்.

குறைகளை எடுத்துக்கூற தி.மு.க.வே பொருத்தம்!

இந்த நிலையில், இந்தத் தொகுதியின் குறை பாடுகளையும், தேவைகளையும் சட்டப் பேரவையில் வலுவுடன் எழுப்பிட ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டுவரும் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதுதான் உகந்ததாகவும், சிறப்பானதாகவும் இருக்க முடியும்.

திராவிட இயக்க சித்தாந்தப் பார்வையில்...

மேலும் திராவிட இயக்க சித்தாந்தம் என்று வருகிற போது - இன்றைக்கு இருக்கும் அரசியல் கட்சிகளில், தி.மு.க.தான் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

சமூகநீதி, மதச்சார்பின்மை இரண்டுக்கும் இந்துத்துவா அரசியல்வாதிகளால் பெரும் அறைகூவல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குறி வைத்து காய் நகர்த்தும் இவ்வேளையில் அதற்கு சரியான தடுப்பும், மதச்சார்பின்மை அணியும் உருவாக அச்சாரமாக இத்தேர்தல் முடிவு அமையவேண்டியது அவசர அவசியமாகும்.

‘‘தமிழ்நாடு தந்தை பெரியார் மண்ணே!’’

இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி என்பது இவ்விரு கொள்கை களிலும் தமிழ்நாடு தந்தை பெரியார் மண்ணே என்பதை மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கே பிரகடனப்படுத்தும் அரிய வாய்ப்பாகும்.

அ.இ.அ.தி.மு.க.வைப் பொருத்தவரை இந்த இடைத்தேர்தலில் ஒரு பாடம் கற்பிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

கழகங்களே இல்லாத ஆட்சியா?

‘‘கழகங்களே இல்லாத ஆட்சியை உருவாக்குவோம்‘’ என்பவர்கள் முன்பு வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்த வர்கள், இப்போது வரிந்து கட்டி வரத் துடிக்கிறார்கள்.

தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுப்பதுதான் இந்த மதவாத கும்பலுக்குச் சரியான பதிலடியாகவும் இருக்க முடியும்.

இத்தகு காரணங்களால் திராவிடர் கழகம் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கிறது.

வாக்காளர்களும் தி.மு.க.வின் உதயசூரியனுக்கே வாக்களித்து வெற்றி என்பதைவிட மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கழகத் தோழர்களுக்கு...

வடசென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் இந்த இடைத்தேர்தலில் தங்களின் பங்களிப்பு  முத்திரையைப் பொறிக்கவேண்டும்; தேவைப்பட்டால், பிரச்சார களத்திலும் ஈடுபடுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.

இன்று (10.3.2017) - கழகத் தலைவராக இருந்து - அய்யா மறைவிற்குப் பின் நம்மை வழி நடத்திய புரட்சித் தாய் அன்னை

ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களின் 98 ஆம் ஆண்டு பிறந்த நாள்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தன்னை இகழ்வாரையும் ஏற்று அன்பு காட்டி, பண்பு உணர்த்தி, தொண்டால் உயர்ந்த எம்.அன்னை யின் எதிர்நீச்சல் வெற்றிக்கு இணைதான் வேறு உண்டோ?

தனது வாழ்வை - இளமையை - வளமையை - தனித்ததோர் அடையாளத்தைக்கூட இழந்து - கொள்கை லட்சிய வெறியை மட்டும் இறுதிவரை இழக்காத எம் அருமை அன்னைக்கு ஈடு இணை எவரே உண்டு?

‘தனக்கென வாழாப் பிறர்க்குரியார்கள்’ என்பதற்கு தன்னிகரற்ற எடுத்துக்காட்டு அல் லவோ எம் தனிப்பெரும் தாய்!

அவரின் சொத்துகள் தனது உற்றாருக்கல்ல; உறவுகளுக்கு அல்ல. ஊர்நலம், உலக நலம் ஓம்புவதற்கே என்று தனி அறக்கட்டளை அமைத்து பல்கலைக் கழகங்களாகப் பரிமளிக்கச் செய்த தம் தூய தொண்டறத்தில் செம்மாந்து உயர்ந்து வரலாற்றில் கலங்கரை வெளிச்சமாகி, கழகத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே காலத்தை வென்று நின்றுள்ள எம் அன்னையின் பிறந்த நாள், எமக்கு சூடு ஏற்றும் சூளுரை நாள்.

அவரின் பிறந்த நாள் வெற்று ஆரவாரத் திருநாள் அல்ல - வெற்றியுடன் மகளிர் உரிமை மீட்கும் மனுதர்ம எரிப்பு நாள்.

“இராவண லீலா’’வை நடத்தி இந்தியாவை உலுக்கிய எங்கள் அன்னைக்கு இதுவே சரியான கொள்கை மரியாதையாகும்!

அன்னையார் புகழ் அகிலமெங்கும் பரவட்டும்!

அவர் விரும்பிய புரட்சி உலகம் பூக்கட்டும்!!

வாழ்க பெரியார்! வாழ்க அன்னையார்!

 

கி.வீரமணி
தலைவர்,        திராவிடர் கழகம்.


10.3.2017
சென்னை


வாட் வரி விதிப்பின் கைமேல் பலன் இதுதானா?

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு நியாயந்தானா?

பெட்ரோலுக்கு 27 சதவிகிதம் இருந்தது 34 சதவிகிதமும், டீசலுக்கு 2.1.43 சதவிகிதம் என்று இருந்த வரி, தற்போது 5.3.2017 முதல் மதிப்புக் கூட்டு வரியாக 25 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது!

இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.76 அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றம் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.)மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்! என்னே விநோதம்!

விவசாயிகள் தற்கொலை, மக்களுக்கு வறட்சி, ரேஷன் கடையில் பொருள்கள் தட்டுப்பாடு, வங்கியில் போட்ட சொந்தப் பணத்தை எடுக்கவே கட்டுப்பாடு, குறைந்தபட்ச சேமிப்பு குறைந்தால் அபராதம் - இப்படி பலப்பல அன்றாட வாழ்க்கைச் சூழல்களில், மாட்டித்தவிக்கும் நடுத்தர, ஏழை - எளிய மக்களின் வாழ்க்கை, நாளும் தவிக்கும் வாழ்க்கையாக மாறியுள்ளது.

உடனே, விலை உயர்வைத் திரும்பப் பெறுக!

இல்லையேல், மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி!!

கி.வீரமணி
6.3.2017                                                                                                               தலைவர்
சென்னை                                                                                                     திராவிடர் கழகம்.
 

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

தமிழர் தலைவர்  விடுத்துள்ள அறிக்கை

 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பகிரங்கமாகவே அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது - சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டுமே தவிர - வன்முறையால் அல்ல - வன்முறை தீர்வாகாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலையைக் கொண்டு வருகிறவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் விலையைத் தரத் தயாராக இருக்கிறோம்; என் சொத்தை விற்றாவது இந்தப் பரிசு பணத்தைத் தருகிறேன்’ என்று மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜனைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி குந்தன் சந்த்ராவத் என்ற ஒருவர் பகிரங்கமாகப் பேசியுள்ளார்!

நாம் என்ன 21 ஆம் நூற்றாண்டில்தான் வாழுகிறோமா அல்லது சூத்திர சம்பூகனின் தவத்தால்தான் என் பிள்ளை (மனுதர்மம் கெட்டதால்) செத்துப் போனான் என்று பிணத்தைக் காட்டி இராமனிடம் பார்ப்பனன் ஒருவன் முறையிட்டபோது, விசாரணை ஏதுமின்றி, தம் பரிவாரத்துடன் சென்று, சம்பூகன் தலையை வெட்டினான் இராமன் என்று வால்மீகி இராமாயண உத்தரகாண்டத்தில் கூறியுள்ளதே - அந்த ‘‘இராம (அநீதி) ராஜ்ஜியத்திலா’’ இன்று வாழுகிறோம்? ஆர்.எஸ்.எஸுக்கு அந்த நினைப்போ?

கொலைக் குற்றவாளியைக்கூட பாதிக்கப்பட்டவன் சட்டத்தைக் கையில்  எடுத்துக்கொண்டு கொன்றுவிட முடியுமா?

தூக்குத் தண்டனைக் கைதியாக இருந்தாலும் அவனுக்கும் உரிய உணவு, மருத்துவம் செய்யவேண் டும் என்ற நாகரிக சமுதாய சட்டம் - மனித உரிமைச் சட்டம் அமலில் உள்ள நாட்டில், பிரதமர் மோடி ஆளும் ராஜ்ஜியத்தில் இதுபோன்ற ‘‘காட்டுமிராண்டி’’ப் பேச்சுகள் - ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் வகையறாக்களுக்குச் சர்வ சாதாரணமாகி விட்டதே!

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கம்யூ னிஸ்டுகள் கொன்றார்கள் என்றால், சட்டப்படி என்ன பரிகார நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமோ அதை வற்புறுத்த, சட்ட நியாயப்படி செயல்பட, ஆர்.எஸ்.எசுக்கு உரிமை உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை.

ஆனால், யாரேனும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாமா?

வக்கிரபுத்தி கொண்ட....

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை ஆதரித்து இராமர் பாலம் கற்பனை என்று கூறியதற்காக இந்தியாவின் மூத்த தலைவர் கலைஞர் தலையை வெட்டி என் காலடியில் கொண்டு வந்தால் பரிசு என்று ஒரு வடநாட்டு வக்கிரபுத்தி கொண்ட ராம்விலாஸ் வேதாந்தி கூறியதுண்டு.

இது போன்றவற்றை பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், பா.ஜ.க.வினர் உள்பட  - அனைவரும்  கண்டிக்கவேண்டாமா?

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கேரளாவில் கொல்லப்படு கிறார்கள் என்று கூறி, இன்றுகூட கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு தீ வைப்பு - கொலை போன்றவை நடந்துள்ளன என்று ஒரு செய்தி வந்துள்ளது.

காந்தியாரைக் கொலை செய்த கோட்சேவின் ஆரம்ப பயிற்சி முகாம்தான் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசறை என்பதை எவரே மறுக்க முடியும்? அவரும், அவரது சகோதரர் கோபால் கோட்சேவுமே பகிரங்கமாகக் கூறியுள்ளனரே!

வன்முறை ஒருபோதும் தீர்வாகாது

தென்காசி போன்ற ஊர்களில் தங்கள் இயக்கத்த வரைத் தாங்களே கொன்றுவிட்டு, இஸ்லாமியர்கள்மீது பழி போட்டு கலவரம் நடந்த பிறகு உண்மைக் குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி என்று கண்டறிந்து, அவர்கள் தண்டனைக்கு ஆளா னதை மறந்துவிடலாமா?

எந்தக் கட்சியும், எந்தக் கொள்கையையும் எதிர்கொள்ள வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.

எனவே, இத்தகைய அருவருக்கத்தக்க அநாகரிகப் பேச்சுகளுக்கு இடம் அளிக்கக்கூடாது;  அவர்கள்மீது வழக்குத் தொடரவேண்டும்.

கருத்தைக் கருத்தால் சந்திப்பதே அறிவுடைமை!

காலித்தனம், வன்முறை சரியான வழியல்ல!

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


3.3.2017
சென்னை

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது அவருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பெருமை யாகும்.

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ் மாயில் சாகிப் அவர்களுக்குப் பிறகு திருவாளர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களுக்கு இவ்வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது!

நிதானமாகவும், ஆழமாகவும், அமைதி யாகவும் கருத்துகளை மேடையில் கூறும் பாங்கும், பண்புடைமையும் பேராசிரியரின் சிறப்பு இயல்புகள் ஆகும்.

அவரது தலைமை யின்கீழ் அவரது கட்சி மட்டுமல்ல, நம் நாட்டு ஜனநாயகமும் தழைத்தோங்கும் என்பது உறுதி!

அவருக்கு நமது இதயமார்ந்த வாழ்த்துகள்!

- கி.வீரமணி

தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை 
27.2.2017

குறிப்பு: தொலைப்பேசியில் தமிழர் தலைவர் வாழ்த்துக் கூறியவுடன், நன்றி தெரிவித்தார் பேராசிரியர் காதர் மொய்தீன்.

Banner
Banner