ஆசிரியர் அறிக்கை

தமிழ்நாட்டில் நிலவும் சூழல்களைப் பயன்படுத்திக் கொண்டு அரசமைப்புச் சட்டம் 356 அய்ப் பயன்படுத்தி, ஆட்சியை முடக்க சதித்திட்டம் தயாராகிறது - இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். காவிகள் - பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் - எச்சரிக்கை தேவை என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

எது நடக்கக் கூடாது என்று நாம் கடந்த மாதம் முதலே வற்புறுத்தி அறிக்கைகளில் விளக்கினோமோ, அது நடந்ததே விட்டது என்பது வேதனைக்குரியது!

நிலையான ஆட்சிக்குப் பெயர்போன தமிழ்நாடு, இன்று பிளவுபட்டு நிற்கிறது; பிரித்தாளும் ஆரிய நரித்தந்திரம் தற்காலிக வெற்றி பெற்றிருக்கிறது!

356 - எச்சரிக்கை!

356 என்பதை தயார் நிலையில் வைத்துக்கொண்டுள்ள டில்லி ஆட்சியால் அதற்கான அரசியல் சித்து விளையாட்டுகளும், பொம்மலாட்டங்களும் திட்டமிட்டு அரங்கேற்றப் பட்டு வருகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறும்போது வாக்குகளை தம் பக்கம் ஈர்க்க - தங்களது தலையாட்டிப் பொம் மைகளைக் கொண்ட அரசினைக் கொண்டுவர, இந்த அரசியல் தாமதங்களும் - மெத்தனமான நடவடிக்கைகளும் (டில்லியின் திட்டமிட்ட செயல்) என்று நேற்று (9.2.2017) ‘தி எகனாமிக் டைம்ஸ்’ நாளேடு எழுதுகிறது!

பூனைக்குட்டி வெளியில் வந்ததே!

அ.தி.மு.க.வின் ஒரு பிரிவிற்கு அனுதாபங் கொண்டு ஆதரவு தருவதாக ஒரு நாடகத்தை நடத்தி, இறுதியில் யாருக்கும் போதிய பெரும்பான்மை இல்லை என்று கூறி, 356 என்ற ஆயுதத்தைக் கூர்மைப்படுத்தி, தயார் நிலையில் வைத்துள்ளனர் என்பதற்கு அவாள் ஏடான ‘தினமலர்’ - அ.தி.மு.க.வை உடைக்க குருமூர்த்தி அய்யர்களின் முயற்சிக்குக் களம் அமைத்துவரும் ‘இனமலர்’ ஏடு எழுதியுள்ளதன் மூலம், தந்தை பெரியார் சொல்வதுபோல, ‘‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!’’

‘‘பலப் பரீட்சையில் சசி தோற்றால் அடுத்து என்ன?’’

‘‘சட்டசபையை முடக்க கவர்னர் உத்தரவிட வாய்ப்பு!’’

(‘தினமலர்‘, 10.2.2017, பக்கம் 20)

‘‘.....பெரும்பான்மையை நிரூபிக்க அதிகபட்சம் கவர் னர் ஒரு வாரம் அவகாசம் தருவார். அவர் குறிப்பிடும் நாளில்,

அ.தி.மு.க.வில் சசிகலா தரப்போ அல்லது பன்னீர் செல்வம்தரப்போ,பெரும்பான்மையை நிரூபிக்காவிட் டால், ஆறு மாதத்திற்கு சட்டசபையை முடக்கி வைக்க, ஆளுநர் உத்தரவிடும் வாய்ப்பு உள்ளது.

உடனே, அடுத்த பெரிய கட்சியான தி.மு.க.வை ஆட்சி அமைக்க, அவர் அழைக்கமாட்டார். ஆறு மாத காலம் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமையும்‘’ என்கிறது ‘தினமலர்.’

இன எதிரிகளின் சூழ்ச்சித் திட்டம்

இத்தகைய சித்து விளையாட்டுமூலம் குதிரை பேரங் களும், மலிந்து,  அரசியல்  ஸ்திரத்தன்மை விடை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம் இன எதிரிகளின் சூழ்ச்சித் திட்டம்!

அ.தி.மு.க.வில் யாரோ இரண்டு தனி நபர்களின் தலைமைக்குள் நடக்கும் அரசியல் போட்டி இது என்று நுனிப்புல் மேய்பவர்கள் நம்மை விமர்சித்தால் அவர்கள்  அதைப் பிறகு புரிந்துகொள்வர்.

உணர்ச்சிவயப்பட்டு சிந்தித்தால் உண்மை கண்களை மூடிக் கொள்ளும்.

தமிழ்நாட்டு அரசியலில் இப்போது நடைபெறுவது தேவாசுரப் போராட்டமே! அதாவது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமே!

நமது பார்வை முற்றிலும் இனநல பொதுநலப் பார்வையே - தந்தை பெரியார் பார்வையே!

‘குருமூர்த்திகளின்’ சித்து விளையாட்டு!

தமிழ்நாட்டில் இத்தகைய சித்து விளையாட்டுக்கு மூலகாரணமாக உள்ள சிறீமான் குருமூர்த்தி அய்யர் அவர்கள் இன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் என்ன கூறுகிறார்?

‘‘கவர்னர், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும்வரை பொறுமையாக காத்திருக்கவேண்டும்.

மெஜாரிட்டி இருந்து பயன் என்ன -  அதற்குரிய தகுதி இல்லாமல்? (Qualification) அவர் (சசிகலா) தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. அவர் ஆறு மாதத்திற்குள் தேர்தலில் நின்று வென்று வரவேண்டும் தண்டிக்கப்பட்டு விட்டால் தேர்தலில் நிற்க முடியாது’’ என்கிறார் குருமூர்த்தி.

என்னே விசித்திர லாஜிக்! அரசியல் சட்டப்படி மெஜாரிட்டி என்பதுதானே ஜனநாயகத்தில் தகுதியே! வேறு என்ன தகுதி? சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லாதவர்கள் முதல்வராக தேர்வான பிறகு, தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களின் நீண்ட பட்டியலே உண்டே! ‘பூணூல் தகுதி’ என்ற ஆழ்மனக் குறை தகுதிதானே? இவருக்கு என்னே விசித்திர வாதங்கள்!

அனுமானங்கள் - இப்படி நடந்தால், அப்படி நடந்தால் என்பதற்கு, இந்திய அரசியல் சட்டத்தில் துளியும் இடமில்லை.

ஆளுநர் அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டியவரே! (Duty).

இல்லையானால், அரசியல் சட்டக் கடமையாற்ற தவறிய ஜனநாயகப் படுகொலை நடந்தது என்ற அவப்பெயர்தான் தமிழ்நாட்டிற்கு ஏற்படும்!

காவிகளின் சூழ்ச்சிக்கு இரையாகலாமா?

கறை படிந்த நிலைக்குக் காவிகள் தமிழ்நாட்டைக் கொண்டு போவதை அனுமதிக்கலாமா? இரையாகலாமா? நிடுநிலையிலிருந்து சிந்தியுங்கள்!

மேலெழுந்தவாரியாகப் பார்க்கக் கூடாது!!


கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


சென்னை
10.2.2017

 

ஜஸ்டிஸ் என்.பால்வசந்த்குமார் அவர்களை  நியமிக்கவேண்டும் - தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகளில் தமிழ்நாட் டைச் சேர்ந்த ஒரே ஒருவர்தான் உள்ளார்.  தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சமூகநீதிக்கான கண்ணோட்டத்தில் நீதிபதிகள் நியமனம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை மொத்தம் 31 ஆகும்.

இதில் பல இடங்கள் காலியாக உள்ளன; அதன் காரணமாக வழக்குகளின் தேக்கத்தைக் குறைத்து, உடனடியாக நீதி வழங்க முடியாத நிலை.

தமிழ்நாட்டிலிருந்து  இதுவரை 3 அல்லது 4 நீதிபதிகள்கூட உச்சநீதிமன்றத்தில் இருந்திருக்கிறார்கள்.

பெங்கால் ‘லாபி’ - மும்பை ‘லாபி!’

‘பெங்கால் லாபி’, ‘மும்பை லாபி’ என்பதே மிகவும் செல்வாக்குடன் தங்களது மாநில உயர்நீதிமன்றத்திலிருந்து தவறாமல் கூடுதல் எண்ணிக்கையில் நீதிபதிகள் உச்சநீதிமன் றத்திற்குச் செல்ல மிகுந்த கவனஞ் செலுத்துகின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து உச்சநீதிமன்றம் சென்று சிறப்பாக பணியாற்றிய மாண்பமை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, நாகப்பன் போன்றவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர்.

மாண்புமிகு ஜஸ்டிஸ் பானுமதி அவர்கள்தான் ஒரே ஒருவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதியாக உள்ளார்.

எனவே, உடனடியாக தமிழ்நாட்டுக்குப் பிரதிநிதித்துவம் தேவை, தேவை!

எஸ்.சி., எஸ்.டி., சமூக நீதிபதிகள் தேவை!

காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மாண்புமிகு ஜஸ்டிஸ் என்.பால்வசந்த்குமார் அவர்களை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பது சமூகநீதிக் கண்ணோட்டத்திலும் முக்கியம் ஆகும்.

அதுபோலவே, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் (எஸ்.சி., எஸ்.டி.,) சமுகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் உச்சநீதி மன்றத்தில் இல்லை. உடனடியாக இந்தச் சமூக அநீதியைக் களையவேண்டும்.

தமிழ்நாட்டு எம்.பி.,க்களின் கடமை

தமிழ்நாட்டு எம்.பி.,க்கள்  இதில் அவசர, அவசியம் கவனஞ்செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அத்துணை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே குரலில் இதனை வற்புறுத்த வேண்டும் என்பது நமது முக்கிய வேண்டுகோள் ஆகும்.

 

கி.வீரமணி           
தலைவர்,    திராவிடர் கழகம்.


10.2.2017 சென்னை

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறித்தவர்கள் இந்துக்கள்தானாம்!

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அரசமைப்பு சட்ட விரோதப் பேச்சு

இந்த ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறிய

மதசார்பற்ற சக்திகள் கிளர்ந்து எழ வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட முக்கிய அறிக்கை

ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பாகவத் இந்தியாவில் வாழும் வேறு மதத்தவர்கள்கூட இந்துக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமான இந்த மதவாதப் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய மத  சார்பற்ற சக்திகள் கிளர்ந்து எழ வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வடநாட்டில் 'பேட்டூல்' என்ற ஊரில் பேசிய ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் தலைவரான மோகன்பாகவத்  பேசி யுள்ளதாவது:

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்தானாம்!

"இந்துஸ்தான் என்ற இந்த நாட்டில் வாழும் அனைவருமே ஹிந்துக்கள்தான்.

எப்படி பிரிட்டனில் உள்ளவர்கள் பிரிட்டிஷ்காரர்களோ, அமெரிக்காவில் உள்ளவர்கள் அமெரிக்கர்களோ அதுபோலவே இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களும்கூட ஹிந்துக்கள்தான்.

மத - நம்பிக்கை - அடிப்படையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்றாலும் நாட்டு அடிப்படையில் அவர்கள் ஹிந்துக்கள்தான்" என்று கூறியுள்ளார் - மோகன் பாகவத்

கோல்வால்கர் என்ன கூறுகிறார்?

இது இவராகக் கூறுவதில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை விளக்கக் கர்த்தாவாகிய ஆர்.எஸ்.எஸ். இரண்டாவது தலைவர் ஆன கோல்வால்கரின் விளக்கம்தான் இது!

இங்கே வாழும் முஸ்லீம்கள்,  கிறித்துவர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

அதோடு, இராமனையும், கிருஷ்ணனையும் அவர்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார்.(ஆதாரம்: Bunch of Thoughts - 'ஞானகங்கை' நூல்)

"ஹிந்துஸ்தானத்தில் வாழும் ஹிந்துக்களல்லாதார் ஹிந்துப் பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு, ஹிந்து சமயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப்போற்றி, ஹிந்து இனம், அதனுடைய பண்பாடு ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக் கூடாது. அதாவது அவர்கள் இந்நாடு, அதனுடைய பழமையான பாரம்பரியம் ஆகியவற்றைக் காண சகியாத தன்மையினையும், நன்றி கெட்ட தன்மையினையும் முற்றிலும் நீக்கிவிட்டு உறுதியான எண்ணத்துடன் அன்பையும், பக்தியையும் அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளுதல் வேண்டும். ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் அவர்கள் அந்நியராக இருப்பதை விட்டொழிக்க வேண்டும். அவ்விதம் இருக்க அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் ஹிந்து சமுதாயத்திற்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக, சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக நடத்தப்படுவதனையோ அல்லது பிரஜா உரிமையினையோ கூட அடைய அருகதையற்றவர்களாக, சுருங்கக் கூறுமிடத்து எதனையும் கோர முடியாத மக்களாக வாழ்தல் வேண்டும். இவ் வழியினைத் தவிர அவர்கள் பின்பற்றுவதற்கு வேறு வழியே கிடையாது." (We or Our Nation Hood Defined) என்று கூறியுள்ளார்.

அதில் ஒரு பகுதியை மறைத்து விட்டு மீண்டும் அதனைப் புதுப்பிக்கிறார் மோகன்பகவத் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் .

"ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணபகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்."             (தினமணி 16.10.2000)

இவ்வாறு கூறியவர் மேனாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன்.

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதே!

இந்தியா - அரசியல் சட்டப்படி ஒரு மதச் சார்பற்ற நாடு; Secular State) இந்தியாவின் குடிமகன் இந்தியன் என்று அழைக்கப்படுவதே இன்றுள்ள நடைமுறை வழமையாகவும் உள்ளது. அதில் பன்மதத்தவர், பல இனத்தவர், பல மொழியினர், பல பண்பாட்டுக்கு உரியவர்கள் உண்டு.

மனுதர்மத்தில் திராவிடம்

ஏன் இவர்கள் கொண்டாடும்  - இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக இடம் பெற வைக்க விரும்புகிற மனுதர்ம சாஸ்திரத்தில்கூட,

மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் சுலோகம் 44-இல்

"பௌண்டரம் ஔண்டரம் திரவிடம்

காம்போசம் யவ நம் சகம் பாரதம்

பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம்"

(வங்கம், புந்தேல்கண்ட்(உத்திரப்பிரதேசம், பிகார்), திராவிடம், கம்போடியா, பாலி, யவனம், சீனம், கிராதம் (ஆப்கான்), தக்கானம் இப்பிரதேசங்களை உள்ளடக்கியவர்கள், பாரத தேசத்தவர்கள் அனைவரும் சூத்திரர்களாகிவிட்டனர்.)

"திராவிடம்" என்பது மனுதர்மத்திலேயே இடம் பெற்றுள்ளதே!

இந்தியாவின் பல நாடுகளின் உள்ள டக்கமே இந்தியா என்பதற்கு மனுதர்ம சாஸ்திரமே தக்க சான்று அல்லவா!

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தப் பேச்சில் புதைந்துள்ள மாபெரும் ஆபத்து இது ஹிந்து ராஷ்டிரம் -ஹிந்து நாடுதான் என்ற பிரகடனம் ஒளிந்து தலையை மெல்ல எட்டிப் பார்த்து, 'நாடி'ப் பார்க்கிறது

செக்யூலர் இந்தியா அல்ல இது என்று மறுக்கும் ஹிந்துத்துவ ஆணவம்தானே இது!

இந்து என்று ஒப்பவில்லையென்றால்

குடியுரிமை கூட கிடையாதாம்!

கோல்வால்கர் கூறியபடி கிறித்தவர்கள் இராமனை வணங்க வேண்டும். இஸ்லாமி யர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும், இன்றேல் அவர்களுக்கு ஹிந்து நாடாகிய இந்த நாட்டில் வாழ உரிமை இல்லை என்பது தான் இப்போது ஒத்திகையாகக் களத்திற்கு வந்துள்ளது. எனவே, இந்த விஷமத்தை முளையிலேயே வேரோடும், வேரடி மண்ணோடும் கிள்ளி எறிய வேண்டும்!

மதசார்பற்ற சக்திகளே கிளர்ந்தெழுக!

இது ஹிந்துஸ்தான் அல்ல; இந்தியா.. இந்தியா.. இந்தியா...

நாட்டில் உள்ள அனைத்து மதச் சார்பற்ற முற்போக்கு சக்திகள், கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ஓரணியில், ஓர் குரலில் இந்த மாபெரும் ஆபத்தினைக் கண்டித்து பெரு முழக்கம் பெருந்திரள்  அணியாக எழ வேண்டும்! எழ வேண்டும்!!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை
9-2-2017

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலைக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று, கடந்த பல மாதங்களாக நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்காமல் தள்ளிக் கொண்டே, பொறுப்பு ஆளுநரை அதுவும் மகராஷ்டிரத்தின் ஆளுநரை, நியமனம் செய்ததால், ஆளுநர் பணியை குடியரசு நாளில்கூட அவர் செய்யவேண்டியதை - மற்றவர், முதல்வர் செய்தார் என்பது ஒரு சிறு எடுத்துக்காட்டு.

அதுபோலவே ஜனநாயகம் தமிழ்நாட்டில் எங்கே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு விடுமோ என்ற கவலை பல முற்போக்கு ஜனநாயகவாதிகளிடம் இருப்பதற்குக் காரணம் - உடனடியாக தமிழ்நாட்டிற்கு நிரந்தர ஆளுநரை மேலும் காலந்தாழ்த்தாமல் நியமிக்கவேண்டும்.

அந்த நியமனம் என்ன அவ்வளவு கடினமான ஒன்றா மத்திய அரசுக்கு?, பலருக்கும் புரியவில்லை! ‘‘அரசியல்'', இதிலும் உள்ளதோ என்று பலரும் அய்யுறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

- கி.வீரமணி,

சென்னை  தலைவர்,

8.2.2017   
திராவிடர் கழகம்

 

அ.இ.அ.தி.மு.கவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று (5.2.2017) பிற்பகலில் கூடிய கூட்டத்தில், தற்போது முதல் அமைச்சராக உள்ள மாண்புமிகு திரு.ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கடிதத்தை அ.தி.மு.க.வின் தலைமையான பொதுச்செயலாளரிடம் கொடுத்துள்ளார். அவரே கட்சியின் பொதுச்செயலாளரான திருமதி வி.கே.சசிகலா அவர்களே முதல்அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று  முன்மொழிந்துள்ளார்.

அதன்படி, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான எம்.எல். ஏக்களால் திருமதி சசிகலா அவர்கள் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்க தனது இசைவினைத் தெரிவித்த நிலையில்  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முந்தைய ஜெயலலிதா அரசின் கொள்கை நிலைப்பாடுகளை அப்படியே பின்பற்றும் தனது தலைமையிலான அரசு என்றும் தனது ஏற்புரையில் தெளிவாக்கியுள்ளார்.

ஒருமனதாக இத்தேர்வு அமைந்திருப்பதும், கட்சித் தலைமை வேறு, ஆட்சித்தலைமை வேறு என்று இரட்டை அதிகார நிலைப்பாட்டினால் பலவகையான அதிகார முரண்கள் ஏற்பட இனி இடமில்லை என்பதோடு, முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியவர் ஒருவரே என்பதால், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியின் கட்டுக்கோப்பும், கட்டுப்பாடும் நிலை நிறுத்திக்காட்டப்பட்டுள்ளன.

பெரிதும் ஆணாதிக்கம் கோலோச்சும் உலகில் மீண்டும் ஒரு பெண், கட்சித்தலைமை, ஆட்சித்தலைமை இரண்டையும் பெற்று அரசியல் பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல திருப்பமே! - வரவேற்கப்படவேண்டியதே!

புதிய முதல் அமைச்சருக்கு நமது வாழ்த்துகள்!

- கி.வீரமணி,

தலைவர்,  திராவிடர் கழகம்

சென்னை
5.2.2017

Banner
Banner