ஆசிரியர் அறிக்கை

‘க.ச.' அய்யா என்று அந்தப் பகுதியில் மிகுந்த அன்போடும், மதிப்போடும் அனைவராலும் அழைக்கப்படும் பொத்தனூர் மானமிகு க.சண்முகம் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.

திருச்சி நேஷனல் கல்லூரியில் படித்த மாணவர் பருவந்தொட்டு, திராவிடர் கழகக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் தொடங்கி இன்றுவரை நூலிழை பிறழாமல் கொள்கைத் தீவிரத்துடனும், கட்டுப்பாட் டுடனும், கண்ணியத்துடனும் பண்பாட்டின் பெட்டகமாக அடக்கத்தின் உருவமாக நம்மிடையே அவர் வாழ்ந்து வருகிறார் என்பது அவருக்கு மட்டுமல்ல; நமக்கும், இயக்கத்திற்கும் பெருமையாகும்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தலைவராகவும், மண்டலத் தலைவராகவும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் (தந்தை பெரியார் காலத்திலேயே), அதன் துணைத் தலைவராகவும், தற்போது அதன் தலைவராகவும் இருக்கக் கூடிய கொள்கைச் சீலர் ஆவார்.

சேலம் மாவட்டத் தலைவராக இருந்து கழகம் நடத்திய பேராட்டங்களில் எல்லாம் புன்னகை முகத்தோடு பங்கு கொண்டு சிறைப்பட்டவர்.

‘மிசா'வில் சிறைப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தவர்.

அவருடைய பொதுவாழ்வு என்பது திறந்த புத்தகம் - கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மதிக்கத் தக்க பண்பாளர்.

அவரின் தனிவாழ்வுக்கும், பொதுவாழ்வுக்கும் உற்ற துணைவராக இருந்தவர் அவரது துணைவியார் மறைந்த திருமதி சுந்தரம்பாள் அம்மையார் ஆவார். இந்த நேரத்தில் அவரையும் நினைவு கூர்வது அவசியமாகும்.

இவர் தந்தை பெரியார் வாழ்ந்த வயதுவரை வாழ விரும்பினார் - அதனைச் சாதித்தும் முடித்துள்ளார்! மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் நூற்றாண்டும் கண்டு இயக்கத்திற்கும், பொதுத் தொண்டுக்கும் பயன்படவேண்டும் அதற்கு நல்ல உடல் நலத்துடன் அவர் நீடு வாழ வேண்டும் என்பதே நமது அவா!

கடவுள் மறுப்பாளர்கள் பலரும் இத்தகைய 90 ஆண்டுகளைத் தாண்டி 100 ஆண்டு சதம் அடித்தவர்கள் உள்பட விரைவில் ‘‘கழகப் பாராட்டு விழா'' ஒன்றை சென்னையில் சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.

96 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்குக் கழகத்தின் சார்பில் அன்பு நிறைந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

2.7.2018

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிறிவி) நாளேடான 'தீக்கதிர்' 56ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு 84ஆம் ஆண்டில் உள்ள 'விடுதலை' நாளேடு  வாழ்த்துகிறது.

கொள்கை ஏடுகள் - அதிலும் நாளேடு நடத்துவது சறுக்குப் பாறையில் ஏறும் பணி; எதிர் நீச்சல் பணியே!

லட்சியங்களைப் பரப்பும் போது லட்சங்களை எதிர்பார்க்க முடியாது.

நமது கொள்கை நாளேடுகளான 'முரசொலி' 'தீக்கதிர்'; இப்போது வார ஏடான, 'ஜனசக்தி' போன்றவைகளை பொது மக்கள் வாங்கிப் படித்தால், அவர்களின் அறியாமை இருள்போய், பொது அறிவும், சமூகநீதி பற்றியும், வருண - வர்க்கப் போராட்ட வரலாறும், பின்னணியும் புரியும்.

இந்த அறிவாயுதங்கள் இன்றைய இருள்சூழ்ந்த கால கட்டத்தில் மிகவும் தேவை.

வாழ்க  பணி - வெல்க, வெல்கவே!

- கி. வீரமணி

ஆசிரியர்

'விடுதலை'

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தமிழர் தலைவர் கருத்து

சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றும், அதில் தலையிட முடியாது என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் கூறியிருக்கிறார்.

மற்றொரு நீதிபதி ஜஸ்டிஸ் சுந்தர் சபாநாயகரின் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

மூன்றாவது நீதிபதியின் முடிவே இறுதி யானது என்பது சட்டப்படி உள்ள நிலை.

ஜனநாயகம் தனது பயணத்தில் பாதி சென்றுள்ளது; அடுத்து எப்படியோ என்பதுதான் யதார்த்தம்.

தமிழ்நாட்டில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிழைக்குமா - பிழைக்காதா என்பது பிறகே தெரியும் - விரிவான அறிக்கை பிறகு.

 

- கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

14.6.2018

கருத்து சுதந்திரம் - ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதா?

தொலைக்காட்சி விவாதத்தில்  ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர்  தாக்குதல் நடத்துவதா?

கோவையில் 8.6.2018 அன்று 'புதிய தலைமுறை'யின் சார்பில் நடைபெற்ற  கோவை வட்ட மேசை தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற திரைக் கலைஞர் அமீர்  மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு ஆகியோர்மீது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதற்கு திராவிடர் கழகத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் செய்தியாளர்மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஊடக கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கின்ற எதேச்சதிகாரப் போக்கு எனவும்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் இன்று (10.6.2018) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் "புதிய தலைமுறை" தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சிக்காக அதன்மீது  வழக்கு, அமீர் போன்ற கலைஞர்கள்மீதும் தமிழக அரசு வழக்குகளைப் போட்டிருப்பது ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கின்ற எதேச்சதிகாரப் போக்காகும்.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கக் கூடிய அளவிற்கு அதீதமாகச் சென்றுள்ள நிலையை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. கூட்டத்தில் பார்வையாளர்களாக வந்து கலவரம் செய்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் மீது எந்த வழக்கும் இல்லாததும், விவாதத்தில் பங்கேற்றவர்கள்மீதே வழக்குகளைப் போட்டிருப்பது என்பதும்  அடித்தவனை விட்டு விட்டு, அடிபட்டவன் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் கொடுஞ் செயலாகும். தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையே நிலவுகிறது. இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

10.6.2018

 

திருவாரூரில் 1.6.2018 அன்று நடைபெற்ற ‘கலைஞர்-95' பிறந்த நாள் விழாவின்போது, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றப் புறக்கணிப்பைக் கைவிட்டு, சட்டமன்றத்திற்குச் சென்று, ஜனநாயகக் கடமையான எதிர்க்கட்சியின் பணிகளைத் தொடரவேண்டுமென தோழமைக் கட்சித் தலைவர்களான தோழர் முத்தரசன் (சி.பி.அய்.), சு.திருநாவுக்கரசர் (காங்கிரசு) ஆகியோர் கூறிய கருத்தை, தாய்க் கழகமான திராவிடர் கழகம் சார்பில், எனது உரையில், நான் வற்புறுத்தியதோடு, சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரோ, ஆளுங் கட்சியோ அதீதமான முறையில் கருத்துரிமை, பேச்சுரி மையைப் பறிக்கும் நிலை ஏற்பட்டால், அடுத்து அதை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடருவதோடு, ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு அணியாக ஆளும் கட்சி தவிர, மற்றவர்கள் ஓரணியில் திரண்டு நிற் போம்; நிற்பார்கள் என்று கூறி, அவர்களது ஆக்கபூர்வ யோசனைகளை ஆதரித்து வழி மொழிந்தேன்.

நேற்று (2.6.2018) அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில், இந்த யோசனையைப் பற்றி பரிசீலித்து, சட்டமன்றம் செல்வது என்று முடிவு செய்தது மிகவும் வரவேற்கத்தகுந்த ஒன்று.

ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட ஓரணியில் அனைவரும் திரளவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

3.6.2018

Banner
Banner