ஆசிரியர் அறிக்கை

ஜக்கிவாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியாருக்கு பத்ம விபூஷன் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது - எவ்வகையில் அவர் அந்த விருதுக்குத் தகுதியானவர் என்று தமிழர் தலைவர் வினா எழுப்பி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒவ்வொரு ஆண்டும், குடியரசு நாளில் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

அதனைப் பெரிதும் செல்வாக்கு, பரிந்துரை அழுத்தம் காரணமாகவே பலர் பெறுகிறார்கள் - தகுதி என்பதோ தேடிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்!

மிகப் பிரபலமான நோபல் பரிசு தேர்வு முறை - குழுகூட இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பதற்குப் பிரபல அமெரிக்கப் புதின எழுத்தாளரான இர்விங் வேலஸ் அவர்கள் எழுதிய The Prize என்ற புதினம் இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, துலாக்கோலைப் பிடித்து, சல்லடை போட்டு ஆராய்ந்து வழங்கப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு பத்ம விருதுக்குத் தேர்வாகியுள்ள - ஒரு விந்தையாளரான ஜக்கி வாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியார் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உயரிய விருதான பத்ம விபூஷன் எவ்வகையில் அவர் அதற்குத் தகுதி?

இவரது ஆன்மீகத் தொண்டுபற்றி கோவையில் சில மாதங்களுக்குமுன் பெற்றோர்கள் விட்ட கண்ணீர் கொஞ்ச நஞ்சமல்ல.

பிரபல நக்கீரன் வார ஏட்டில் பல்வேறு செய்திகள் ஆதாரங்களுடன் வெளிவந்தனவே!

இதுதான் பத்ம விபூஷன் விருதுக்குத் தகுதியா?

அதுபோல, தஞ்சை மாவட்டம் பாபநாசம் பார்ப்பனர் கோடி கோடியாக சம்பாதித்து, டில்லியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக, உச்சநீதிமன்றம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்த சிறீசிறீ ரவிசங்கர் கார்ப்பரேட் சாமியார் - இவ்வாட்சிக்கு வேண்டியவர். அபராதம் கட்டினாரா என்று தெரியவில்லை! பிறருக்கு அவர் அறிவுரை வழங்கும் நிலை சரியா?

இவ்வாண்டு என்.எல்.சி. நெய்வேலி நிறுவனத்தில் 26 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் மாசு குற்றவாளிக்கு சிறப்பு விருந்தினராக சிவப்பு கம்பள வரவேற்பு என்பது வெட்ககரமானது; கண்டனத்திற்குரியது.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?


இதுதான் நம் சுதந்திரத்தின் லட்சணமா? என்று வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளும் ஏழை - விவசாயிகளின் குரலை எப்படி கேட்க முடியும் - அமிழ்ந்திப் போகிறதோ?
மத்திய அரசு இப்படி நடந்துகொள்வதுதான் தேசியம் போலும்!

 

- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்


சென்னை,27.1.2017 .

 

தமிழ்ப் புத்தாண்டின் உண்மைத் தொடக்கமான

தை முதல்நாள் திராவிடர் திருநாளாம்

பொங்கல் திருநாள் என்ற அறுவடைத் திருவிழா!

கருகவில்லை, இவ்வாண்டு வேளாண்மை மட்டும்

விவசாயிகளின் உயிரும், வாழ்வும்கூடத்தான்!

கருகிட்ட சோகத்தின் உச்சம்- சொல்லொணாத் துயரம்;

என்றாலும், இந்த இருட்டு நிரந்தரமாகாமல்,

புதியதோர் விடியலை எதிர்நோக்கி,

துயரப் பொங்கலானாலும்,

பொங்குக பொங்கல், துன்பங்களும், துயரங்களும்

விடைபெற்று தை பிறந்து புதுவழி பிறக்கட்டும்!

பகுத்தறிவாளர்கள் இப்படித்தான் சிந்திப்பர்!

அனைவருக்கும் புத்தாண்டுப் பொங்கல்

வாழ்த்துகள்!

- கி.வீரமணி

தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை
13.1.2017

அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற திராவிடர் இயக்கத் தலைவர்களிடம் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவருமான வள்ளல் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 100 ஆம் ஆண்டு பிறந்த நாள் 17.1.2017 ஆம் தேதி வருகிறது.

அவர் முதலமைச்சராக இருந்தபோது, 9000 ரூபாய் வருமான வரம்பைத் திரும்பப் பெற்று, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டினை 50 சதவிகிதமாக உயர்த்தி, ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 68 சதவிகிதமாக தமிழ்நாட்டில் உயர்த்தியவர்.

தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவாக ஓர் ஆண்டு முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாடி,  அவரது தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தத்தினை தமிழக அரசு ஏற்று, அரசு ஆணை பிறப்பித்து வரலாறு படைத்தவர்.

பெரியார் ஒலி, ஒளிக்காட்சியினை மிகச் சிறப்பாக நடத்திய திராவிடர் இயக்கத் தீரர் ஆவார்!

மாவட்டம் தோறும் பெரியார் நினைவுத் தூணை நிறுவியவர்!

17.1.2017 அன்று அவர் நூறாவது பிறந்த நாளில், அவரது சிலை உள்ள ஊர்களில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து நமது பங்களிப்பைச் செலுத்தக் கேட்டுக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


சென்னை
13.1.2017

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில்

ஆதாயம் காணவே இந்த முடிவு!

இது அரசமைப்புச் சட்டத்துக்கும் - மரபுக்கும் முரணானது!

தேர்தல் முடிந்தபின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

 

அய்ந்து மாநிலங்களில் ஒரு குட்டி பொதுத் தேர்தல்போல மார்ச் முதல் வாரத்தில் நடத்திட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட் தேர்தலுக்குமுன் பிப்ரவரி  முதல் தேதியன்று தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது - அரசியல் லாப நோக்கத்தோடுதான்; இது அரசமைப்புச் சட்ட விதிக்கும், மரபுக்கும் முரணானது என்பதால், 5 மாநில தேர்தலுக்குப் பின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதிமுதல் மார்ச் 8 ஆம் தேதிவரை உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளுக்குப் பாதகம்!

இதன்படி இந்த அறிவிப்பு வந்த நொடியிலிருந்து, குறிப்பிட்ட மாநிலங்களில் எந்தவித சலுகை, லாபம் ஆளும் கட்சிக்கு ஏற்படுத்தும் - எதிர்க்கட்சிகளுக்குப் பாதகத்தை உண்டாக்கும் என்பது முக்கியமானது. எந்த சலுகைகளும் அரசு தரப்பிலிருந்து செய்யப்படக்கூடாது என்பது அரசியல் சட்ட விதி!

இந்திய அரசியல் சட்ட விதி 12 இன்படி, ‘அரசு’(State) என்பது அரசு, நாடாளுமன்றம், மாநில அரசுகள், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் எல்லாவற்றையுமே குறிக்கும்.

இந்தத் தேர்தல் தேதிகள் அறிவிப்புகளுக்குப் பின், மத்திய நிதியமைச்சர் இவ்வாண்டு புதுமையாக, முன்பிருந்த முறையை மாற்றி, (மார்ச் 31 ஆம் தேதிக்குமுன் முன்கூட்டியே மத்திய பட்ஜெட் தாக்கல் இருக்கும்) பிப்ரவரி ஒன்றாம் தேதியே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

நடக்கவிருப்பது ஒரு குட்டி பொதுத் தேர்தல்

ஒரு குட்டி பொதுத் தேர்தல் (Mini General Election) போல 5 மாநிலங்களில் தேர்தல் (அதிலும் உ.பி. மிகப்பெரிய மாநிலம்) நடைபெறும் நிலையில், மத்திய ஆளுங்கட்சி பட்ஜெட்டில் பல வரிச் சலுகைகள், பிற சலுகைகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளபடியால், அது அரசியல் சட்ட விரோதமாகிவிடும்; அந்த 5 மாநில தேர்தல் களில் அதன் தாக்கம் பிரச்சாரத்திற்கு - நேரிடையாகவோ - மறைமுகமாகவோ பயன்படுத்தப்படும் என்பது வெளிப்படை!

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை

ஜனநாயகத் தத்துவப்படியும், அரசியல் சட்ட நெறிமுறைப்படியும், பட்ஜெட் தாக்கலை மார்ச் மாதத்திற்குத் தள்ளி வைக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், அய்க்கிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ், தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட 12, 13 கட்சிகள் அணியாகத் திரண்டு தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, இந்த பட்ஜெட் தாக்கல் தேதியை தள்ளி வைத்து ஜனநாயக அரசியல் சட்ட நெறிகளைச் செயல்படுத்தும் வகையில் உரியது செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

வெறும் மரபு மட்டுமல்ல -சட்டமும் உண்டு

இது முற்றிலும் நியாயமான கோரிக்கையே! அதுமட்டுமல்ல; இது அரசியல் சட்ட மரபினையும் காப்பாற்றிட உதவும் - வெறும் மரபு மட்டும் அல்ல ; சட்ட அடிப்படையும் இதில் அடங்கியுள்ளது. நாம் முதல் பத்தியில் சுட்டிக்காட்டியுள்ளதுபோல, ‘அரசு’ என்றால், நாடாளுமன்றத்தையும் உள்ளடக்கியது என்பது இந்திய அரசியல் சட்டத்தின் 12 ஆவது பிரிவு வற்புறுத்தும் ஒன்றாகும். அப்படி இருக்கையில், இந்த பட்ஜெட் தாக்கல் சரியானதாக இருக்க முடியாதே!

இவ்வாண்டு இந்த முறையைப் பின்பற்றுவதைத்  தள்ளி வைத்து, வரும் அடுத்தாண்டு முதல் புதிய முறையில் செயல்படுத்தலாமே!

பட்ஜெட் தாக்கல் தேதியைத் தள்ளி வைத்திடுக!

அரசு இதில் பிடிவாதம் காட்டத் தேவையில்லை.

அமைச்சரவை கூடி முடிவு எடுப்பதே சரியானதல்ல. அதில் எந்தச் சட்டச் சிக்கலும் ஏற்பட வழியில்லையா?

எதிர்க்கட்சிகள் கேட்பதை நாம் ஏற்பதா என்ற வீம்போ, தன்முனைப்போ மத்திய அரசுக்குத் தேவையில்லை.

எனவே, எதிர்க்கட்சிகளின் இந்த ஜனநாயகப் பாதுகாப்பு நடவடிக்கையை ஏற்று பட்ஜெட் தாக்கலை மார்ச் 8 ஆம் தேதிக்குமேல் நடத்துவதே சரியானதாகும்.

கி.வீரமணி  
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை
6.1.2017

தி.மு.க. செயல் தலைவர்

தளபதி மு.க.ஸ்டாலினுக்கு தாய்க்கழகம் வாழ்த்து!

தி.மு.க.வின் பொருளாளராகப் பணியாற்றி வந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களால் முன்மொழியப்பட்டு, இன்று (4.1.2017) நடை பெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் செயல் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது மகிழ்ச்சிக் குரியதாகும்.

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உடல்நலம் கருதியும், ஓய்வு கருதியும் சிறப்பான பணிகள் தொடரவும், இந்த அருமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியலில் இது ஒரு முக்கியமான திருப்பமாக அமையும் வகையில், அவர்தம் செயல்பாடுகள் அமையும் - அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தாய்க்கழகம் உரிமையோடு பாராட்டுகிறது - வாழ்த்துகிறது!

கழகப்பொருளாளராகஇருந்துஅரும் பணியாற்றியுள்ளார். இப்பொழுது அதிகாரப் பூர்வமான இந்த அறிவிப்பின்மூலம் செயல் தலைவராகியுள்ள நிலையில், மேலும் அவருக்கு இது வலிமையைக் கொடுக்கும் - சேர்க்கும் என்பதில் அய்யமில்லை.

தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் வளர இது பயன்படும்.

திராவிடர்இயக்கக்கொள்கைகள்,சித் தாந்தங்கள்இவர்பொறுப்பேற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் மேலும் மிளிரட்டும் - வாழ்த்து கள்!

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முழு நலம் பெற்று, தனது தொண்டினைத் தொடரவேண்டும் என்றும் தாய்க்கழகம் விழை கிறது.

- கி.வீரமணி

தலைவர்,  திராவிடர் கழகம்.

சென்னை 
4.1.2017

Banner
Banner