ஆசிரியர் அறிக்கை

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தமிழர் தலைவர் கருத்து

சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றும், அதில் தலையிட முடியாது என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் கூறியிருக்கிறார்.

மற்றொரு நீதிபதி ஜஸ்டிஸ் சுந்தர் சபாநாயகரின் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

மூன்றாவது நீதிபதியின் முடிவே இறுதி யானது என்பது சட்டப்படி உள்ள நிலை.

ஜனநாயகம் தனது பயணத்தில் பாதி சென்றுள்ளது; அடுத்து எப்படியோ என்பதுதான் யதார்த்தம்.

தமிழ்நாட்டில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிழைக்குமா - பிழைக்காதா என்பது பிறகே தெரியும் - விரிவான அறிக்கை பிறகு.

 

- கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

14.6.2018

கருத்து சுதந்திரம் - ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதா?

தொலைக்காட்சி விவாதத்தில்  ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர்  தாக்குதல் நடத்துவதா?

கோவையில் 8.6.2018 அன்று 'புதிய தலைமுறை'யின் சார்பில் நடைபெற்ற  கோவை வட்ட மேசை தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற திரைக் கலைஞர் அமீர்  மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு ஆகியோர்மீது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதற்கு திராவிடர் கழகத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் செய்தியாளர்மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஊடக கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கின்ற எதேச்சதிகாரப் போக்கு எனவும்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் இன்று (10.6.2018) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் "புதிய தலைமுறை" தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சிக்காக அதன்மீது  வழக்கு, அமீர் போன்ற கலைஞர்கள்மீதும் தமிழக அரசு வழக்குகளைப் போட்டிருப்பது ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பறிக்கின்ற எதேச்சதிகாரப் போக்காகும்.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கக் கூடிய அளவிற்கு அதீதமாகச் சென்றுள்ள நிலையை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. கூட்டத்தில் பார்வையாளர்களாக வந்து கலவரம் செய்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் மீது எந்த வழக்கும் இல்லாததும், விவாதத்தில் பங்கேற்றவர்கள்மீதே வழக்குகளைப் போட்டிருப்பது என்பதும்  அடித்தவனை விட்டு விட்டு, அடிபட்டவன் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் கொடுஞ் செயலாகும். தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையே நிலவுகிறது. இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

10.6.2018

 

திருவாரூரில் 1.6.2018 அன்று நடைபெற்ற ‘கலைஞர்-95' பிறந்த நாள் விழாவின்போது, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றப் புறக்கணிப்பைக் கைவிட்டு, சட்டமன்றத்திற்குச் சென்று, ஜனநாயகக் கடமையான எதிர்க்கட்சியின் பணிகளைத் தொடரவேண்டுமென தோழமைக் கட்சித் தலைவர்களான தோழர் முத்தரசன் (சி.பி.அய்.), சு.திருநாவுக்கரசர் (காங்கிரசு) ஆகியோர் கூறிய கருத்தை, தாய்க் கழகமான திராவிடர் கழகம் சார்பில், எனது உரையில், நான் வற்புறுத்தியதோடு, சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரோ, ஆளுங் கட்சியோ அதீதமான முறையில் கருத்துரிமை, பேச்சுரி மையைப் பறிக்கும் நிலை ஏற்பட்டால், அடுத்து அதை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடருவதோடு, ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு அணியாக ஆளும் கட்சி தவிர, மற்றவர்கள் ஓரணியில் திரண்டு நிற் போம்; நிற்பார்கள் என்று கூறி, அவர்களது ஆக்கபூர்வ யோசனைகளை ஆதரித்து வழி மொழிந்தேன்.

நேற்று (2.6.2018) அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில், இந்த யோசனையைப் பற்றி பரிசீலித்து, சட்டமன்றம் செல்வது என்று முடிவு செய்தது மிகவும் வரவேற்கத்தகுந்த ஒன்று.

ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட ஓரணியில் அனைவரும் திரளவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

3.6.2018

தமிழர்  தலைவர்  அறிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தை சரியான அணுகுமுறையின்றி, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி  வரலாற்றில் இதற்குமுன் எப்போதும் தமிழ் நாட்டில் நடந்திராத வகையில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது தமிழ்நாட்டு மக்களிடத்தில் மட்டுமல்ல; மனிதநேயம், மனித உரிமை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் சட்டப்படி எந்தவித விதிமுறை களையும், நியதிகளையும்கூட பின்பற்றாது, ஆலை முதலாளிகளுக்கு அனுசரணையாக மாநில அரசும், காவல்துறையும் நடந்துகொண்ட போக்கு கண்டிக்கத் தக்கதாகும். தூத்துக்குடியை சுடுகாடாக்கும் போக்கிற்கு முடிவு கண்டாகவேண்டும்.

மக்களின் கண்டன உணர்வைப் பதிவு செய்யும் வகையிலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய அளவில் நாளை (25.5.2018) அறிவிக்கப்பட்டுள்ள முழு வேலை நிறுத்தத்தை வெற்றியடையச் செய்யுமாறு பொது மக்களையும், வணிகப் பெருமக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

 

-கி.வீரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்.

சென்னை

24.5.2018

பி.ஜே.பி. பிரமுகர் எஸ்.வி.சேகர் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் கடுமையான வகையில் கண்டனத்தைத் தெரிவித்து, வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில்  அவர்மீது,  அவதூறு பரப்பி அமைதியை சீர்குலைப்பது (இ.த.ச.504), ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக குற்றம் இழைக்கத் தூண்டுவது (இ.த.ச. 505 (1) (சி), சொல், செயல் மூலமாக பெண்களின் நடத்தையை இழிவுபடுத்துவது (இ.த.ச.509), தமிழ்நாடு பெண் களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமறைவான அந்த நபர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டும், நீதிமன்றம் மனுவைத் தொடர்ந்து தள்ளுபடி செய்துவிட்டதோடு, கடுமையாக நீதிபதி சாடியும் உள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், அந்தப் பேர்வழி, சென்னையில் நேற்று முன்தினம் (12.5.2018) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளார்! அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணைஅமைச்சர்பொன்.இராதாகிருஷ்ணன்அவர்களை யும் சந்தித்துள்ளார். இந்தச் செய்தி நேற்றே (13.5.2018) தொலைக் காட்சிகளிலும், விடுதலை' நாளிதழிலும், இன்று தினத்தந்தி'யிலும் வெளிவந்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஒரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும், தனக்கு வணக்கம் தெரிவித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் சென்னை யில்தானிருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும்'' என்று சவால் விடுத்துள்ளார் (ஒன் இண்டியா டாட்.காம்).

சென்னைப் பெருநகரக் காவல்துறை அவரைக் கைது செய்யாதது ஏன்? ஒரே நேரத்தில் 62 ரவுடிகளைப் பிடித்துச் சாதனை படைத்த திறமைக்குச் சொந்தமானது சென்னைப் பெருநகரக் காவல்துறையும் - அதன் சிறப்பான ஆணையரும்.

இத்தகு காவல்துறை எஸ்.வி.சேகர் விஷயத்தில் கைகட்டிக் கொண்டு இருப்பது ஏன்? யாருடைய கட்டளையால் இந்த நிலை? தமிழக அரசின் தலைமைச் செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே!

இந்த நிலை தமிழக அரசுக்கும், சென்னை பெருநகரக் காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதாகாது.

உடனே, சவால் விடும் அந்தப் பேர்வழியை இன்றே கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

14.5.2018

Banner
Banner