ஆசிரியர் அறிக்கை

 

திருவாரூரில் 1.6.2018 அன்று நடைபெற்ற ‘கலைஞர்-95' பிறந்த நாள் விழாவின்போது, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றப் புறக்கணிப்பைக் கைவிட்டு, சட்டமன்றத்திற்குச் சென்று, ஜனநாயகக் கடமையான எதிர்க்கட்சியின் பணிகளைத் தொடரவேண்டுமென தோழமைக் கட்சித் தலைவர்களான தோழர் முத்தரசன் (சி.பி.அய்.), சு.திருநாவுக்கரசர் (காங்கிரசு) ஆகியோர் கூறிய கருத்தை, தாய்க் கழகமான திராவிடர் கழகம் சார்பில், எனது உரையில், நான் வற்புறுத்தியதோடு, சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரோ, ஆளுங் கட்சியோ அதீதமான முறையில் கருத்துரிமை, பேச்சுரி மையைப் பறிக்கும் நிலை ஏற்பட்டால், அடுத்து அதை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடருவதோடு, ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு அணியாக ஆளும் கட்சி தவிர, மற்றவர்கள் ஓரணியில் திரண்டு நிற் போம்; நிற்பார்கள் என்று கூறி, அவர்களது ஆக்கபூர்வ யோசனைகளை ஆதரித்து வழி மொழிந்தேன்.

நேற்று (2.6.2018) அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில், இந்த யோசனையைப் பற்றி பரிசீலித்து, சட்டமன்றம் செல்வது என்று முடிவு செய்தது மிகவும் வரவேற்கத்தகுந்த ஒன்று.

ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட ஓரணியில் அனைவரும் திரளவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

3.6.2018

தமிழர்  தலைவர்  அறிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தை சரியான அணுகுமுறையின்றி, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி  வரலாற்றில் இதற்குமுன் எப்போதும் தமிழ் நாட்டில் நடந்திராத வகையில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது தமிழ்நாட்டு மக்களிடத்தில் மட்டுமல்ல; மனிதநேயம், மனித உரிமை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் சட்டப்படி எந்தவித விதிமுறை களையும், நியதிகளையும்கூட பின்பற்றாது, ஆலை முதலாளிகளுக்கு அனுசரணையாக மாநில அரசும், காவல்துறையும் நடந்துகொண்ட போக்கு கண்டிக்கத் தக்கதாகும். தூத்துக்குடியை சுடுகாடாக்கும் போக்கிற்கு முடிவு கண்டாகவேண்டும்.

மக்களின் கண்டன உணர்வைப் பதிவு செய்யும் வகையிலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய அளவில் நாளை (25.5.2018) அறிவிக்கப்பட்டுள்ள முழு வேலை நிறுத்தத்தை வெற்றியடையச் செய்யுமாறு பொது மக்களையும், வணிகப் பெருமக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

 

-கி.வீரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்.

சென்னை

24.5.2018

பி.ஜே.பி. பிரமுகர் எஸ்.வி.சேகர் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் கடுமையான வகையில் கண்டனத்தைத் தெரிவித்து, வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில்  அவர்மீது,  அவதூறு பரப்பி அமைதியை சீர்குலைப்பது (இ.த.ச.504), ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக குற்றம் இழைக்கத் தூண்டுவது (இ.த.ச. 505 (1) (சி), சொல், செயல் மூலமாக பெண்களின் நடத்தையை இழிவுபடுத்துவது (இ.த.ச.509), தமிழ்நாடு பெண் களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமறைவான அந்த நபர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டும், நீதிமன்றம் மனுவைத் தொடர்ந்து தள்ளுபடி செய்துவிட்டதோடு, கடுமையாக நீதிபதி சாடியும் உள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், அந்தப் பேர்வழி, சென்னையில் நேற்று முன்தினம் (12.5.2018) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளார்! அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணைஅமைச்சர்பொன்.இராதாகிருஷ்ணன்அவர்களை யும் சந்தித்துள்ளார். இந்தச் செய்தி நேற்றே (13.5.2018) தொலைக் காட்சிகளிலும், விடுதலை' நாளிதழிலும், இன்று தினத்தந்தி'யிலும் வெளிவந்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஒரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும், தனக்கு வணக்கம் தெரிவித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் சென்னை யில்தானிருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும்'' என்று சவால் விடுத்துள்ளார் (ஒன் இண்டியா டாட்.காம்).

சென்னைப் பெருநகரக் காவல்துறை அவரைக் கைது செய்யாதது ஏன்? ஒரே நேரத்தில் 62 ரவுடிகளைப் பிடித்துச் சாதனை படைத்த திறமைக்குச் சொந்தமானது சென்னைப் பெருநகரக் காவல்துறையும் - அதன் சிறப்பான ஆணையரும்.

இத்தகு காவல்துறை எஸ்.வி.சேகர் விஷயத்தில் கைகட்டிக் கொண்டு இருப்பது ஏன்? யாருடைய கட்டளையால் இந்த நிலை? தமிழக அரசின் தலைமைச் செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே!

இந்த நிலை தமிழக அரசுக்கும், சென்னை பெருநகரக் காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதாகாது.

உடனே, சவால் விடும் அந்தப் பேர்வழியை இன்றே கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

14.5.2018

ஜனநாயகத்தைக் காப்பதற்கான ஒரே வழி!
தமிழர் தலைவர்

ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

 

நிர்வாகத் துறை, சட்டமியற்றும் துறை, நீதித்துறை ஆகிய மூன்றும் மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் முரண்பட்டு செயல்படுவது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல. இத்தகு மோதலை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜனநாயக நாட்டில் நிர்வாகத் துறை (ணிஜ்மீநீutவீஸ்மீ) சட்டமியற்றும் துறை ((Executive)) நீதித்துறை (Judiciary) - இம்மூன்றும் அவரவர் சுதந்திரமாகச் செயல்பட்டுக் கடமையாற்றவேண்டியவைகள்.
இதில் நீதித்துறைதான், நிர்வாகம் மற்றும் சட்டம் இயற்றும் சட்டமன்றத் துறை- இரண்டும் தங்கள் அதிகார உரிமையை மீறியோ அல்லது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டளைகளை மீறியோ நடந்துகொண்டால், அதைக் கண்டிக்க, நீதியை நெறிப்படுத்தவேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளடக்கிய ஒன்று.

நான்காவது தூண்(The Fourth Estate)பத்திரிகை - ஊடகத் துறையாகும்!

நீதித்துறையின் சுதந்திரம் மதிக்கப்படுகிறதா?

பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியானது பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றன.
இந்நான்கு துறைகளின் நிலை நாடறிந்த நடப்பு களாகும்!

இவ்வாட்சியில் நீதித்துறையின் சுதந்திரம் எப்படி மதிக்கப்படுகிறது? என்பதைக் கண்டு உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது!

பதவிக்கு வருமுன் Minimum Government with Maximum Governance ஆளுமையை அதிகப்படுத்தி, அரசாங்கம் என்பதை குறைந்த அளவு நடத்துவோம் என்று இலட்சிய முழக்கம் செய்தது மோடி அரசு.

ஆனால், அப்படி நடந்துகொள்கிறதா? ‘திட்டக்கமிசன்‘ ஒழிக்கப்பட்டு, ‘நிதி ஆயோக்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கி வைத்துவிட்டனர்!

நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் முழுவதும் முடக்கப்பட்ட நிலையில், (வரலாறு காணாத அதனை!) அதனை மாற்றிட எந்த முயற்சியும் ஆளும் தரப்பில் எடுக்கவே இல்லை. காரணம், விவாதம் இல்லாமலேயே முடிந்தால், பல்வேறு குறைபாடுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டு, இவர்களது இயலாமை அம்பலப்படுத்தப்படும் நிலை ஏற்படாதல்லவா? அந்த நோக்கத்தில்தான் எதிர்க்கட்சிகளை அழைத்து பிரதமர் பேசி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்திடும் நல்முயற்சிகளை மேற்கொள்ளவே இல்லை!

உச்சநீதிமன்றம்தான் மக்களின் கடைசி நம்பிக்கை யாகும்!

அங்கு ஏற்பட்டுள்ள இருதரப்பின் கசப்புணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ள, கூச்சமில்லாது பகிரங்கமாகவே தலைமை நீதிபதியைப் பார்க்க பிரதமரின் தூதுவர் அனுப்பப்பட்ட அப்பட்டமான நிகழ்வு, அதன் வரலாற்றில் எப்போதும் இதற்குமுன் ஏற்பட்டதே இல்லை.

காவிரி நீரும் -
உச்சநீதிமன்றமும்!

உச்சநீதிமன்ற தீர்ப்பு, 6 வாரங்களுக்குள் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டே ஆக வேண்டும்; எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் கால அவகாசம் தரப்படமாட்டாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்ததே உச்சநீதிமன்றம் - அதனை மதித்ததா மோடி அரசு?

கருநாடகத் தேர்தலை மனதிற்கொண்டே, அங்கே பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்க தமிழ்நாட்டின் நியாய மான கோரிக்கையான காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை - உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி அமைப்பதில் திட்டமிட்டே அதனை மீறியது மத்திய அரசு.

‘வீரங்காட்டிய' உச்சநீதிமன்றமோ மத்திய அரசு கேட்ட கால அவகாசத்தை அளித்தது எப்படி?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஊறுகாய் ஜாடிக்குள் ஊறிக்கொண்டுள்ளதே!

‘கொலிஜியம்' முடிவை மத்திய அரசு ஏற்காதது ஏன்?

உத்தரகாண்டில் தலைமை நீதிபதியாக இருந்த மிகவும் திறமையும், நேர்மையும் வாய்ந்த உத்தரகாண்ட் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கே.எம்.ஜோசப் அவர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற ‘கொலிஜியம்' பரிந்துரைத்ததை ஏற்க மறுத்துவிட்டது மத்திய அரசு. அனைவரும் சந்தேகப்படவேண்டிய நிலை இது; உத்தரகாண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது செல்லாது என்று பா.ஜ.க. அரசிற்கு விரோதமாக, தீர்ப்பளித்தவர் அவர் என்பதால், வேறு ஏதோ சாக்குப் போக்குக் கூறி, அவரது பெயரை மட்டும் மத்திய அரசு ஒப்புக்கொள்ளாமல், மற்றவர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவில்லையா?

உச்சநீதிமன்ற ‘கொலிஜியம்' நேற்று கூடி, மீண்டும் ஜஸ்டீஸ் கே.எம்.ஜோசப் அவர்களின் பெயரை பரிந் துரைத்துள்ளது.

இரண்டாவது முறையாக அதே பெயரைப் பரிந்து ரைத்தால், அதை மத்திய அரசு - குடியரசுத் தலைவர் ஏற்பதே பொதுவான சரியான நடவடிக்கை.

மீண்டும் மறுத்து திருப்பி அனுப்பினால் மத்திய அரசு - (உச்ச)நீதிமன்ற மோதல் ஜனநாயக மாண்பையே சீர்குலைப்பதாகும்.

கேரளாவுக்கு Adequate Representation முடிந்து விட்டது என்று மத்திய அரசின் சட்ட அமைச்சர் கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி எங்கே போயிற்று?

உச்சநீதிமன்ற நீதிபதிகளில், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் - பாலியல் நீதி, சமூகநீதிக்கு - குழிதோண்டியதுபோல் இன்று மொத்தம் 31 பேரில், ஒரே ஒரு பெண் நீதிபதி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரே தவிர, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  ஒரு நீதிபதிகூட  நியமிக்கப்படவே இல்லை, பல ஆண்டுகாலமாக!

கேள்வி கேட்பாருண்டா? பெண்களை நியமனம் செய்யும்போதுகூட - உயர்ஜாதி - முன்னேறிய ஜாதியிலி ருந்துதானே நியமிக்கப்பட்டுள்ளார். சமூக அநீதி - பாலியல் அநீதியாகவும் பரிமளிக்கிறதே!

அப்போதெல்லாம் மத்திய அரசுக்குப் ‘போதிய பிரதிநிதித்துவம்' - Adequate Representation வாதம் நினைவுக்கு  ஏன் வருவதில்லை?

நீதித்துறையில் நடைபெற்றுவரும் வேடிக்கைகள் - தலைமை நீதிபதிமீது நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மெண்ட்' தீர்மானம் கொண்டு செல்லும் அளவுக்குச் சென்று விட்ட அவலம் எத்தகைய கீழிறக்கம்?

இதற்குப் பிறகு, அவரே தாமாகவே முன்வந்து பதவி விலகியிருக்கவேண்டாமா?

ஆனால், மாறாக, திடீரென்று அந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் அமர்வு, அடுத்த நாளே அது செல்லாது என்று தள்ளுபடி. என்பதெல்லாம் எந்தவித பெருமைக்குரியது?

மோதல் போக்குகள் தவிர்க்கப்படவேண்டும்

எத்தகைய விசித்திரங்கள் - வேதனைமிக்க நிகழ்வுகள் - மக்களிடத்தில் நம்பிக்கை கலகலத்துவிட்ட நிலையை நோக்கி நாடு செல்லுவது நல்லதுதானா? இல்லை! இல்லை!! எனவே, மோதல் போக்கின்றி, ஆட்சியாளர்கள் இதில் சரியாக நடந்துகொள்வது காலத்தின் கட்டாயம்; அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்தைக் காப்பாற்றிடவும் இது உதவும்.

தலைவர்

திராவிடர் கழகம்.

 

சென்னை    
12.5.2018   


சேலம் வேலூர் - பொத்தனூரில் பிறந்து பாண்டமங்கலத்தில் குடியேறி வாழ்ந்தவரும், நமது இயக்க ஆதரவாளரும், இயக்கத் தோழர்கள் மறைந்த கு. சண்முகம், டாக்டர் ஆறுமுகம், வாழும் ஓய்வு பெற்ற நீதிபதி நல்லேந்திரன் ஆகியோரின் தமக்கையாருமான திருமதி. மங்களத்தம்மாள் பாண்டமங்கலத்தில் 10.5.2018 மாலை

4 மணியளவில் காலமானார் என்பதை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் மூலம் அறிந்து, மிகவும் வருந்துகிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர்,

திராவிடர் கழகம்

 

சென்னை   
11.5.2018                             

Banner
Banner