ஆசிரியர் அறிக்கை


அறிஞர் அண்ணா அவர்களது தலைமையில் 1967இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அமைந்த அமைச்சரவையில், சட்ட அமைச்சராக பொறுப்பேற்று, பிறகு கலைஞர் அமைச் சரவையிலும் தொடர்ந்த, சுய மரியாதை வீரர் மானமிகு செ.மாதவன் அவர்கள் நேற்று (3.4.2018) தனது சொந்த ஊரான சிங்கம்புணரியில் காலமானார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தமும், துன்ப மும் அடைந்தோம்! (அவருக்கு வயது 85)

தி.மு.க.வில் அக்காலத்தில் இருந்த சட்ட ஞானம் மிக்க வழக்குரைஞர். எதிர்க்கட்சியாக தி.மு.க. இருந்த போது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கும் தனிநபர் மசோதாவை தயாரித்து (காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்) சட்டப் பேரவையில் தாக்கல் செய்தவர்.

பிறகு அவரே 1967இல் அண்ணா முதல் அமைச்சரான பிறகு, அவர் ஆணையினை ஏற்று, சட்ட அமைச்சர் என்ற முறையில் தந்தை பெரியார் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் சுயமரியாதைத் திருமணங்களை, சட்டப்படி தனிச்சட்டம் தயாரித்து நிறைவேற்றச் செய்ததில் முக்கிய பங்காற்றிய செம்மல் மானமிகு. செ.மாதவன் அவர்கள். கலைஞரின் அன்புக்குப் பாத்திரமாக இறுதி வரை திகழ்ந்தவர். தந்தை பெரியாரின் பாராட்டுகளைப் பெற்றவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான பண்பாளர்; மிகுந்த தன்னடக்கம் வாய்ந்தவர். அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.

அவருக்கு நமது வீர வணக்கம்!

அவரை இழந்து வாடும் அவர்தம் வாழ்விணையர், மகள்கள், மகன் குடும்பத்தினருக்கும், தி.மு.க.விற்கும் நமது ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: மறைந்த மாதவன் அவர்களின் மகளிடம் தொலைத்தொடர்பு மூலம் இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்தார் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

1. மண்டலத்தலைவர்  காரைக்குடி சாமி.திராவிடமணி தலைமையில் மாவட்டக் கழகத் தலைவர்கள் ஆசிரியர் அரங்கசாமி மற்றும் காளாம்பூர் ராஜாராம் கழகப் பொறுப் பாளர்கள், தலைமைக் கழகம் சார்பில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்துவர்.

2. டில்லியில் நடந்த கருத்தரங்க தொடக்கத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தீக்குளித்த ம.தி.மு.க. தோழர் சிவகாசி இரவி இன்று விடியற்காலை உயிரிழந்தார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.

தோழர்களின் உணர்வு பாராட்டத்தக்கது என்றாலும், அதீத உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற தற்கொலையில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல.

தோழர்கள் இதனைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போராடி வெற்றி பெறவேண்டுமே தவிர, தற்கொலை பிரச்சினைக்குத் தீர்வு அல்ல.

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


சென்னை
2.4.2018

 

சென்னை மெரினா கடற்கரையில் காவிரி மற்றும் மாநில மக்கள் உரிமைகளைக் காக்கத் திரளும் - அறவழியில் அமைதியாக மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்டும் போராட்டத்தை ஏன் மாநில அரசே தடுக்க வேண்டும்? வறண்ட காவிரியைப் போல வறண்ட உள்ளம் கொண்ட மத்திய அரசின் போக்கைக் கண்டிப்பதற் காகவே இந்தப் போராட்டம்! அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பார்க்க வேண்டியது மட்டும்தான் தமிழக அரசின் காவல் துறையினரின் கடமையாக இருக்க வேண்டும்!

அமைதி வழியில் கடற்கரையில் தமிழக மக்கள் திரண்டு, தமது உணர்விற்கு வடிகால் தேடுவதையும், மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதமான மாநில உரிமைகள் பறிப்பினை எதிர்த்துக் குரல் கொடுப்பதையும் ஏன் தடுக்க வேண்டும்?

தமிழக அமைச்சர்கள், ஆளும் கட்சியின் உண்ணாவிரதம் என்பதை விட அது மேன்மையானதாயிற்றே! ஏன் தடுக்கிறீர்கள்?  உணர்வுகளைக் காட்ட அனுமதிப்பதே சரியானது. அரசும், காவல்துறையும் தமது போக்கினை மாற்றி மறுபரிசீலனை செய்து மெரினா கடற்கரைப் போராட்டத்திற்கு அனுமதிக்கவேண்டும். இது ஒரு முக்கிய வேண்டுகோள்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.

சென்னை     1.4.2018


விழுப்புரம் மண்டல திராவிடர் கழகத்தின் மேனாள் செயலாளர் மானமிகு மு.கண்ணன் அவர்கள் நேற்று (25.3.2018) இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

கழகத்தின்மீதும், கொள்கையின் மீதும், தலைமையின்மீதும் மதிப்பும், நம்பிக்கையும், கடைசி மூச்சுவரை அன்புடனும், கட்டுப்பாட்டுடனும் கடமையாற்றியவராவார். கழகம் நடத்திய மாநாடுகள், போராட்டங்கள் என அனைத்திலும் தமது வாழ்விணையருடன் கலந்து கொண்டு, சிறைத் தண்டனையும் ஏற்றுக்கொண்டவர்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், தமது கடின உழைப்பினால் படித்து ஆசிரியராகப் பணிபுரிந்து, பின் தலைமையாசிரியராக உயர்ந்தவர். திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் பரவ உறுதுணையாக இருந்தவர். பல மாணவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்ற வழிகாட்டியவர்.

அவரது குடும்பமே திராவிடர் கழக கொள்கைக் குடும்பம். அவரின் வாழ்விணையர் அமுதா கண்ணன்  கல்லக்குறிச்சி கழக மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்.

அவரது மகன் டாக்டர் க.ராஜ்மோகன் தந்தை பெயரிலேயே மருத்துவமனை (கண்ணன் மருத்துவமனை) நடத்தி வருகிறார்.

மு.கண்ணன் அவர்களை இழந்து வாடும்   அவருடைய குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர்,

திராவிடர் கழகம்


சென்னை

26.3.2018

தொடர்புக்கு: அமுதா கண்ணன் 9176650393, 9176667784

தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர்  வேண்டுகோள்

ராமராஜ்ஜிய யாத்திரை என்று  கூறி விசுவ இந்து  பரிஷத் என்ற சங் பரிவார் அமைப்பு தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது; அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை  அமளிக்காடாக்கத்  திட்டமிட்டுள்ளனர். வருமுன் காக்கும் வகையில் தக்க கவனம் செலுத்தி, இந்த அமளி ராம யாத்திரைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதியளிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டை ஜாதி வெறி, மதவெறி என்ற வெறிகளா ல் அமளிக்காடாக்கிட தூபம்போடும் விசுவ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரையை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் (தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ், முகமது அபுபக்கர்) ஆகியோரின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும்.

மதுரை - காஞ்சிபுரத்தில்...

தற்போது சில இடங்களில் மதுரை, காஞ்சிபுரம் பகுதி களில் கிறித்துவ சமுதாயத்தினரைத் தாக்கியும், பெண்களின் கையில் உள்ள பைபிளைக் கிழித்தும், அதுபோல முசுலீம்களின்  வழிபாட்டு இடத்தில் திரிசூலத்தை நட்டும்-  வீண்வம்பு, வன்முறைக் கலவரங்களை  ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங் பரிவார்கள் விதைத்து, செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் அவல நிலை உள்ளது!

புதுச்சேரியில் காவல்துறையின்  அனுமதி பெற்று நடத்தப்பட்ட திராவிடர் கழகக் கூட்டத்தில்  கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட  1992 இல்  இந்தியா முழுவதும் இரத்த ஆறுகள், கொலைகள், மதக்கலவரங்கள் நடைபெற்ற நிலையில், அமைதிப் பூங்காவாக தமிழ் நாடுதான் விளங்கியது. ‘பெரியார் பூமி'தான் என்பதையும் நிரூபித்தது.

மேலும் இதற்குக் காரணம் திராவிட இயக்க ஆட்சிகள் என்று ஏடுகளே எழுதின. அந்த வரலாற்றைத் தலைகீழாக்கி, ‘‘பெரியார் சிலையை உடைப்போம்; அம்பேத்கர் சிலையை சேதப்படுத்துவோம்'' என்றெல்லாம் விஷமங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் வகையறாக்கள் வித்தூன்றுவது வீண்கலவரங்களை விதைக்கும் தவறான முயற்சிகளே!

எனவே, தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு இதில் கண் டிப்பாக சட்டம், ஒழுங்கைப் பராமரித்திட காவல்துறைக்குத் தக்க சுற்றறிக்கை ஆணைகளைப் பிறப்பிக்கவேண்டும்.

திராவிடர் கழகம் எந்த மதத்திற்கும் சார்பானது அல்ல; அதே நேரத்தில், மனிதநேயம், மனித உரிமைகள் அடிப்படையில் இப்படிப்பட்ட வன்முறைகளைத் துவக்கினால், அது அடக்கப்படுதல் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள ஓர் இயக்கம்.

இதில் முழு கவனத்தையும் தற்போதுள்ள ஆட்சி செலுத்தி, சமூக நல்லிணக்கத்தைக் குழிதோண்டி புதைக்க முயலும் நாசகார மதவெறிச்  சக்திகளை அடக்கி வைக்க, தயவு தாட்சண்யமின்றி உரிய நடவடிக்கைகளை காவல் துறைமூலம்  எடுக்கவேண்டியது அவசரம், அவசியம்!

குதிரை காணாமல் போன பின் லாயத்தை இழுத்துப் பூட்ட வேண்டாம்;  முன்கூட்டியே நடவடிக்கை தேவை! தேவை!!

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை  
19.3.2018

Banner
Banner