ஆசிரியர் அறிக்கை


நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந் தொண்டர் வெங்கரை மு. பழனியப்பன் (வயது 86) அவர்கள் இன்று (19.2.2018) காலை 6 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருடைய உடல் இன்று மாலை 4 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடல்கொடையாக வழங்கப்படுகிறது.  அந்த வகையில் மறைந்தும் தொண்டறச் செம்மலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இளம் வயது முதல் இயக்கத்தில் நீங்காப் பற்றுடன் ஈடுபாடு கொண்டவர்; கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் தவிர்க்காமல் பங்கேற்றவர். அவர் மறைவு கழகத்திற்கும் இழப்பாகும். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி. வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்                                           


கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளர் எம். முகம்மதப்பா (வயது 102) நாகர்கோயிலில் நேற்று (8.2.2018) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

இளம் வயது முதல் கழகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு இயக்கத்தை வளர்த் தவர் ஆவார். கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டவர்.

தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார் கால முதல் மூப்படைந்த நிலையிலும்கூட இயக்க வீரராக வாழ்ந்தவர் ஆவார். அவரது கடந்த கால இயக்கத் தொண்டு என்றும் மறக்கப்பட முடியாத ஒன்றாகும். அவர்தம் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குமரி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.

தலைவர்,
திராவிடர் கழகம்  

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு

தீர்மானத்தை தோற்கடித்த பிஜேபி, அதிமுக

தமிழர் தலைவர் கண்டனம்

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துத் தோற்கடித்த கட்சிகளுக்கு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற கோரிக்கை 1996ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குடியரசுத் தலைவர் உரைமீது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு பற்றிய திருத்தம் ஒன்றை மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.கே. ரெங்கராஜன் (சிபிஎம்) நேற்று கொண்டு வந்துள்ளார். அதன் மீதான வாக்கெடுப்பில் திருத்தத்துக்கு எதிராக பிஜேபியும், அ.இ.அ.தி.மு.க.வும் வாக்களித்துள்ளன.

இந்தியா முழுவதும் சட்டப் பேரவைகளில் 9 விழுக்காடு அளவுக்குத்தான் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 542 பேர்களில் 64 பேர்கள் மட்டுமே பெண்கள். மாநிலங்களவையில் 245 பேர்களில் 27 பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர். இதில் உலக அளவில் இந்தியா 148ஆம் இடத்தில் உள்ளது என்பது வெட்கக் கேடானதாகும்.

இந்த நிலையில் பிஜேபி, அஇஅதிமுக, சிவசேனா, தெலுங்குதேசம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்திருப்பது பெண்கள் உரிமைக்கான அவர்களின் நிலைப்பாட்டைத் தான் அம்பலப்படுத்தும். இக்கட்சிகளுக்கு பெண்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். ஆனால் அவர்களின் உரிமைகள் என்றால் எதிர் நிலையா? கசப்பா? மகா வெட்கக் கேடு.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்கள் தொகையில் சரி பகுதி எண்ணிக்கை உள்ள பெண்கள் இவர்களை அடையாளங் கண்டு உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்


சென்னை
8.2.2018

 


சுயமரியாதை இயக்கத் தீரர் மாணவப் பருவந்தொட்டுக் கழகக் கோட்பாடு - கடப்பாடு மிக்க தொண்டறச் செம்மல்! தொண்ணூற்று நான்கு வயதிலும் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பொன்மலை மானமிகு அ. கணபதி அவர்கள் நேற்று மாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

தென்னக இரயில்வேயில் பணியாற்றும்போது திராவிடர் கழக தொழிற்சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ. அமைப்பில் பங்கு கொண்டு, மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் சி. ஆளவந்தார்; பி.வி. இராமச்சந்திரன் போன்றோரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றியவர்.

அய்யா, அம்மா காலந்தொட்டு இன்று வரை நம்மோடு நல்லன்பு காட்டி, நல்லாதரவு காட்டி, திருச்சியில் இயங்கும் கைவல்யம் முதியோர் இல்லத்தின் காப்பாளராகவும் இருந்து மறைந்த அந்தச் சுயமரியாதை சுடரொளிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

அவ்வப்போது இயக்கத்திற்கு தவறாது நன்கொடைகள் அளித்தும், வைப்பு நிதியாக அவற்றை இயக்கத்திற்குப் பயன்பட வேண்டுமென்று திட்டமிட்ட நன்கொடை அருளாளர் அவர்கள் ஆவார்கள். அவருக்கு இரு மகள்கள் உண்டு. தோழர் திலகவதி பெரியார் மணியம்மை மேனிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

தான்மறைந்தாலும், தன் கண்களையும்,  உடலையும் மருத்துவ மனைக்குக் கொடையாகக் கொடுக்கச் செய்த அந்த உள்ளமானது தந்தை பெரியார் கொள்கையால்  வரித்துக் கொள்ளப்பட்டதாகும்.

அவர் பிரிவால் வருந்தும் அவருடைய  குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத்தின் சார்பில்  பொதுச் செயலாளர்  இரா. ஜெயக்குமார் கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்துவார்.


சென்னை                                                          தலைவர்,
6.2.2018                                                      திராவிடர் கழகம்  


முதுபெரும் பெரியார் பெருந் தொண் டரும், தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவருமான இராமியம்பட்டி மானமிகு ஆர்.வி. சாமிக்கண்ணு அவர்கள் (வயது 90) இன்று காலை 9.30 மணிக்கு மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். 70 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழகத் தொண் டில் ஈடுபட்டு, அந்த வட்டாரத்தில் கழகக் கொள்கையைப் பரப்பியவர், கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றுச் சிறை சென்றவர்; தமது 90 ஆம் வயதில்கூட கழகத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் பங்கேற் கத் தவறாதவர்; நீண்ட கால தொடர்ந்த 'விடுதலை' வாசகர் இவர். சொந்த ஊரில் தந்தை பெரியார் சிலையை நிறுவியவர், தம் மறைவுக்குப் பிறகு கழகக் கொள்கைப்படி, தன் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று எழுதி வைத்த கொள்கை வீரர். ஒகேனக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை யின்போதுகூட அவரைப்  பற்றி விசாரித்து உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் மறைவு கழகத்திற்கு முக்கிய இழப்பாகும். அவர்தம் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறோம். அளப்பரிய அவர்தம் இயக்கத் தொண்டுக்கு வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஊமை. செயராமன் தலைமையில்  இறுதி மரியாதை செய்யப்படும்.

சென்னை                                                                                தலைவர்,
2.2.2018                                                                            திராவிடர் கழகம்  Banner
Banner