ஆசிரியர் அறிக்கை

தந்தை பெரியாரின் தலை மாணாக்கர் அறிஞர் அண்ணாவின் 110ஆவது பிறந்த நாள் இன்று (15.9.2018)! அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது, தந்தை பெரியார் எழுதிய செய்திக்குத் தலைப்பே;

"அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!" என்பதாகும்!

அறிஞர் அண்ணா உடலால் மறைந்தாலும் அவர் ஊட்டிய உணர்வும், அவர் கண்ட கழகமும், அது கொண்ட கொள்கைகளும் கால வெள்ளத்தைத் தாண்டிய லட்சியப் பயணத்தை நடத்தி வெல்லும் என்றார்! அவரிட்ட அஸ்தி வாரத்தின்மீது ஆட்சிகளின் சாதனை பல அடுக்குகளாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

அண்ணா வழியில் அயராது உழைத்து கலைஞர் அண்ணாவை அரசியல் வரலாறாக நிறுத்தினார்.

புத்தர் போன்ற பெரியாருக்கு அசோகனாக இருந்து ஆட்சியை அய்யாவுக்கு அர்ப்பணித்தவர் அண்ணா! இரண்டாம் அசோகனாகவிருந்து 'அஜாதசத்ரு - எதிரிகளை கலங்கடிப்பவராக' அவரது இதயத்தை இரவல் பெற்றவர் கலைஞர்!

இன்று  நான்காம் தலைமுறையாக அரசியல் ரீதியாக - தொடர்கிறது; தளபதி மு.க. ஸ்டாலின் தலைமை யேற்றதன் மூலம்.

அதே கொள்கை, அதே பாதை, அதே இலக்கு, அதே போராட்ட உணர்வு இவை 'திராவிடமாக' களத்தில் நிற்கிறது!

தோன்றிடும் அறைகூவல்களை வென்றிடும் வாய்மைப் போரில் இயக்கம் வென்று, அண்ணா க()ட்டிய அரசியல் - வெறும் பதவிக்காக அல்ல -ஆட்சிக்காக அல்ல. இந்த இனத்தின் மீட்சிக்காக என்பதை உலகுக்கு உணர்த்த சுயமரியாதை கொப்பளிக்க சூளுரைப்போம்!

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!

 

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

ஈரோடு

15.9.2018

 

தமிழக அரசே தக்க நடவடிக்கையையும்- பாதுகாப்பினையும் வழங்குக!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், சிறந்த எழுத்தாளருமான நண்பர் ரவிக்குமார் அவர்களின் உயிரைக் குறி வைத்து இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளில் ஒன்று திட்டமிட்டிருக்கிறது என்பது கேரளத்திலிருந்து வந்துள்ள செய்தியாக உலவி வருகிறது!

இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமல்ல, பொதுவாழ்வில் உள்ள அனைவருமே கவலைப்படுவதோடு, வெட்கமும், வேதனையும் அடைவார்கள் என்பது உறுதி.

மாற்றுக் கருத்துகளுக்கு இடம் அளிப்பதுதான் ஜன நாயகத்தின் மாண்புகளில் மிகவும் முக்கியமானது. கருத்துரிமை உயிரினும் மேலானது.

அவருக்கு உரிய பாதுகாப்பினை தமிழக அரசு வழங்கிடுவதும், இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களுக்குக் காரண மானவர்களை அறிந்து அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுப்பதும் மிகவும் அவசர அவசியமாகும் என்பதை திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

30.8.2018

சேலம் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் செயலாளர் 'கடவுள் இல்லை'  சிவகுமார் (வயது 65) நேற்று (26.8.2018) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார், என் றாலும் இன்னும்  அவரின் பணி இயக்கத் திற்குத் தேவை என்ற நிலையில் மறைந்து விட்டார்.

இனிமையும், எளிமையும், அடக்கமும் உள்ள செயலாக்கம் மிக்க ஒரு தோழரை சேலம் மாவட்டம் இழந்து விட்டது. அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி. வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

 

பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர் களின் முதன்மையானவர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள். (‘வாஜ்பேயம்’ என்ற உயர் வகை யாகம் செய்யும் உரிமை பெற்ற வடநாட்டுப் பார்ப்பனர் குழுவின் ஜாதிய அடையாளப் பெயர்தான் அவருக்கு ‘வாஜ்பேயி’ என்ற ஜாதி ஒட்டு)

நாடாளுமன்றத்தில் நீண்டகால எதிர் கட்சித் தலைவராக, மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்தவர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பங்கேற்று ஜனசங்கம், பா.ஜ.க என்ற அரசியல் கட்சி யில் தலைமை நிர்வாகப் பொறுப்பினை வகித்தவர்.

கொள்கையால் நாம் மாறுபட்டாலும்கூட அவரது இனிய சுபாவம், பழகும் பண்பு அனைவருக்கும் எடுத்துக்காட்டாகும்!

டெல்லியில் பெரியார் மய்யம்  2001 இல் திட்டமிட்டு இடிக்கப்பட்டபோது, பிரதமராக இருந்த அவரை  முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையில், சந்திரஜித்யாதவ், வைகோ போன்ற தலைவர்களுடன் நாம் சென்று அவரைச் சந்தித்தபோது, இடிக்கப்பட்டது தவறு என்பதை உணர்ந்து  உடனடியாக , டில்லி துணை ஆளுநரை வி.பி.சிங் வீட்டிற்கே சென்று மாற்று இடம் அவர்கள் விரும்பும் வகையில் தருவதற்கு உத்தரவிட்ட பெருந்தன்மை குணம் கொண்டவர்; அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறது திராவிடர் கழகம்.1986 மே மாதத்தில் மதுரையில் நடைபெற்ற ‘டெசோ’ (ஈழத்தமிழர் உரிமைக்கான) மாநாட்டில் வாஜ்பேயி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய அரசியலில்  மாற்றாரை மதிக்கும் பண்பும் கொண்ட மனிதநேய ஒருவரை இந்திய பொதுவாழ்வு இழந்தது, இது மிகப்பெரிய இழப்பு ஆகும்.

திராவிடர் கழகத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

16.8.2018

மாநாடு ஒத்திவைப்பு

மேனாள் பிரதமர் வாஜ்பேயி மறைவின் காரணமாக திண்டுக்கல்லில் 18.8.2018 அன்று நடைபெறவிருந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

 

 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு உள்பட பல்வேறு மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளைப்பற்றிப் பேசியதன் அடிப் படையில், ஜெனீவாவிலிருந்து திரும்பிய நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மனித உரிமைக் கவுன்சிலில் பேசியதே மனித உரிமைக்கு எதிரானதா? இத்தகு ஜனநாயக விரோத விபரீத நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.8.2018

Banner
Banner