ஆசிரியர் அறிக்கை


சென்னையை அடுத்த மதுரவாயல் காவல் நிலை யத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய பெரிய பாண்டியன்  வடநாட்டுக் கொள்ளைக்காரனைக் கைது செய்ய ராஜஸ்தான் சென்றபோது, கொள்ளைய ரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது திடுக்கிட வைக்கும் துயரச் செய்தியாகும். போதிய பாதுகாப்போடும் கூடுதலான எண்ணிக்கை பலத்தோடும் ஒருங்கிணைந்து நடந்து கொள்ளத் தவறியதால் ஏற்பட்ட இழப்பு இது. இனி மேலாவது புதிய அணுகுமுறை மேற்கொள்ளப்படட்டும்.  அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர் கதையாகவே இருக்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். குடும்பத்தாருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

உடுமலை சங்கர் கொலை வழக்கு: மரண தண்டனை தீர்ப்பு

ஜாதி வெறிக்குத் தரப்பட்ட தண்டனையை வரவேற்றுத் தமிழர் தலைவர் அறிக்கை

ஜாதி ஆணவக் கொலைக்குக் காரணமான பெண் ணின் தந்தை உள்பட, கூலிப்படையைச் சேர்ந்த

6 பேருக்கு சங்கர் (கவுசல்யா துணைவர்) கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் அவர்கள் தந்த நல்ல தீர்ப்பை நாடே வர வேற்கிறது; அதேநேரத்தில், மூவர் விடுதலை ஏன்? என்பதையும்பற்றிய விவாதமும் நடைபெறுகிறது!

ஜாதி வெறிக்கு இரட்டைத் தூக்கு!

இத்தீர்ப்பு ஜாதி வெறிக்கு எதிராக ஜாதி வெறியை இரட்டைத் தூக்கில் போட்ட சரியான தீர்ப்பு - வெறும் நபர்களுக்குத் தரப்பட்ட தண்டனையாக நாம் கருதவில்லை.

வயது வந்த பெண்ணுக்கு, தனது வாழ்விணைய ரைத் தேர்வு செய்யும் உரிமை - சலுகை அல்ல - பெற்றோர் கருணை அல்ல; சட்டப்படிக் கிடைத்துள்ள உரிமை! இதனை ஜாதிவெறியர்களும், மதவெறியர் களும் சல்லடம் கட்டிக் கொண்டு தடுக்க முயலுவது சட்ட விரோதம் மட்டுமல்ல; மனித உரிமை பறிப்புக் கொடுமையும் ஆகும்!

திராவிடர் கழகத்தின் சார்பில்

நடைபெற்ற கருத்தரங்கில்...

சென்னை பெரியார் திடலில் தோழர் கவுசல்யா சங்கர், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முழங்கிய முழக்கம் அவரது நெஞ்சை உருக்கும் உணர்வு பொங்கிய பேச்சு, அடங்கிக் கிடந்த ஆமைகளும், ஊமைகளும், சிங்கங்களாக மாறி கர்ஜிக்கத் தொடங்கி விட்டனர் என்பதையே உலகுக்குப் பறைசாற்றியது.

‘‘முந்தைய கவுல்சயா இறந்துவிட்டாள் - இன்றைய கவுசல்யா பெரியாரின் மகள் - புரட்சிக்காரி - ஜாதி ஒழிப்புப் புரட்சிக்காரி'' என்னும் அவரது வைரம் பாய்ந்த நெஞ்சுரம், சட்டப் போராட்டம் தொடங்கி மக்கள் போராட்டம்வரை அலுப்பு,சலிப்பின்றி போராடுவேன் என்றார்.

அவரது பெண்ணுரிமை - பிறவி அடிமை - ஜாதி ஒழிப்புப் போராட்ட லட்சியப் பயணத்தில் இத்தீர்ப்பு ஒரு துவக்க மைல்கல்!

ஜாதி வெறிக்கு இடமில்லை; ஜாதி, மதவெறியர் களைத் திருத்துவோம்!!

ஜாதிக்குப்

புதைகுழி வெட்டுவோம்!

பெற்றோர்களே, நீங்கள் ஊட்டி வளர்த்து, கண்ணை இமை காப்பதைப்போலக் காத்த பெற்ற பிள்ளைகளையே கூலிப்படை கொண்டு கொல்லத் தூண்டும் ஜாதிவெறியை விட்டொழித்து மனிதம் மலரும் மனிதர்களாக மாறுங்கள்!

காதல் நாடகம் என்று பேசி, ஆணவக் கொலைக்கு வித்திடுவோரும் இந்தத் தீர்ப்புக்குப்பின் திருந்தட்டும்!

பாசத்தை, ரத்த உறவைக் கொல்லும் ஜாதி மத வெறியை புதைக் குழிக்கு அனுப்புவோம்! புதியதோர் உலகு செய்வோம்!

கி.வீரமணி

தலைவர் ,        திராவிடர் கழகம்.

சென்னை
13.12.2017

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் கடந்த 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பேசிய பேச்சை திசை திருப்பும் வகையில் கருத்துத் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும், தலைக்கு விலை என்றெல்லாம் காவிகள் கூச்சலிடுகின்றனர். திருமாவளவன் அவர்கள் ‘நான் என்ன பேசினேன்?’ என்பதற்கான விளக்கமும் கொடுத்துள்ளார்.

பவுத்தக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உண்டு. திருப்பதி கோயிலிலிருந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில் என்று நீண்ட பட்டியலே உண்டு. மயிலை சீனி.வேங்கடசாமி  எழுதிய ‘‘பவுத்தமும் தமிழும்'' எனும் ஆய்வு நூலை ஒரு முறை படித்துப் பார்க்கட்டும்.

இதற்கு முன் சில இடங்களில் அவர்மீது வன்முறை ஏவப்பட்டுள்ளது. அதன்மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் அடுத்த கட்டத்திற்கு காவிகள் தாவியுள்ளனர்.

மிரட்டல், உருட்டல் கண்டு அஞ்சக் கூடியவர் அல்லர் மானமிகு திருமாவளவன் அவர்கள். அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது, நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. அவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கை தேவை!

‘‘புலி வாலை மிதிக்க வேண்டாம்'' என்ற சொலவடை உண்டு; அதற்குப் பதிலாக ‘‘சிறுத்தைகளின் வாலை மிதிக்க ஆசைப்படாதீர்’’ என்று எச்சரிக்கிறோம்!

கி. வீரமணி

தலைவர்,  திராவிடர் கழகம்

சென்னை  
9.12.2017

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நான்கு மலையாள நீதிபதிகள் இருக்கின்றனர். போதும் போதாதற்கு இப்பொழுது  இன்னொரு மலையாளியும் நியமிக்கப்பட உள்ளார். சுப்பிரமணியம் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர் தொழிலைச் செய்தது கூடக் கிடையாது.

பொதுவாக மற்ற மாநிலங்களில் நடைமுறை என்னவாக இருக்கின்றன? வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாநிலத்தில் பணியாற்றினால் அவர்களை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு  பரிந்துரைப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வெளி மாநிலக்காரர்கள் இங்கு பணியாற்றினால், அவர்களுக்குத் தாராளமாகவே உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்குச் சிபாரிசு செய்யப்படும் நிலை இருக்கிறது. ஏற்கெனவே உள்ள மலையாள நீதிபதிகளும் அப்படி நியமனம் செய்யப்பட்டவர்கள்தான். இப்பொழுது நியமிக்கப்பட உள்ள திரு. சுப்பிரமணியம் பிரசாத் அவர்களோ இங்கு பணியாற்றியதே கிடையாது. இப்படிப்பட்டவர்கள் சிபாரிசு செய்யப்படுவது தமிழ்நாட்டை ஏளனமாக நினைக்கும் அலட்சியப் போக்குதான் காரணமாக இருக்க முடியும். இந்த நிலை கண்டிக்கத்தக்கது - தவிர்க்கப்பட வேண்டியதும்கூட! போராட்ட வடிவமாக மாறுவதற்கு முன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், உச்சநீதிமன்றமும் மறுபரிசீலனை செய்வார்களாக!

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்


சென்னை  
7-12-2017

 

இன்று (29.11.2017) நகைச்சுவையரசர் கலைவாணர் அவர் களின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள்.

கலைவாணர் வாழ்க்கை தொண்டறத்தின் ஊற்றாகும். தனது வாழ்நாள் முழுவதும் வள்ளலாகவே வாழ்ந்தவர்; இன்றும் மக்கள் நெஞ்சங்களில் வாழ்பவர்.

தந்தை பெரியாரை தனது பகுத்தறிவு ஆசானாக்கிய தன்னிகரற்ற மாமனிதர்.

அவரது பிறந்த நாளில், ஒழுகினசேரியில் உள்ள அவரது இல்லத்தை தமிழக அரசு பழுது பார்த்து சிறப்புடன் வைக்க உதவிடுவது அவசரம், அவசியம்!

இல்லாமை என்பதை நீக்க பலருக்குக் கொடை தந்தவர் நிலை இப்படியா ஆகவேண்டும்?

எம்.ஜி.ஆர். அவரது கடன் மற்ற தொல்லைகளையெல்லாம் தீர்த்தார் என்று சொல்வார்கள்; எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா படாடோபமாகக் கொண்டாடும் தமிழக அரசு, குமரி மாவட்ட ஆட்சியர்மூலம் கலைவாணரின் இல்லத்தைப் பழுது நீக்கி பொலிவுடன் அமைத்துத் தர முன்வருதல் முக்கியமல்லவா?

உடனே செய்க, தாமதமின்றி என்பதே நம் வேண்டுகோள்! தமிழக அரசு செவி சாய்க்கட்டும்!

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்.


சென்னை  
29.11.2017

Banner
Banner