ஆசிரியர் அறிக்கை

நல்ல சமயம் இது - நழுவ விடாதீர் தமிழர்களே!

ஆர்.கே. நகரில் திமுகவே வெல்ல வேண்டும்!

அதிமுகவுக்கும் - பிஜேபிக்கும் சேர்த்துத் தோல்வியைத் தாரீர்!

தமிழர் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/nov/6/s8.jpg

சென்னை - ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வே வெல்ல வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை - இராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டமன்ற தொகுதி  இடைத் தேர்தல்  வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதி  12.4.2017 என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக அணியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றனர் என்பது அதிகாரிகள் திட்டவட்டமாக அறிந்த நிலையில், அத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. தேர்தலில் 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதும் வெளியானது.

வரும் டிசம்பர் 21ஆம் தேதி மீண்டும் அத்தொகுதியில் தேர்தலை நடத்திட ஆணையிட்டுள்ள தேர்தல் ஆணையம் கடந்த முறை எந்தக் காரணத்துக்காகத் இடைத் தேர்தலைத் தள்ளி வைத்ததோ, அந்தக் காரணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 'சிதம்பர ரகசியமோ!'

குற்றவாளிகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சம்பந்தப்பட்டவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்திருந்தால்தானே வரும் டிசம்பர் 21இல் மீண்டும் நடக்க இருக்கும் இடைத் தேர்தல் கையூட்டியின்றி நடைபெறும் என்ற நம்பிக்கையை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும்.

அவ்வாறு எந்த அறிவிப்பும், எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், நடக்க இருக்கும் இடைத் தேர்தலின் மீதான அவநம்பிக்கை நிழல் படிவதைத் தவிர்க்க முடியாது.

ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த  கால கட்டத்தில் 144 தடை உத்தரவு போட்டு பணப்பட்டுவாடா செய்ய வழி வகை செய்து கொடுத்தது தேர்தல் ஆணையம் என்பதை  தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்களே.

அது எப்படியோ போகட்டும்;  நடக்கவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். இந்தத் தேர்தலில் ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அந்த வேட்பாளர் கண்டிப்பாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு கொள்கை பூர்வ, நியாயமான காரணங்கள் ஏராளம் உண்டு.

அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும் - ஏன்?

குறிப்பாக ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது மத்திய அரசால் கொண்டு வரப்படவிருந்த பல திட்டங்களை, அவர் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமின்றித் திட்டவட்டமாக எதிர்த்தார். அவ்வாறு எதிர்க்கப்பட்ட திட்டங்களுள் ஒன்று -

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் (அந்தியோதயா அன்னயோஜனா). ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நவம்பர் (2016) முதல் தேதி முதல் தமிழ்நாட்டில் அது அமலுக்கு வந்து விட்டது.

அதேபோல தமிழகத்தின் எல்லையில்கூட உள்ளே நுழைய விட மாட்டேன் என்று முதல் அமைச்சர் ஜெயலலி தாவால் உறுதியுடன் நிராகரிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. திட்டம் ராஜநடை போட்டுத் தமிழகத்திலே வலம் வரும் நிலையை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மண் - தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் வீறுநடை போட்ட பூமி தமிழ்நாடு.

நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படியாகவே கிடையாது என்று அறுதியிட்டு உறுதியாகத் தடுக்கப்பட்ட மாநிலமும் தமிழ்நாடே! இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள் மருத்துவர்களாக ஏராளம் வர முடிந்தது.

'நீட்' மேல் தட்டு மக்களின் சதி

அதனைத் தடுக்க மேல் ஜாதி ஆதிக்க சதியால் திணிக் கப்படும் 'நீட்' தேர்வை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் 'நீட்' தேர்வு கூடாது என்று இரு சட்டங்கள் இயற்றப்பட்டும், அதற்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்குப் போதுமான முயற்சிகளை அளிக்க மாநிலத்தை ஆளும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தவறிவிட்டது.

குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கே அந்தக் கோப்பு செல்லவில்லை என்பதைத் தெரிந்த பிறகும்கூட, அதில் அக்கறை காட்டாதது உயிர் நாடிப் போன்ற இந்த சமூகநீதிப் பிரச்சினையில் இந்த அரசின் அக்கறையின்மையைத் தெளிவுபடுத்தி விட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலில், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், இந்தப் பிரச்சினையை நிபந்தனையாக வைத்திருந்தால், மத்திய அரசு நிச்சயம் பணிந்து வந்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பை  வேண்டுமென்றே தமிழக அரசு தவிர்த்து விட்டதானது - எவ்வளவுப் பெரிய துரோகம்!

மடியில் கனம் - வழியில் பயம் என்ற நிலையில் மத்திய பிஜேபி அரசின் தொங்கு சதையாக, தலையாட்டிப் பொம்மையாகிவிட்டது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. மத்தியில் பிஜேபி  ஆட்சி இருக்கும் வரை எங்களை அசைக்க முடி யாது என்று  கொஞ்சம்கூட முகம் சுழிக்காமல் ஒரு மாநில அமைச்சரால் சொல்ல முடிகிறது என்றால் இந்த ஆட்சி யார் மடியில் பத்திரமாகத் தூங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆளுநர் பிரச்சினையில்

ஜெயலலிதா எப்படி நடந்து கொண்டார்?

வேறு எந்தக் கால கட்டத்திலும் நடந்திராத வகையில் ஆளுநர் அன்றாட அரசு நடவடிக்கையில் தலையிடுவதைக் கூடத் தலை வணங்கி ஏற்றுக் கொள்ளும் பலகீனத்தை என்ன சொல்ல? மாநில உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த அண்ணாவின் பெயர் இந்தக் கட்சியில் ஒட்டிக் கொண்டு இருப்பது எத்தகைய அவலம்?

1995இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற அன்றைய ஆளுநர் சென்னாரெட்டி அவர்கள் மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டு சில விவரங்களைக் கேட்டார் என்பதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்ததோடு ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியதை இன்றைய அதிமுக அரசு வசதியாக மறந்தது ஏனோ? இதில் மட்டும்  ஆளும் மந்திரிகள் அடிக் கொரு தரம் கூறும் அம்மாவின் 'ஆன்மா' மன்னித்து விடுமோ!

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு சரியான பாடம் கற்பிக்கத் தவறி விட்டால் அதைவிட தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்வது - வேறு ஒன்றும் இருக்க முடியாது - இருக்கவே முடியாது.

தி.மு.க. வெல்ல வேண்டும் - ஏன்?

தி.மு.க.வின் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க.வில் அடி மட்டத் தொண்டராக இருந்து அந்தப் பகுதியில் தன் தொடர் பணிகளால் அறிமுகமான தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது தி.மு.க.வுக்காக அல்ல - நாட்டு மக்களுக்காக.

மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கக் கூடியவர்களுக்கு நல்லதோர் பாடத்தைக் கற்பிப்பதற்காகவே!

இந்தக் கால கட்டத்தில் 'உழைப்புத் தேனீ'யானதிமுகவின் செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அயராப் பணி இல்லாவிட்டால், இன்னும் பல கடுமையான, கொடுமையான இழப்புகளைத் தமிழ்நாடு சுமக்க வேண்டியிருந்திருக்கும்.

இது ஓர் இடைத் தேர்தலாக இருந்தாலும், இதில் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தி.மு.க.வுக்குக் கொடுக்கும் வெற்றி அகில  இந்திய அளவில் பெரிய அலையை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

அ.இ.அ.தி.மு.க.வின் பின்புலத்தில் மதவாத - காவி இந்துத்துவ சக்தி இருக்கிறது என்று தெரிந்தபின்பும், (தேர்தல் அறிவிப்பும், இரட்டை இலை சின்னமும் ஒரே நேரத்தில் கைகோத்து வருவதைக் கவனித்தீர்களா?) இதில் நாம் அலட்சியமாக இருக்க முடியாது. தமிழ் மண்ணின் தன்மானம், பகுத்தறிவு, சமூகநீதி, மதச் சார்பின்மை உணர்வைப் பிரதிபலிக்கும் இடைத் தேர்தலாக ஆர்.கே.நகர் அமையட்டும் - அமையட்டும்!

ஒரே கல்லால் இரு காய்களை வீழ்த்தக் கிடைத்த சரியான, அருமையான சந்தர்ப்பம் இது - நழுவ விடலாமா வாக்காளர்களே!

தி.மு.க. வெல்லட்டும்! வெல்லட்டும்!!

தமிழ்நாடு விழித்திருக்கிறது என்பது புரிய வேண்டியவர் களுக்குப் புரியட்டும்!

திராவிடர் கழகத்தின் ஆதரவு எல்லா வகைகளிலும் உண்டு. கழகத் தோழர்கள் முழு வீச்சில் செயல்படுவார்கள்!

 

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை 
27-11-2017

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் ஒரு மைல் கல்!

சூத்திரப் பட்டத்தை ஒழிப்போம்!

தந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம்

சென்னை மாநாட்டுக்கு வாரீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/nov/6/s8.jpg

25.11.2017 சனியன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம், 26.11.2017 ஞாயிறன்று மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வலியுறுத்தும் மாநாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், அதில் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திரண்டு வருவதன் அவசியம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பார்ப்பனர் அல்லாத தமிழினப் பெரு மக்களே! இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நாம் எல்லாம் இந்து மதத்தில் வருண தர்மப்படி சூத்திரர்களாம், அதாவது பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாம்!

தமிழன் கட்டிய கோயில்களில்

தமிழன் அர்ச்சகனாகக் கூடாதா?

நம் தமிழ் அரசர்கள் கட்டிய கோயில்களில் தமிழர்களாகிய நாம் கர்ப்பக்கிரகம் சென்று பூஜை செய்தால் சாமி தீட்டுப்பட்டு விடுமாம் - செத்துப் போய் விடுமாம்!

நமது தமிழக அரசு பல சட்டங்களை நிறைவேற்றும் பொழுதெல்லாம் சங்கராச்சாரியார், ஜீயர் போன்றவர்களின் எல்லா வகையான ஆசீர்வாதம், பொருளாதாரங்களின் துணையோடு உச்சநீதிமன்றம் சென்று முடக்கி விடுகிறார்கள்.

உச்சநீதிமன்றம் என்ன கூறுகிறது?

ஆனால், உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று திட்டவட்டமாகத் தீர்ப்புக் கூறி விட்டது (6.12.2015).

இதன் அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க. அரசு நினைத்தால்  இந்து அற நிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் பெற்றுள்ள அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்குக் கடிதங்கள் எழுதப்பட்டும் ஒரு வரி பதில்கூட இல்லை.

கேரளாவுக்கு ஒரு சட்டம்

தமிழ்நாட்டுக்கு வேறொரு சட்டமா?

இதற்கிடையே அண்டை மாநிலமான கேரளாவில் தாழ்த்தப்பட்டவர் 6 பேர் உட்பட பிற்படுத்தப்பட்டவர்களும் அடங்கிய  62 பேர்களுக்கு அர்ச்சகர்களாகப் பணியாற்றிட மாநில அரசு ஆணை பிறப்பித்து, அவர்களும் அர்ச்சகர் பணியைத் தொடங்கி விட்டார்கள்.

கேரளாவுக்கு ஒரு அரசியல் சட்டம் என்றும், தமிழ்நாட்டுக்கு வேறொரு அரசியல் சட்டம் என்றும் கிடையாது. கேரளாவை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படலாம்.ஆனால் வேதனைக்குரிய நிலை என்னவென்றால், எதிலும் செயல்படாத அரசாகக் கூனிக் குறுகி விட்டது தமிழ்நாடு அரசு.

தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்டதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கானப் போராட்டம்.

பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளோம் - பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறோம்.

இனிமேலும் நாம் இதில் தாமதத்தை அனுமதிக்க முடியாது.

வரும் சனியன்று கருத்தரங்கம்

ஞாயிறன்று மாநாடு

அந்த வகையில் வரும் சனியன்று (25.11.2017) மாலை நடைபெறும் ஜாதி தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கமும், ஞாயிறன்று மாலை (26.11.2017) நடைபெறும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடும் நடைபெற உள்ளன.

சமூக நீதியில், சமத்துவச் சிந்தனையில், ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் அக்கறை உள்ள தலைவர்கள் எல்லாம் கருத்தரங்கத்திலும், மாநாட்டிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.

தீர்வு காண்போம் - வாரீர்!

இம்மாநாட்டின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் வாருங்கள், சூத்திர இழிவை இன்னும் எவ்வளவுக் காலத்திற்குத் தாங்கிக் கொண்டிருப்பது?

"மானமும், அறிவும் மனிதனுக்கழகு - சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!" என்ற நமது அருமைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கோட்பாட்டை நிலை நிறுத்த வாரீர், வாரீர்! என்று அனைவரையும் அழைக்கிறோம்.

இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மனித உரிமை சமத்துவம் மட்டுமே உண்டு - வாரீர்! வாரீர்!!

 

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை  
24-11-2017

காவி வேட சாமியார்கள் நித்யானந்தா - ராம் ரகீம்களின் சரச லீலைகள் வெளிச்சத்துக்குவந்துவிட்டன

‘‘சாமியார்கள் ஒழிந்த நாடு - ஜாதியில்லாத சமூகம்'' உருவாக பிரச்சாரத் திட்டத்தை விரிவாக்குவோம் - அம்பலப்படுத்துவோம்!

சட்டங்கள் இவர்கள்மீது பாயட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

 

நிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க!

காவி உடை தரித்து  திரை மறைவில்  சல்லாப லீலைகளில் ஈடுபடும், சொத்துகளைக் குவித்து  உல்லாச வாழ்வில் திளைக்கும் சாமியார்கள்மீது அரசு சட்டங்கள் பாயட்டும் - சாமியார்கள் ஒழிந்த நாடு - ஜாதி ஒழிந்த சமூகம் அமைக்கத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யா னந்தா என்ற  ஒருவர் வேலையற்றுத் திரிந்த இளைஞன். சாமியார் ‘பிசினஸ்’தான் முத லில்லா வியாபாரம் என்று புரிந்துகொண்டு, காவி வேடம் போட்டு, மிகப்பெரிய மடாதிபதி போல் தன்னைக் காட்டிக்கொண்டு பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து, தன்னுடன் ஒரு ரவுடிக் கும்பல், அடியாட்களை வைத்துக்கொண்டு தனது சாம்ராஜ்ஜியத்தை சல்லாப ராஜ்ஜிய மாக்கிக் கொண்டு சொகுசு வாழ்வு வாழ்வதுபற்றி ஏடுகள் பல செய்திகளை வெளியிட்டன.

நவீன மின்னணு சாமியார்கள்!

குடும்பத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மூளைச்சாயம் ஏற்றி, அழைத்து வருவது, அங்கே ‘ஆன்மீகம்‘ என்ற பெயரால் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவது வேடிக்கையான வாடிக்கையாகும்.

இப்படிப்பட்ட நவீன சாமியார்கள் மின்னணு யுகத்தில் வாழ்வதால், அத்தனை மின்னணு  கருவிகளையும் தங்களை விளம்பரப்படுத்திட புது வகை டெக்னிக்கு களைக் கையாண்டு, அறியாமையிலும், பக்தி போதையிலும் உழலும் பல பெண்களின் வாழ்வை நாசமாக்கும் சமூக விரோத செயல் களைத் தங்கு தடையின்றி நடத்தி,  சுகபோக வாழ்வு வாழ்கின்றனர்!

வீடியோ உண்மையானதுதான்!

திரைப்பட நடிகை ஒருவருடன் இந்த நித்யா னந்தா உல்லாசமாக இருப்பதுபோல ஏழு ஆண்டுகளுக்குமுன் வெளியான ‘வீடியோ’ உண்மையானதுதான் என டில்லி தடயவியல் ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளது!

இதையடுத்து அந்த நித்யானந்தா தலை மறைவானார். பிறகு திருவண்ணாமலை அருகே கருநாடகக் காவல்துறை கைது செய்து வழக்குப் போட்டது.

மக்களும், முற்போக்கு அமைப்புகளும் இந்த காஷாய சாமியார் வேடமணிந்த நபருக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்திய பின்னரே இவர்மீது வழக்குப் பாய்ந்தது!

உச்சநீதிமன்றம்வரை சென்று, இவருக்கு ஆண்மைப் பரிசோதனைகூட நடத்தப்பட்ட துண்டு. ஆண்மை இல்லை என்ற இவரது வாதம் பொய்யானது என்பது உறுதியானது.

ஓட்டுநர் அம்பலப்படுத்தினார்

ஏழு ஆண்டுகளுக்குமுன்  இந்த காமாந்த காரன் - நடிகையுடன் சல்லாப சரச லீலையில் ஈடுபட்டதையெல்லாம் - அவரது காரோட்டி லெனின் கருப்பையாமூலமும், வீடியோ மூல மும் வெளியானது. போலி என்ற இவர் தரப்பு வாதம் பொய்யாக்கப்பட்டு, அது உண்மைதான் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

இவரையும், இவரது கும்பலையும் உடனே கைது செய்து, சிறையில் அடைப்பதோடு உரிய தண்டனையும் வழங்கப்படவேண்டும்.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்மீது நடத்தப்படும் சோதனைபோல, வருமான வரித் துறை இந்த மடாதிபதிகளின் கூடாரங்களிலும் சோதனை நடத்திடவேண்டும்.

காலிகள், சமூக விரோதிகளுக்கு இந்தக் காவி உடையும், ருத்ராட்ச வேஷமும் சரியான பாதுகாப்புக் கவசங்கள் - ‘ஆன்மீகம்‘ என்ற அர்த்தமற்ற ஒன்றைக் கூறி, அமோக பக்தி வியா பாரம் நடைபெறுகிறது தங்குத் தடையின்றி!

வடக்கே ஒரு ராம்ரகீம் சிங்

வடக்கே அண்மையில் பிடிபட்ட பஞ்சாப் காவிச் சாமியார் ராம் ரகீம்சிங் பற்றியும், அவரது சாலோக சாரூப, சாம்ராஜ்ஜியம்பற்றியும், தோண் டத் தோண்ட வரும் புதையல்போல பல்வேறு அருவருக்கத்தக்க, அரசுகளும், அரசியல்வாதி களான அதிகார மய்யங்களும்கூட நெருங்க முடியாத எல்லைக்குச் சென்று, மோசடி வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பாக நடத்திட, அன்றாடம் காமரசத்தில் நீந்தி, நீந்தி - ‘ஆன்மீகப் பணி செய்யும்‘ இந்த அதிவேக ‘அய்டெக்‘ சினிமா, கிரிக்கெட் சாமியாருக்குக் குண்டு துளைக்காத வீடாம்!

எப்படிப் பார்த்தீர்களா?

புல்லட் புரூப் வீடாம்!

பாலியல் வழக்கில் குற்றவாளி என்று நிரூ பிக்கப்பட்டு தண்டனை பெற்று சிறையில் உள்ள ராம் ரகீம் சிங் சாமியார் என்ற இந்தக் கயவன் - புல்லட் புரூப் முறையில் கட்டப்பட்ட வீட்டில் வாழ்ந்து வந்ததாக இன்று தகவல் வெளியாகியுள்ளது!

அரியானா மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா என்ற அமைப் பின் தலைவன் - பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக் குவியல்! இவைகளையெல்லாம் நம் நாட்டு காவல்துறை, சி.பி.அய்., வருமான வரித்துறை கண்டுகொள்ளவேண்டாமா?

இவர்களைக் கண்டுகொள்ளாத ‘‘செலக்டிவ் அம்னீஷியா’’ ஏன் வரவேண்டும் ஆட்சியாளர் களுக்கு?

தேர்தல் பிரச்சாரத்தில்

மோடியோடு ராம்ரகீம் சிங்

பிரதமர் மோடியே இவரைப் பயன்படுத்தி வாக்குகள் வாங்கிட தேர்தல் நேரத்தில் பிரச் சாரம் செய்தார் என்றெல்லாம் ஊடகங்களில் செய்தி வெளிவந்ததே!

பிறகு அதிகாரிகளோ, வருமான வரித் துறையோ, சி.பி.அய்.யோ சாமியார் என்ற ‘‘ஸ்ரீமான் 420’’-அய் நெருங்க முடியுமா?

சாமியார்கள் ஒழிந்த நாடு -

ஜாதி ஒழிந்த சமூகம்

சென்ற வாரம் ‘ஜூனியர் விகடன்’ இணைப்பு ஒன்று இத்தகைய ‘சாமியார் வகையறாக் களை’ப்பற்றி பல்வேறு அரிய செய்திகளைத் திரட்டித் தந்துள்ளது.

நாம் இதனை முன்பே எச்சரிக்கை செய்யும் வகையில், தொடர் பிரச்சாரம் செய்து வருகி றோம்.

சாமியார்கள் ஒழிந்த நாடு

ஜாதி ஒழிந்த சமூகம்

- இவைதான் நமது இலக்கு!

இளைஞர்களே, மகளிர் தோழியர்களே! ஏமாறாமல் இருக்க இப்படிப்பட்டவர்களது கழற் றப்பட்ட காவி முகமூடிகளின் யோக்கியதை களைப்பற்றி நாடெலாம், உலகெலாம் பாயும் வண்ணம் பிரச்சாரம் செய்யுங்கள்!

பிரச்சாரம்

தீவிரப்படுத்தப்படும்!

விழிப்புற்று எழுக -

வீணர்கள் கொழுக்காமலிருக்க!

அரசும், காவல்துறையினரும் இதற்கான ஒரு தனிப் பிரிவையும் உண்டாக்கி, தொடக்கத்தி லேயே இதனைத் தடுத்து ஒழித்திட ஆவன செய்யவேண்டும் என்பதை வற்புறுத்துகிறோம்.

2018 இல் இந்த முழக்கப் பிரச்சாரம் நம்மால் தீவிரப்படுத்தப்படும்!

 

கி.வீரமணி
தலைவர்,        திராவிடர் கழகம்.

சென்னை
23.11.2017

 

மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு  வாரத்திற்கு 3 முறை முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.

மாணவர்களுக்கு உண்மையான சத்து தரும் சமச்சீர் உணவு (Balanced Diet) என்பதனால் பெரிதும் உதவக் கூடியது முட்டை உணவு.

அப்பழக்கம் இல்லாத மாணவர்களுக்கு  வாழைப்பழம் தரவும் - 1989இல் முதல் அமைச்சராக  இருந்த கலைஞர்  அறிமுகப்படுத்தினார்.  1989 முதல் இத்தனை ஆண்டுகள் இவை தொடர்ந்து வந்தன.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும்கூட இதனை மாற்ற முயற்சிக்கவில்லை.

இப்போது ஏன் இந்த வீண் வேலை?

கிண்டி ராஜ்பவனில் - ஆளுநர் மாளிகையில் காய்கறி தவிர மாமிச உணவு வகைகள் எதுவும் இனி பரிமாறப்படாது என்று ஏற்பட்டதன் தொடர்ச்சியா? பா.ஜ.க.வின் திட்டமா இது? மறைமுக பா.ஜ.க. கொள்கைத் திணிப்பு, அதிமுக அரசு மூலமே நடத்தப்படுகிறதா?

தமிழ்நாடு அரசின் இந்த முடிவைக் கண்டிக்கிறோம். பழைய ஏற்பாடே தொடர வேண்டும்.

 

 

கி.வீரமணி
தலைவர்,       திராவிடர் கழகம்

 

சென்னை  
20-11-2017

கருநாடகத்தில் நிறைவேற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா

முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்!

ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும்கூட இது இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

முதல் தலித் அர்ச்சகர்  யேடு கிருஷ்ணனை வாயார, மனமார, கையார வாழ்த்துகிறோம்

கருநாடகத்தில் நிறைவேற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும். அதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் மட்டுமல்ல, மத்தியிலும் கூட கட்டாயம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்படவும் வேண்டுமல்லவா? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கருநாடகத்தில் உள்ள மாண்புமிகு சித்தராமய்யா அவர்களது தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில், ஒரு சிறப்பான சமூகப் புரட்சி - அமைதிப்புரட்சியாக நடைபெற்றுள்ளது.

மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவைகளை தடுத்து ஒழிக்கும் வகையில், மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒன்று, சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது - எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பின்மையால்; தற்போது பா.ஜ.க.வினர் உட்பட பல கட்சியினரின் ஆதரவோடு நேற்றுமுன்தினம் கருநாடகச் சட்டமன்றத்தில் நிறைவேறி சட்டமாகியுள்ளது.

சமூக சீர்திருத்தச் சட்டம்

இது ஒரு எடுத்துக்காட்டான முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்.

பல்வேறு சாமியார்கள், பக்தி - மூடநம்பிக்கை வியாபாரம் செய்து படித்த பாமரர்கள் உட்பட அனைவரையும் 'முட்டாளாக்கி', சுரண்டிக் கொழுக்கும் அன்றாட அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க இச்சட்டம் நிச்சயம் கை கொடுக்கும் என்பது உறுதி.

இதில் ஜோதிடம், வாஸ்து மோசடி இவைகளையும் இணைக்க வேண்டும் என்று பாட்டீல் போன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

அது மட்டுமல்ல, ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் 'முத்திரை'  இடும் மத்வா பார்ப்பனர்களுக்கு இச்சட்டத்தில் விலக்கு கொடுத்திருப்பதும் ஏற்கத்தக்கது அல்ல.

என்றாலும் முதன் முதலில் கணக்குத் திறந்தது போன்ற இச்சட்டம் வரவேற்கத்தக்கதே!

அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள்!

இந்திய அரசியல் சட்டப்படி நடப்போம் என்றுதான் குடியரசுத் தலைவர் முதல், முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரமாணம் (கியீயீவீக்ஷீனீ) உறுதி எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த அரசியல் சட்டத்தில், 'அடிப்படைக் கடமைகள்' (Fundamental Duties) Part IV-A 51AH என்ற சட்டப் பிரிவில் உள்ள ஒரு துணைப் பிரிவு கூறுவதென்ன?

"நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் (குடிமகளும் அடக்கமே) அறிவியல் மனப்பாங்கு, ஏன்? எதற்கென்று ஆராய்ந்து கேள்வி கேட்கும் உணர்வு, சீர்திருத்தம், மனிதாபிமானம் ஆகியவற்றை பரப்புதல் அடிப்படையான கடமையாகும்" என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறுகிறதே!

(1) Scientific Temper
(2) Spirit of  Inquiry
(3) Reform
(4) Humanism

இவைகளைப் பரப்புதல் அடிப்படைக் கடமை என்று கூறும் நிலையில், இத்தகைய சட்டங்கள் இன்றியமையாதவை அல்லவா?

அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும்

ஒவ்வொரு மாநிலத்திலும் மட்டுமல்ல, மத்தியிலும்  இது போன்ற சட்டம் கட்டாயம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்படவும் வேண்டுமல்லவா?

பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உ.பி., அரியானா போன்ற பல மாநிலங்கள் இதற்கு நேர் எதிராக, மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன்னர் ஜோதிடர் சொல்லி நோய் தீர்க்கும் ஆருடம் - மகா மகா வெட்கக் கேடான அறிவியலுக்கு எதிரான அபத்தம் அல்லவா?

சாமியார்கள் ஆட்சி செய்தால் இத்தகைய 'விசித்திர சிகிச்சைகள்' என்ற விந்தைகள் தானே நடைபெறும்?

கேரளா - கருநாடகாவில் சமூகப் புரட்சி

கேரளாவில் - தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகர் என்ற சமூகப் புரட்சி,

கருநாடகத்தில் - மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்ட நிறைவேற்றம்

இவற்றிற்கெல்லாம் முன்னோடியான தமிழ்நாடு அரசு, யாகங்களிலும், ஜோதிடங்களிலும், பூமி பூஜைகளிலும் ஈடுபடும் கேலிக் கூத்தில் உள்ளது!

ஊழலுக்கு பக்தித் திரைப் போட்டு மூடி மறைக்க முழு முஸ்தீபுகள் அல்லவா அவை!

எனவே பகுத்தறிவும், அறிவியல் மனப்பாங்கும் உள்ள ஆட்சி மாற்றம் விரைவில் தேவை. திமுகவினால் மட்டுமே தற்போதுள்ள அரசியல் சூழலில் அதைத் தர முடியும்.  அந்த நாளும் வந்திடாதோ!

 

கி. வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்


சென்னை     
18-11-2017

Banner
Banner