ஆசிரியர் அறிக்கை

தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக்கு களுக்கான விரிவுரையாளர்கள் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் இடம் பிடித்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக்களில்  விரிவுரையாளர் பணிகளுக்கான 1058 பணியிடங்களுக்கு விளம்பரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 28.7.2017 அன்று வெளி யிடப்பட்டது.

அதற்கான எழுத்துத் தேர்வும் 16.9.2017 அன்று நடைபெற்றது. இப்பொழுது அதுபற்றிய முடிவுகள் வெளி வந்துள்ளன. (7.11.2017)

வட மாநிலத்தவர் இடம் பிடித்தது எப்படி?

இதில் அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால் வெளி மாநிலத்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இடங்களைப் பிடித்துள்ளனர் என்பதுதான்.

பொதுப் போட்டிப் பிரிவில் (General Turn) இது நடந்திருக்கிறது. இது மத்திய அரசின் வேலை வாய்ப்பல்ல, தமிழ்நாடு அரசின் பணி நியமனம். இதில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பிற மாநிலத்தவர் ஆதிக்கம் எவ்வாறு நிகழ்ந்தது?

தமிழ்நாட்டில் உரிய கல்வித் தகுதியுடன் ஏராள மான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களின் பணி வாய்ப் பினைப் பறித்து, பிற மாநிலத்தவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு என்பது தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் மாபெரும் அநீதி அல்லவா?

பிற மாநிலத்தவருக்குக் கதவு திறக்கப்பட்டது ஏன்?

பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வாய்ப்பு அறிக்கையின் (Notification) 10ஆம் புள்ளியின் கீழ் வழங்கப்பட்டுள்ள குறிப்பு எண் 2இல் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வழங்கப்பட்டுள்ள ஜாதிச் சான்றிதழ்கள் உடையோர் பொதுப் போட்டியினராகவே கருதப்படுவர். அவர்களுக்கு 69% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் வழங்கப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள குறிப்பின் மூலமே பிற மாநிலத்தவர் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தேவையானது தானா? மறைமுக அழைப்பு அல்லவா?

சான்றிதழ் சரிபார்ப்புக்கென 07.11.2017 அன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தேர்வு பதிவு எண்கள் மட்டும் வெளியிடப்பட்டு பெயர்கள் இல்லாத காரணத்தால் உடனடியாக இப்பிரச்சினை வெளிவரவில்லை. ஆனால், அப்பட்டியலில் பொதுப்போட்டியில் (GT  - General Turn) தேர்வு செய்யப்பட்டிருப்போரில் OC (Other Community)  என்று குறிப்பிடப்பட்டிருக்கும் முன்னேறிய பிரிவினரில் தான் முழுக்க தமிழ்நாட்டைச் சாராதோர் திணிக்கப்பட்டுள்ளனர்.

தீக்சித்துகளும், குப்தாக்களும்,

சர்மாக்களும்  படையெடுப்பு

அதாவது பொதுப் போட்டியில் இடம்பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களைத் தவிர பிறர் பட்டியலை மட்டும் தனியே எடுத்துப் பார்த்தால் அதில் மூன்றில் இரண்டு பங்கு வடநாட்டவர்/பிற மாநிலத்தவர் பெயர்கள் தீக்சித், பானிகிரகி, சர்மா, குப்தா, பாண்டே, சிங் என்ற பெயர்களே இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. அதிலும் பெரும்பாலானோர் வடநாட்டுப் பார்ப்பனர்களே!.

பொதுப் போட்டியில் இடம்பெற வேண்டிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இட ஒதுக்கீடு அல்லாத முன்னேறிய சமூகத்தவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதே! அதிலும் இயந்திரவியல் (Mechanical), மின்னியல் மற்றும் மின்னணுவியல்(EEE), மின்னணுத் தொடர்பியல் (ECE) போன்ற துறைகளில் முற்றிலும் 95%க்கு மேல் பிற மாநிலத்தவர் ஆதிக்கம்!

தமிழ் படித்திருக்க வேண்டாமாம்!

தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் பணியில் சேரவிருக்கும் இந்த பிற மாநிலத்தவர் எல்லாம் தமிழ் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்த் தேர்வு எழுதித் தேறினால் போதுமானது என்ற அடிப்படையில் சேர்க்கப்படுவர். அப்படியென்றால் அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் மொழி என்னவாக இருக்கும்? தமிழா? ஆங்கிலமா? அல்லது அவரவர் தாய்மொழியா? தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிற மாநிலத்தவர் அனைவரும் ஆங்கிலத்தில் வகுப்பு நடத்தும் திறமை பெற்றவர்களா? இல்லை, அதற்கும் இனி தான் பயிற்சி பெறுவார்களா?

தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் பிறர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பதற்கான சான்றே இந்தப் பட்டியல். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் நடந்த தில்லுமுல்லுகள் அஞ்சல் துறைக்கான தேர்வின் போது அம்பலமாகின. தமிழே அறியாத அரியானாக்காரர் தமிழ்த் தாளில் அதுவும் இலக்கணப் பாடத்தில் முதலிடம் பெற்றார்.  இப்படி தமிழர்களின் மத்திய அரசுப் பணி வாய்ப்பினைப் பறிக்க தந்திரமான செயல்கள் நடைபெறும் சூழலில், தமிழ்நாடு அரசு வழங்கும் வேலைவாய்ப்பிலும் வடவர் ஆதிக்கம் நடைபெறுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

'நீட்' தேர்வில் போலி இருப்பிடச் சான்றிதழ்கள் பிடிபட்டதுபோல், இனி தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத் தேர்வுகளிலும் பிடிபடக் கூடுமோ?

படகிலிடப்பட்ட ஓட்டை

மாநில அரசுக்குட்பட்ட கல்வி நிறுவனத்தில் வெளி மாநிலத்தவர்கள் புகுந்திட வழி வகுப்பது எப்படி?

தமிழ் தேர்ச்சி என்பதைக் கட்டாயமாக்காமல் இரண்டாண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி என்பது படகில் பெரிய ஓட்டைப் போட்ட கதை தானே!

இந்த விடயத்தில் கருநாடக அரசைக் கவனிக்க வேண்டாமா? பின்பற்ற வேண்டாமா?

பிற மாநிலங்களில் தமிழர்கள் இப்படியெல்லாம் நுழைய முடியுமா? தமிழ்நாடு என்பது திறந்த வீடா?

தமிழக அரசைப் பொறுத்த வரையில் அவர்களுக்குள்ள சண்டையே சரியாக இருக்கிறது. தமிழ்நாட்டு உரிமைகள் பறிப் போவதுபற்றி அரசுக்கு என்ன கவலை?

முதல் அமைச்சர் இப்பிரச்சினையில் திட்டவட்டமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். கல்வித்துறை, உத்தியோகத்துறை என்பதில் தமிழ்நாடு எப்பொழுதுமே விழிப்பாக இருந்து வந்திருக்கிறது. அதையெல்லாம்  கோட்டை விடும் அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது. இதற்குப் பரிகாரம் தேடப்படவில்லையானால் - கடும் போராட்டங்களை தமிழக அரசு சந்திக்க வேண்டியிருக்கும், எச்சரிக்கை!

 

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
11-11-2017

மறக்க முடியாத நவம்பர் 8 என்ற கருப்பு நாள்

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கியப் பொருளாதார அறிக்கை

 

மறக்க முடியாத நவம்பர் 8 என்ற கருப்பு நாள்  இந்நாள் என்று   திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கியப் பொருளாதார அறிக்கை வருமாறு:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஓர் அபாய அறிவிப்பினைக் கொடுத்தார்.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதுதான் அந்த அபாய அறிவிப்பு!

தன்னை உயிரோடு கொளுத்தச் சொன்னார் மோடி!

இதன்மூலம் கருப்புப் பணம் ஒழியும் -

நாட்டின் பொருளாதார வளர்ச்சி செழிக்கும் -

விலைவாசி குறையும் -

மக்கள் எல்லாம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வார்கள்

என்றெல்லாம் உரத்தக் குரலில் பேசப்பட்டது. பாமர மக்களும் ஏதோ நம்பினார்கள். நல்லதுக்குத்தான் பிரதமர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று நினைத்ததுண்டு.

போதும் போதாதற்கு 2016 நவம்பர் 13 ஆம் நாள் - பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு 5 ஆம் நாள் கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி முழங்கியது பலருக்கு மறந்திருக்கலாம்.

‘‘மக்களே! டிசம்பர் 30 வரை 50 நாள்கள் பொறுத்திருங்கள். அதற்குப் பிறகு என்னுடைய நோக்கத்திலோ, செயல்பாட்டிலோ தவறுகள் இருந்தால் என்னைப் பொது இடத்தில் உயிரோடு கொளுத்துங்கள் (Burn Me Alive). மக்களாகிய நீங்கள் விரும்பிய இந்தியாவை உங்களுக்குத் தருகிறேன். யாராவது எனது அறிவிப்பால் இன்னலுக்கு ஆளானால், அந்த வலியை நானும் உணர்கிறேன். இந்த இன்னல்கள் எல்லாம் வெறும் அய்ம்பதே நாள்களுக்குத்தான்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் முழங்கினாரே நினைவிருக்கிறதா?

மாற்றமல்ல - ஏமாற்றமே!

அவர் வாக்குறுதி அளித்தபடி மாற்றங்கள் நடந்த னவா? உண்மையைச் சொல்லப்போனால், ஏமாற்றங்கள் தான் விஞ்சின.

அன்றாடம் வேலைக்குச் சென்று சம்பாதித்து அடுப் புப் பற்ற வைத்தவர்கள்கூட வங்கிகளின் வாசல்களில் தங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்கு, தங்கள் வசம் இருந்த பழைய பணத்தை மாற்றிக் கொள்வதற்கு காலை முதல் மாலை வரை கால்கடுக்க நிற்கவில்லையா? 112 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவிட வில்லையா? (ஒரு வகையில் படுகொலைக்கு ஒப்பான தல்லவா?)

பிடிபட்டதா கருப்புப் பணம்?

பிரதமர் சொன்னபடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப் பட்டதா? கட்டுப்படுத்தப்பட்டதா?

2016 நவம்பர் 8 ஆம் தேதி நிலவரம் என்ன? 500 ரூபாய், 1000 ரூபாய், நோட்டுகளின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி. இதில் 5 லட்சம் கோடி ரூபாய் திரும்பி வராது; அந்த அளவிற்கு நாட்டில் கருப்புப் பணம் நிலவுகிறது. அந்த 5 லட்சம் கோடி ரூபாய் மக்கள் வளர்ச்சிப் பணிக்குப் பயன்படும் என்றெல்லாம் வாய் நீளம் காட்டினார்கள்.

ரிசர்வ் வங்கி அறிக்கை

கூறுவதென்ன?

ஆனால், நடந்தது என்ன? ரிசர்வ் வங்கி அறிக்கை என்ன கூறுகிறது? 2017 ஆகஸ்டு மாத இறுதி நிலவரம் - ரூ.15.28 லட்சம் கோடி வரை வங்கி அமைப்புக்குள் வந்துவிட்டது - வெறும் 16,000 கோடி ரூபாய்தான் புழக் கத்தில் வரவில்லை என்று ரிசர்வ் வங்கிக் கூறிவிட்டதே! நியாயமாக பிரதமர் மோடி என்ன சொல்லியிருக்க வேண்டும்? உயிரோடு கொளுத்துவது ஒருபுறம் இருக்கட்டும்! நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை - என் முயற்சி - என் அறிவிப்பு தோல்வி கண்டுவிட்டது என்று  ஒப்புக்கொண்டிருக்க வேண்டாமா?

இதில் என்ன கொடுமை என்றால்,  16,000 கோடி ரூபாய் கருப்புப் பணத்துக்காக புதிதாக ரூபாய் நோட்டு கள் அச்சடிக்க ரூ.21 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டி இருந்தது என்பதுதான்.

எதிர்க்கட்சிகள் அப்படித்தான் குற்றம் சொல்வார்கள் என்று சமாதானம் சொல்ல முடியாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களே அதுவும், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சராக இருந்த அருண் ஷோரி போன்றவர்களே பகிரங்கமாகக் குற்றம் சுமத்தி யுள்ளார்களே!

அருண்ஷோரி

என்ன சொல்லுகிறார்?

‘‘பண மதிப்பு நீக்கம் என்பது தற்கொலைக்குச் சமமானது; ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு துணிச்சலான நடவடிக்கை என்றால், துணிச்சலாகத் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவே அதற்குப் பொருள். பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவடைந் ததற்கும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறி போனதற்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் காரணம். நாட்டைப் பாதிப்புக்கு ஆளாக்கும் முக்கியப் பொருளாதார முடிவுகள் மூடிய அறைக்குள் எடுக்கப்படுகின்றன. பிரதமர் மோடி, பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா மற்றும் குழுவினர் விளைவுகள்பற்றி ஆரா யாமல் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள்’’ என்று மேனாள் மத்திய அமைச்சர்  அருண்ஷோரி கூறியுள் ளாரே - இதற்கு என்ன பதில்?

பொருளாதார வீழ்ச்சி!

2017-2018 முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) வளர்ச்சி விகிதமான 5.7 சதவிகிதம் என்பது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வீழ்ச்சி என்றும், பண மதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி.யுமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் ‘‘பிசினஸ் ஸ்டாண்டர்டு’’  இதழ் (1.9.2017) எழுதியுள்ளதே!

பறிபோன வேலை வாய்ப்பு!

அகில இந்திய காங்கிரசு பொதுச்செயலாளர் முகுல் வாஷ்னிக், மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நட வடிக்கையால் 3.72 கோடி பேருக்கு வேலை இழப்பும், 2 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி சரிவும் ஏற்பட்டுள்ள தாக வேலூரில் நடைபெற்ற விழாவில் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கதாகும்.

மேனாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன்சிங் என்ன கூறுகிறார்?

‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு திட்டமிட்ட கொள்ளை, சட்ட ரீதியான கொள்ளை, எவ்வித முன் யோசனையும் இல்லாத நடவடிக்கை. அது அமல்படுத் தப்பட்டதற்கான எந்த நோக்கமும் எட்டப்படவில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி அமலாக்கமும் வணிகர்களிடையே வரி பயங்கரவாத அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதனால், முதலீடு செய்வதற்குப் பயப்படுகின்றனர். தனியார் முதலீட்டின் வளர்ச்சி, கடந்த 25 ஆண்டுகளில் இந்த அளவுக்குக் குறைந்தது இல்லை. இது, பொருளாதாரத்துக்கு மிகவும் ஆபத்தானது.

குறிப்பாக, சிறு வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி, கெட்ட கனவாகவே ஆகிவிட்டது’’ என்றார்.

இந்தியா முழுவதும் கருப்புத் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது என்றவுடன், இந்தியாவில் உள்ள ஏடுகளுக் கெல்லாம் கோடிக் கோடியாகப் பணம் கொட்டிக் கொடுத்து முழு பக்க விளம்பரம் ‘‘தாம் தூம்‘’ என்று செய்யப்படுகின்றன.

இதில் மிகப்பெரிய மோசடி ஒன்று நடந்திருக்கிறது. இருவகையான 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. மேனாள் மத்திய அமைச்சரும், காங்கிரசு தலைவர்களுள் ஒருவருமான கபில்சிபல், அந்த இருவகை நோட்டுகளுடன் நாடாளுமன்றத்திற்கு வந்து விரித்துக்காட்டி அம்பலப்படுத்தினார். நாடாளு மன்றமே அதிர்ச்சியில் உறைந்ததே!

போலி 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகளை கபில்சிபல் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய காட்சி

மற்றொரு முக்கிய காங்கிரசு தலைவரான குலாம்நபி ஆசாத் சொன்னதுதான் வேடிக்கை நிறைந்த வேதனை யாகும்.

‘‘நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கட்சிக்கு ஒன்று, நாட்டுக்கு ஒன்று என்று இருவகையான ரூபாய் நோட்டு களை அச்சடிக்கவில்லை. தற்போது ரூ.500, ரூ.2000 நோட்டுகள் இரண்டு வகையாக அச்சிடப்பட்டு புழக் கத்தில் விடப்பட்டுள்ளன. இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல்’’ என்று நாடாளுமன்றத்திலேயே வெளியிட்டு, மத்திய பி.ஜே.பி.யின் முகத்திரையைக் கிழித்தாரா இல்லையா?

இதற்கு நிதியமைச்சர் அருண்ஜெட்லி சொன்னது தான் வேடிக்கை. இரு வேறு அச்சகங்களில் அச்சிட்டதால் இந்தத் தவறு நடந்துவிட்டதாம். எவ்வளவுப் பெரிய இமாலய குற்றத்தை எவ்வளவு அலட்சியமாகப் பொறுப் பில்லாத வகையில் மத்திய நிதியமைச்சர் கூறியிருக்கிறார் பார்த்தீர்களா?

கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி, எது ஒரி ஜினல்? எது போலி? என்று தெரியாத ஒருவகைக் கருப் புப் பணத்தை அரசே அச்சிட்டு வழங்கியது சாதாரண மானதா?

ஒரு பக்கத்தில் மதவாதம் - இன்னொரு பக்கத்தில் உயர்ஜாதியினரின் நலம் - மற்றொரு பக்கத்தில் நாசகாரப் பொருளாதார நடவடிக்கைகள் என்று மத்தளத்திற்கு இரு பக்கமும் இடியாக நாட்டு மக்கள் நாளும் மரண அடி வாங்கிக் கொண்டுள்ளனர்.

வாக்குச் சீட்டு என்னும் ஆயுதம்!

அந்த வகையில் நவம்பர் 8 ஆம் தேதி என்பது நாட்டு மக்களின் கருப்புத் தினமே!

வளர்ச்சி - மாற்றம் என்ற மோடியின் நாடக வசன வசீகரத்திற்கு மயங்கி வாக்களித்து அதிகார பீடத்தில் மோடியை அமர வைத்தவர்கள், அதே வாக்குச் சீட்டு ஆயுதத்தைப் பயன்படுத்தி வீழ்த்திடவும் தயாராக இருக்க - இந்தக் கருப்புத் தினத்தில் உறுதி கொள்வார் களாக!

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

திருநெல்வேலியில் கந்து வட்டிக் கொடுமையினால் பலியான குடும்பத்தினர்பற்றி, கேலிச் சித்திரம் (கார்ட்டூன்) வரைந்த கார்ட்டூனிஸ்ட்டு பாலாவை (பாலகிருஷ்ணன்) தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது மிகவும் வன்மையானக் கண்டனத் திற்குரியதாகும்.

நமது அரசமைப்புச் சட்டத்தின் பறிக்கப்பட முடியாத, ஏன் மாற்றப்பட முடியாத அடிக் கட்டுமானத்தின் பகுதி - பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை என்பவையாகும்.

இப்போது இங்கே - தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி ஜனநாயக முறையில் நடைபெறுவது உண்மையானால், இத்தகைய கருத்துரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் ஏற்கத்தகாதன மட்டுமல்ல; வெறுக்கத் தகுந்தவையுமாகும்.

'இம்' என்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம் - இது சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு.

எனவே அதிகாரப் போதையினால் தள்ளாடுவோர் - இதனை மறுபரிசீலனை செய்து, கைது செய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட்டு பாலாவை விடுதலை செய்வதோடு, வழக்கினையும் திரும்பப் பெற வேண்டும்.

அதிகாரிகள் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாகவோ, தங்களை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவோ கருதாது ஏதேச்சாதிகரமான அணுகுமுறையைக் கைவிட வேண்டும்.

 

கி.வீரமணி
ஆசிரியர், 'விடுதலை'

தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
6-11-2017

குறிப்பு: நேற்று புதுச்சேரியிலும், கார்ட்டூனிஸ்ட்டு பாலாவை விடுதலை செய்ய வேண்டும் என்று செய்தியாளர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இப்பொழுது வந்துள்ள தகவல் கார்ட்டூனிஸ்ட்டு பாலா பிணையில் 'விடுதலை' செய்யப்பட்டுள்ளார் என்பதாகும். வழக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது அழுத்தமான வேண்டுகோளாகும்.

 

தமிழ் மாநில பி.ஜே.பி. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், தான் இருக்கும் கட்சிக்கு ஏற்ப மதவாத அரசியல் கண்ணோட்டத்தில் அவ்வப்போது கருத்துகளை சொல்லி வருகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மேல்ஜாதி ஆதிக்க மதவாத கட்சியில் தம்மை உட்படுத்திக் கொண்டதால், இடத்துக்கு ஏற்ப அவர் தெரிவித்துவரும் கருத்துகள் எதிர்விளைவைத்தான் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் என்றாலும், அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் - பெண்ணொருவர் ஒரு கட்சியின் பொறுப்பாளராக இருக்கும் நிலையில், ஆபாசமாகவும், கொச்சைத்தனமாகவும் பதிவு செய்வது உகந்ததல்ல.

பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட தலைவர் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பெண்களை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல. பொதுவாழ்விற்குப் பெண்கள் வந்தால் இந்நிலைதான் என்ற நிலை உருவாகிவிடக் கூடாதல்லவா?

டாக்டர் தமிழிசை அவர்களும், எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் அவசரத்தில் வார்த்தைகளை நிதானமின்றிப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

கி.வீரமணி
தலைவர்,       திராவிடர் கழகம்

சென்னை
26.10.2017

Banner
Banner