ஆசிரியர் அறிக்கை

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - கேரளாவை முந்திக்கொள்ள வாய்ப்பிருந்தும் தமிழ்நாடு தவறிவிட்டதே!

உச்சநீதிமன்றத் தீர்ப்பையொட்டி தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆணையைச் செயல்படுத்த முன்வரவேண்டும்

இல்லையேல் நவம்பரில் மாபெரும் மாநாடும் - சிறை நிரப்பும் மிகப்பெரிய போராட்டமும் நடத்தப்படும்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை குறித்த அறிக்கை

முதல் தலித் அர்ச்சகர்  யேடு கிருஷ்ணனை வாயார, மனமார, கையார வாழ்த்துகிறோம்

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றியதாகும். அதற்கான சட்டங்களும், தீர்ப்புகளும் சாதகமாக இருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு கேரளாவைப் பின்பற்றி அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர்களை நியமனம் செய்யத் தயங்கக்கூடாது. நியமனம் செய்யப் படாவிட்டால், வரும் நவம்பரில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடும், போராட்டமும் நடத்தப்படும் என்று   திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜாதி - தீண்டாமையை ஒழிப்பதைத் தன் பிறவி இலட்சியமாய்க் கொண்டு தந்தை பெரியார் ஓர் மாபெரும் இயக்கமான சுயமரியாதை இயக்கம் என்ற சமூகப் புரட்சி இயக்கத்தை 1925 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கினார்.

ஆனால், இந்த லட்சியம் - பிறவி பேத ஒழிப்பு - சிறு குழந்தை பிராயத்திலிருந்தே அவருக்குள் முளைத்து, கிளைத்தது. காங்கிரசில் தனது ஒப்பற்ற தலைவராகக் கொண்ட காந்தியாரிடமே இக்கொள்கை இலட்சியத்தில், அதனை அடையும் சத்தியாகிரக வழிமுறைகளில்கூட (வைக்கமும், சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் அதற்கு சரியான எடுத்துக்காட்டுகளாகும்) மாறுபட்ட நிலையை எடுத்ததுண்டு.

முதிர்ந்த வயதிலும் தந்தை பெரியார் மும்முரமாக ஈடுபட்ட போராட்டம்

தந்தை பெரியார் அனைத்து ஜாதியினரும் - ஆதி திராவிடர் உள்பட அர்ச்சகராகி, கோவில் கருவறைக்குள் ‘கர்ப்பகிரகத்தில்’ நுழையும் உரிமையும், பூசை செய்யும் உரிமையும் பெற்றாக வேண்டும். அதுதான் எளிதில் பெற முடியாத ஒன்றாக, வர்ணாஸ்ரம தர்மம் என்ற இந்து மத ஏற்பாடு பலமான பாதுகாப்பினைச் செய்துள்ளது என்று தெரிவித்து, தனது 95 ஆம் ஆண்டு முதிர்ந்த வயதிலும் மும்முரமாக போராட்டக் களத்தில் நின்றார்!

‘கடவுளால்  உண்டாக்கப்பட்ட பிரதேசம்‘ என்று ஒரு காலத்தில் மற்றவர்களால் வருணிக்கப்பட்ட கேரளாவை, விவேகானந்தர் ‘‘பைத்தியக்காரர்களின் பரிசோதனைக் கூடம்போல் உள்ள நாடு’’ என்று அதிவேகமாகக் கண்டித்தார். காரணம், மூட நம்பிக்கைகளும், ஜாதி இழிவு, பேதங்களும் அங்கே பல் நூற்றாண்டாக தலை விரித்தாடியது. சமஸ்தான ராஜ்ஜியங்களாக அப்போது இருந்த திருவனந்தபுரம், கொச்சி போன்றவைகளில் அசல் இந்து அரசர்கள் ஆண்ட ‘ஹிந்து ராஜ்ஜியங்களாகவே’ அரசுகள் இயங்கி, ஜாதி - தீண்டாமை - நெருங்காமை - பாராமை - வீதிகளில் நடக்காமை - இவைகளைப் போன்ற மனித உரிமைப் பறிப்புகள் மலிந்து, மாற்ற முடியாத மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசிய நிலைதான்!

கேரளா அன்றும் - இன்றும்!

ஆனால், அதே நாடு கேரள மாநிலமாக ஆன நிலையில், இன்று எவ்வளவு முன்னேற்றம். படிப்பில், வேலை வாய்ப்பில், உழைப்பில் வளர்ச்சி அபரிமிதம். 100-க்கு 100 எழுத்தறிவு பெற்ற பகுதியாக மிளிர்கிறது (பிரிட்டிஷ், கிறித்தவ பாதிரிகள், இசுலாமியர்களின் மத மாற்றங்களும் கல்வி பரவியதற்குக் காரணம்).

நாராயண குரு, டாக்டர் பல்பு, சகோதரர் அய்யப்பன், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, அய்யன் காளி போன்ற பலரது, அயராத அறப் போர்கள் - சத்தியாகிரகங்கள் ஏராளம்!

சம உண்ணல்கள், ‘மித்திரபோஜன ஏற்பாடு’ செய்த இவ்வாண்டு நூற்றாண்டு விழாவை சகோதரர் அய்யப் பனின் தொண்டால் கொண்டாடியதை நினைவு கூறலாம்.

தந்தை பெரியார் நடத்திய

வைக்கம் போராட்டம்

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் ஈழவர்கள் மகாதேவர் கோவிலைச் சுற்றிய தெருக்களில் நடமாட உரிமையற்று, ஊரைச் சுற்றிச் செல்வதும், அதேநேரத்தில் நாயும், பன்றியும், கழுதையும் அத்தெருக்களில் சுதந்திர மாகத் திரியும் உரிமையும் பெற்ற கொடுமையை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் - சத்தியாகிரகம் என்ற ‘அமைதி’ அறவழி மறியல் - வெற்றி என்பது சாதாரண மானவையல்ல!

காந்தியார் போன்றவர்கள் தொடக்கத்தில் இதை எதிர்த்ததையும், மீறி தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டம் இருமுறை சிறையேகி, ஓராண்டு தொடர் ‘‘சத்தியாகிரகம்‘’ நடந்த பின்னரே, திருவிதாங்கூர் ராணி - தெருக்களை ‘‘கீழ்ஜாதியினர்’’ நடப்பதற்குத் திறந்துவிட உத்தரவிட்டார்.

1922 திருப்பூர்

காங்கிரஸ் மாநாட்டிலேயே...

அப்போதும் கோவில் நுழைவு உரிமை ‘‘கீழ்ஜாதி யினருக்கு’’ - குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிட்டவில்லை! சுசீந்திரம் (கன்னியாகுமரிக்குப் போகும் வழியில் உள்ள ஊர்) தாணு, மால், அயன் - மும்மூர்த்திகளைக் கொண்ட கோவிலில் முதல் மறியல் சத்தியாகிரகம் தொடங்கி பிறகு சுயமரியாதை இயக்கத் தவரால், ஈரோடு, திருவண்ணாமலை போன்ற பல ஊர்களில் நடந்து, வழக்குகள் போடப்பட்டு, பிறகுதான் மதுரையில் இராஜகோபாலாச்சாரியார் 1938 இல் தாழ்த்தப்பட்டவர் உள்ளே சென்று தரிசிக்கும் நிலைக்கு உத்தரவிட்டார். இதையே 1922 இல் திருப்பூரில் தந்தை பெரியாரும், திரு.வி.க.வும் தமிழ்நாடு காங்கிரசு காரியக் கமிட்டியில் தீர்மானம் கொண்டு போனபோது - மதுரை வைத்தியநாதய்யர் கடுமையாக எதிர்த்தார். (ஆதாரம்: திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்).

சி.பி.எம். ஆட்சியின் அமைதிப் புரட்சி!

இக்கட்டங்களை எல்லாம் தாண்டி, அதே கேரளாவில் ஆதிதிராவிடரும், அர்ச்சகராகலாம் என்ற அரசு ஆணை முன்பு (ஜி.ஓ. - கவர்ண்ட்மெண்ட் ஆர்டர்) நிறைவேற்றப்பட்டது. அது மிக வேகமாகச் செயல் படுத்தப்பட்டு, கேரளாவில் ஆதிதிராவிடரில் உள்ள பல பிரிவினரும் ‘‘புலையர்’’ உள்பட அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட ‘‘அமைதிப் புரட்சி’’ ஜாதி தீண்டாமை ஒழிப்பு அம்சங்கள் - பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசும், அதன்கீழ் இயங்கும் தேவசம் போர்டும் செயல்படுத்துவது பாராட்டத்தகுந்தது!

மேலும் மேலும் கேரளாவில் நியமனங்கள்

நேற்று (12.10.2017) வந்துள்ள ஒரு செய்தியில்,‘‘கொச்சி, குருவாயூர் தேவஸ்தான கோவில்களிலும் பார்ப்பன ரல்லாத 60 பேர் அர்ச்சகர்கள் ஆகின்றனர்’’ என்பதை கேரள தேவஸ்தான தேர்வாணையத்தின் தலைவர் ராஜகோபால் நாயர் இதன் தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கொச்சி - தேவஸ்தான கோவில்களில் 150 அர்ச்சகர் பணியிடங்கள், குருவாயூர் தேவஸ்தான கோவில்களில் 30 அர்ச்சகர் பணியிடங்கள் என, மொத்தம் 180 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இங்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் 50 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும், 10 இடங்கள் தாழ்த்தப்பட் டோருக்கும் விரைவில் ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரி வித்துள்ளார்.

இரத்தம் சிந்தாத இந்த அமைதிப் புரட்சிக்கான சரித்திர சாதனைக்காக, கேரள கம்யூனிஸ்ட் அரசினை வெகுவாகப் பாராட்டுகிறோம்.

தமிழ்நாட்டின் நிலைமை

முயல் - ஆமை கதையே!

இதை முந்திக் கொண்டிருக்க வேண்டிய தமிழ்நாடு அரசு - ‘முயல் - ஆமை கதை போல’ இருப்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.

தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. அரசு ஏற்கெனவே முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சட்டமன்றத்திலேயே கொடுத்த வாக்குறுதியை உடன டியாக நிறைவேற்றிட முன்வரவேண்டும்! 1970 ஆம் ஆண்டிலேயே தி.மு.க. ஆட்சியில் கலைஞர் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார் என்பதும் முக்கியமான தாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு சாதகமாகவே வந்து, தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் செல்லும் என்று கூறி, நியமனம் செய்யலாம் என்று ‘‘பச்சைக்கொடி’’ காட்டிவிட்டது!

நவம்பரில் மாபெரும் மாநாடு - போராட்டம்!

இன்னமும் ஏன் தயக்கம்? இதற்காகவே திராவிடர் கழகம் வருகின்ற நவம்பரில் ஒரு மாபெரும் மாநாட் டினை, அனைத்து இயக்கங்கள், அமைப்புகளை அழைத்து நடத்தி, மிகப்பெரிய அறப்போராட்டத்தினை - சிறை நிரப்பும் போராட்டம் தேவையா என்பதுபற்றி யோசித்து முடிவு எடுக்கவிருக்கிறது.

அதற்கு முன்பாகவே தமிழக அரசு, கேரள அரசு போல செயல்படவேண்டியது அவசரம் - அவசியம்!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

 


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை!

இந்தியா முழுமைக்கும் ஒரே சட்டம் என்பதால் கேரளாவைத் தொடர்ந்து

தமிழ்நாடு அரசும் ஆணை பிறப்பிக்கட்டும்!

முதல் தலித் அர்ச்சகர்  யேடு கிருஷ்ணனை வாயார, மனமார, கையார வாழ்த்துகிறோம்

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமத்துவ அறிக்கை

மருத்துவ சிகிச்சையைக்கூட  மனிதாபிமானமற்ற முறையில் விமர்சிப்பது பண்பாடுதானா?

இந்தியா முழுவதும் ஒரே சட்டம் என்பதால், கேரளாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகமக் கோயிலின் அர்ச்சக ராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசும் அதனைப் பின்பற்றி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கேரள மாநில கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணி யாற்றுவதற்கு தலித் வகுப்பைச் சேர்ந்த 6 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் இந்தப் பரிந்துரையை வழங்கி யுள்ளது.

கேரளாவைப் பாரீர்!

திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட் டின் கீழ் 1,248 கோயில்கள் உள்ளன. அவற்றில் காலியாக உள்ள 62 அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டன. அவற்றை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. அந்த அடிப்படையில் தகுதியானவர்களை பரிந்துரைக்கும் பொறுப்பு தேவஸ் வம் வாரியத்துக்கு உண்டு.

அதன்படி, 62 அர்ச்சகர்களை நியமித்து ஆணை வழங்கியுள்ளது. அதில் 26 பேர் பார்ப்பனர்கள்,  மீத முள்ள 36 பேர் பார்ப்பனர் அல்லாத ஜாதிகளைச் சேர்ந்த வர்கள், அதில் தலித்துகள் 6 பேரும் அப்பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தலித்துகளை அர்ச்சகர் களாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறை என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலித் தோழர்

நுழைந்தார் கருவறைக்குள்

இதனை அடுத்து இந்திய வரலாற்றில் ஆகம கோவில்களில்  முதல் முறையாக தலித் சமுதாயத்தை சேர்ந்த யேடு கிருஷ்ணன், (22), திருவல்லா அருகில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக நேற்று பொறுப் பேற்று கோவில் கருவறையில் பூஜை செய்தார்.

தலித் சமுதாயத்தை சேர்ந்த யேடு கிருஷ்ணன் என்பவர், திருவல்லா அருகில் உள்ள மணப்புரம் சிவன் கோயில் அர்ச்சகராக நேற்று பொறுப்பேற்றார். தன் குரு அனிருத்தன் தந்திரியிடம் ஆசி பெற்ற பின் கோயில் தலைமை அர்ச்சகர் கோபகுமார் நம்பூதிரியுடன் கோயில் கருவறைக்குள் சென்று   பூஜை செய்தார்.

யேடு கிருஷ்ணன் சமஸ்கிருத பாடத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட 36 பேரில யேடு கிருஷ்ணன் உட்பட ஆறு பேர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

90 ஆண்டுகளுக்கு முன் இதே கேரளத்தில் தந்தை பெரியார் குடும்பத்துடன் தீண்டாமை ஒழிப்புப் போராட் டத்தினைத் தொடங்கி நடத்தி, வெஞ்சிறையேகி போராட் டத்தினை வெற்றிகரமாக்கி வரலாற்றுச் சிகரத்தில் "வைக்கம் வீரர்" என்ற புகழுடன் பட்டொளி வீசிப் பறந்து கொண்டுள்ளார்.

அன்று உயர் ஜாதிகாரர்கள் குடியிருக்கும் வீதிகளில் கீழ் ஜாதியார் நடக்கக் கூடாது என்ற நிலையை எதிர்த்துப்  போராடினார்.

இப்பொழுது கோயில் கருவறைக்குள் வலுவாக பின் பற்றப்படும் தீண்டாமையை எதிர்ப்பதற்கான போராட் டத்தை தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதிப் போராட்டமாக அறிவித்து அந்தக் களத்தில் நின்றபடியே இறுதி மூச்சைத் துறந்தார்.

தந்தை பெரியார்

கொள்கைக்குக் கிடைத்திட்ட வெற்றி

தந்தை பெரியார் விட்ட பணியை, அவர் போட்டுத் தந்த பாதையில் அன்னை மணியம்மையார் காலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு இன்றுவரை போராட்டக் களத்திலேயே நின்று கொண்டுள்ளோம்.

இதற்கிடையே இந்தப் போராட்டத்தின் வெற்றி நன் னம்பிக்கை முனையை கேரளம் தந்துள்ளது. இதற்காக கேரளாவின்  கம்யூனிஸ்டுக் கட்சியையும், தேவஸ்வம் வாரியத்தையும் பாராட்டுகிறோம்.

வாயார, மனமார, கையார வாழ்த்துகிறோம்! வரவேற்கிறோம்!

இதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் மாமனிதராக யேடு கிருஷ்ணன் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயிலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் அடியைப்பதித்து, அர்ச்சகராகப் பணியைத் தொடங்கியுள்ளார்.

அவரை வாயார, மனமார, கையாரப் பாராட்டி வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். பிறப்பின் அடிப்படை யில் பேதம் விளைவிக்கும் வருணாசிரம மனுதர்மக் கோட்டையின் அஸ்திவாரம் நொறுங்கட்டும்! நொறுங் கட்டும்! தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் நடத்திய மனுதர்ம எரிப்புப் போராட்டத்தின் தீப்பிழம்பு ஜாதிய ஆணிவேரை சுட்டுப் பொசுக்கட்டும்! பொசுக் கட்டும்!!

கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாடு

அரசும் செயல்படட்டும்!

தமிழ்நாடு அரசும், இந்து அறநிலையத் துறையும் தந்தை பெரியார் பிறந்த, சுயமரியாதை இயக்கம் பிறந்த, திராவிடர் இயக்கம் பீடு நடைபோடும் தனித்தன்மை மிக்க தமிழ் மண்ணிலேயும் தாழ்த்தப்பட்டவர் உட்பட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பணி நியமனத்தைச் செய்தால் இந்த அரசுக்கு நற்பெயர் கிட்டக் கூடிய வாய்ப்பும் ஏற்படுமே!

இந்தியா முழுவதும் ஒரே சட்டம் தானே

இந்தியா முழுவதும் ஒரே சட்டம்தான் - கேரளா வுக்குப் பொருந்தக் கூடியது தமிழ்நாட்டுக்கும் பொருந் தும் அல்லவா?

தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படட்டும்!

 

 

கி.வீரமணி
தலைவர்,      திராவிடர் கழகம்

சென்னை
11.10.2017

'புதிய பார்வை' ஆசிரியர் நடராஜன் அவர்களின் மருத்துவ சிகிச்சையைக்கூட

மனிதாபிமானமற்ற முறையில் விமர்சிப்பது பண்பாடுதானா?

தந்தை பெரியார், காமராசரின் அணுகுமுறையைப் பின்பற்றட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள பண்பாட்டுத்தள அறிக்கை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பா?  தமிழர் தலைவர் கண்டனம்!

'புதிய பார்வை' ஆசிரியர் எம். நடராசன் அவர்களுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையைக்கூட அரசியலாக்கிப் பேசுவது மனிதாபிமானமற்றது - கண்டிக்கத்தக்கது; -- பொது வாழ்வில் மனிதாபிமானமும், பண்பாடும் பின்பற்றப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் அரசியல் மிக மிக மிக (எத்தனை 'மிக' வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) தரம் தாழ்ந்து, 'மனிதநேயம், பண்பாடு, நயத்தக்க நாகரிகம்' - இவை எல்லாவற்றையும் குழி தோண்டிப் புதைக்கும் அவமானகரமான நிலைக்குக் கீழிறங்கியுள்ளது!

"புதிய பார்வை" ஆசிரியரும், சீரிய தமிழ் இன உணர்வாளரும் பகுத்தறிவாளருமான நண்பர் எம். நடராசன் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகி, அவருக்கு மாற்றுக் கல்லீரல், சீறுநீரகம் பொருத்த வேண்டி, தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாற்று உறுப்புகள் பொருத்தப்பட்டு இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனைக் கண்காணிப்பில் இருந்து தொற்று நோய்கள் தாக்கா வண்ணம் அவர் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன!

தந்தை பெரியார், காமராசர்

காட்டிய பண்பாடு!

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவராக உள்ள ஒருவரும், வேறு சில ஊடகங்களிலும் தினசரிகளிலும் - மனிதாபிமானம் அற்று, அவருக்கு மாற்று உறுப்புகள் எப்படிக் கிடைத்தன என்று தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது மனிதாபிமானமா? பண்பாடா?

நோயாளி எத்தகைய கொடும் கொள்கை எதிரியாக இருந்தபோதும், மனிதநேயம் பொங்க, ராஜாஜி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரைப் பார்த்து கண் கலங்கினாரே தந்தை பெரியார் - இத்தனைக்கும் ஒருவருக்கொருவர் 'அன்பார்ந்த எதிரிகள்' என்று வர்ணித்துக் கொண்டவர்கள்!

அறிஞர் அண்ணா பொது மருத்துவமனையில் இருந்தபோது,  கலைஞரையும், மற்ற மூத்த அமைச்சர்களையும், "ஏன் இவரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் இன்னமும்   தாமதிக்கிறீர்கள்?" என்று கடிந்து கொண்டார் பெருந் தலைவர் காமராசர்!

மருத்துவ உதவியிலும்

மனிதாபிமானமற்ற பார்வையா?

இப்படிப்பட்ட பாரம்பரிய மண்ணில் ஒரு நோயாளி உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவரது துணைவியார் திருமதி சசிகலா சிறையிலிருந்து 'பரோலில்" வருவதைத் தாமதப்படுத்துவதோ அல்லது வந்த பின் அதுபற்றிய விமர்சன பரபரப்பு செய்திகளை வெளியிடுவதோ நியாயந் தானா?

தமிழக அதிமுக அமைச்சர்கள் சிலர் - இப்படி மனிதாபிமானமற்று (முன்பு நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழுந்து, அவர் பெயரைக் கூட உச்சரிக்கும் தைரியமற்ற இந்த வீரர்கள்)  இன்று தரக்குறைவான - கேள்விகளை  எழுப்புவது, சம்பந்தமில்லாமல் பேசுவது தமிழ் மண்ணுக்கு ஏற்புடையதா? வடக்கே  உள்ள பல கட்சித் தலைவர்கள்கூட பண்பு தவறாமல் நடக்கிறார்களே - இங்கே அரசியல் இவ்வளவு தரம் குறைந்துப் போகலாமா?

இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் எவர்மீதும் நமக்கு விருப்பு வெறுப்பு இல்லை.

ஏ, தாழ்ந்த தமிழகமே!

பொது நிலையில் நின்று யோசிக்கும் போது, இப்படி நோயாளிகளிடம்கூட  மனிதாபிமானம் காட்டாத மந்திரி பதவி, கட்சித் தலைவர் பதவி அரசியல்மீது என்றைக்கு மண் மூடும் என்பதுதான் நம் நெஞ்சை உறுத்தும் கேள்வி!

ஏ, தாழ்ந்த தமிழகமே!

 

கி.வீரமணி
தலைவர்,         திராவிடர் கழகம்


சென்னை
10-10-2017

கேரள அரசு எளிமையாக அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கியுள்ளது!

தமிழக அரசும் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அவசர அறிக்கை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பா?  தமிழர் தலைவர் கண்டனம்!

தந்தை பெரியார் அவர்கள் ஜாதி, தீண்டாமை ஒழிப்பின் ஒரு முக்கிய அம்சமாகவும், மனித உரிமைக் காப்பு நடவடிக்கையாகவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற தனது போராட்டத்தின் விளைவாக தற்போது கேரளாவில் எளிமையான நியமனங்கள் மூலம் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கி உள்ளது. எனவே தமிழக அரசும் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில், பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை  உடனே நியமனம் செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அவசர அறிக்கை வருமாறு:

கேரளாவில் 6 தாழ்த்தப்பட்ட ('தலித்') ஜாதியினர் உட்பட 36 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ள செய்தி எல்லா ஏடுகளிலும் வந்துள்ளது!

திருவிதாங்கூர் தேவசம் வாரியம் மொத்தம் 62 பேர்களை அர்ச்சகர்களாக நியமிக்கத் தேர்வு செய்த பட்டியலில் S.C., S.T., OBC என்ற வகுப்புகளிலிருந்து 32 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப 20 பேர்களும், பொதுப் போட்டி என்ற திறந்த போட்டியிலிருந்து 16 பேர்களும் (36இல்) அடங்குவர்.

S.C.  வகுப்பிலிருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள் ளார்கள். தேவசம் போர்டின் தலைவர் ராஜகோபாலன் நாயர் அவர்கள் இதனை செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

1949 முதல் இந்த தேவசம் போர்டில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை - போராட்டம் வலுவானது! பல ஆண்டுகளாகவே இக்கோரிக்கை அங்கே சமூக நீதி அமைப்புகளால் வற்புறுத்தப்பட்டு வந்தது!

வருங்காலத்திலும், கொச்சியிலும்,  மலபாரிலும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நியமனங்கள், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் இதே முறை தொடர்ந்து பின்பற்றப் படும் என்று திரு. ராஜகோபாலன் நாயர் தெரிவித்துள்ளார்!

இது பாராட்டி வரவேற்கப்பட வேண்டும்; முற்போக்கு அரசு என்று கேரள அரசு காட்டியுள்ளது!

மிக எளிமையாக செயல்படுத்தியுள்ளது!

பல ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிட வாய்ப்பு அளிக்கும் அரசு ஆணை  (G.O.) (தமிழ்நாடுபோல சட்டமன்றத்தில் தனியே சட்டமாக இயற்றப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத் தகுந்தது) போடப்பட்டது!

அதனை எதிர்த்து யாரும் தமிழ் நாட்டில் நடந்தது போல், அர்ச்சகர்களும், பார்ப்பனர்களும், காஞ்சி சங்கராச்சாரி போன்ற மடாதிபதிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவில்லை.

இதனால் மிக எளிமையாக, முறையாக அதனை அங்குள்ள  அரசு (கேரள மாநில) செயல்படுத்திட ஏதுவாக அமைந்தது!

மானமிகு கலைஞர் ஆட்சியில்.....

தந்தை பெரியார் அவர்கள் ஜாதி - தீண்டாமை ஒழிப்பின் ஒரு முக்கிய அம்சமாகவும், மனித உரிமைக் காப்பு நடவடிக்கையாகவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற தனது போராட்டத்தைத் துவக்கியபோது, தி.மு.க. ஆட்சியின் முதல்வராக மானமிகு கலைஞர் இருந்தார்; அவர்  உடனே அய்யாவை நேரில் வந்து சந்தித்து "இதற்கென தனிச் சட்டம் ஒன்றினையே கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்திடுவோம். இதற்காகப் போராடவோ, சிறை செல்லவோ தேவை ஏற்படாது; இது தங்கள் அரசு தானே!" என்று கூறி 1970இல் பாரம்பரிய அர்ச்சகர் முறையை ஒழித்துத் தகுதி அடிப்படையில், அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர் நியமனம் நடக்கும் என்று சட்டம் இயற்றினார் (2.12.1970). உடனே தமிழ்நாட்டு பார்ப்பனர்கள்,  மடாதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

பார்ப்பனர், மடாதிபதிகள் வழக்கு

இதனை உச்சநீதிமன்றத்தில் அன்றைய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் எஸ்.எம். சிக்ரி, ஜஸ்டிஸ் ஏ.என். குரோவர், ஜஸ்டிஸ் ஏ.என் ரே, ஜஸ்டிஸ் டி.ஜி. பாலேகர், ஜஸ்டிஸ் எம்.எச். பெய்க் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து இச்சட்டம் செல்லும் - அரசமைப்புச் சட்டம் 25 - 26 பிரிவுகளுக்கு முரண் அல்ல என்று தீர்ப்பு தந்தனர்!

என்றாலும் 'எங்கே திமுக அரசு  நாத்திகர்களை அர்ச்சகர்களாக நியமித்து விடுவார்களோ' என்ற அச்சம் தேவையற்றது; அப்படி இருந்தால் நீங்கள் இதே நீதிமன்றத்திற்கு வந்து பரிகாரம் தேடலாம் என்று ஒரு கருத்தினையும் உள்ளடக்கினார்கள்!

இதனால் அது உடனடியாக செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது!

தனிச் சட்டம் நிறைவேற்றம்!

"தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக" இதனை வருணித்த முதல்வர் கலைஞர் அவர்கள் 2006இல் ஒரு தனிச் சட்டம் (Act 15 of - 2006) நிறைவேற்றினார்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுபோட்டு வைணவ, சைவ ஆகமப் பாடங்களை நடத்தி ஓராண்டு படித்து பட்டயம் பெற்ற அனைத்து ஜாதியிலிருந்தும் பார்ப்பனர் முதல் ஆதி திராவிடர் வரை 69 சதவீகித இடஒதுக்கீடு அடிப்படையிலும், பொதுப் போட்டி அடிப்படையிலும் 207 பேர் படித்து தகுதி பெற்ற அர்ச்சகர்களாகத் தேர்வு பெற்றனர்.

இதனை எதிர்த்து தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலனசபை, ஆதி சைவ சிவாச்சாரியார் நலச் சங்கம் (மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர்கள்) உட்பட உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு 'தடையாணை' ' (Stay) பெற்று   விட்டனர்.

சட்டம் செல்லும் என தீர்ப்பு

இறுதியில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015இல் ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகாய், ஜஸ்டிஸ் ரமணா ஆகியோரின் அமர்வு தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராகும் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

அத்தீர்ப்பில் பாரா 43-இல் கூறப்பட்டுள்ள ஒரு கருத்து, "ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் அதன் படிக்கான சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும்.

சேஷம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளபடி அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி செய்யப்படல் வேண்டும்" என்றும் வலியுறுத்தியது அவ்வமர்வு.

போராட்டம் 5000 பேர் கைது - சிறை

ஏற்கெனவே ஆகமங்களை பள்ளிகளில் படித்து தகுதி பெற்று தயார் நிலையில் உள்ளவர்களை உடனடியாக - இத்தீர்ப்பு எந்தத் தடையும் செய்யாததால்  தமிழக அரசு  - முன்பு சட்டமன்றத்தில் அளித்த உறுதிமொழிகளைச் செயல்படுத்திட நாம் ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் - தனியே கடிதம் எழுதி போராட்டமும் (சட்டமன்றத் தேர்தலின்போது (2016 மே 16) நடத்தி 5000 பேர் நாடு முழுவதும் கைதாகி சிறையேகினோம்!

ஏற்கெனவே எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதும்,  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் கொடுத்த வாக்குறுதி, தமிழக அரசு சார்பில் என்பதால் அது இன்றைய எடப்பாடி அரசையும் கட்டுப்படுத்தக் கூடிய உறுதிமொழியே ஆகும்.

எம்.ஜி.ஆர். நூற்£ண்டு விழாவைக் கொண்டாடுகிறபோது  எம்.ஜி.ஆர். அரசும், ஜெயலலிதா சட்டப் பேரவைக்குள் தந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் நியமனம் 69 சதவிகித அடிப்படையில் செய்வோம் என்று கூறிய உறுதிமொழியையும் செயல்படுத்தப்படுவது இவ்வரசுக்குக் கூட பெருமையாக முடியுமே!

தமிழக அரசு அலட்சியம் காட்டலாமா?

கேரளத்தில் எளிமையான நியமனங்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக்கிட நடைபெறும்போது, தந்தை பெரியார் மண்ணில் இது, சட்டத் தடைகளோ, தீர்ப்பு இடைகளோ குறுக்கே நிற்காதபோது செயல்படுத்த அலட்சியம் காட்டலாமா?

நாம் இன்றைய முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தனிக் கடிதமும் அனுப்பியுள்ளோம்.

எனவே, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் மூலம் உடனடியாக பயிற்சி பெற்ற அனைவரையும் 69 சதவிகித  இடஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் செய்ய தாமதிக்கவே கூடாது!

இன்றேல் அனைத்துக் கட்சியினரையும் அழைத்து, கலந்தாலோசித்து அடுத்த கட்டத்தை அறிவித்தாக வேண்டிய கட்டாயக் கடமை திராவிடர் கழகத்திற்கு உண்டு.

எனவே தாமதிக்காமல், கேரளாவைப்போல உடனே செயலில் இறங்கட்டும் இன்றைய தமிழக அரசு!

சட்டத் தடை ஏதும் இல்லை - மறவாதீர்!

 

கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்

 

சென்னை

7-10-2017

கருநாடக மாநிலத்தில்

70 விழுக்காடு இடஒதுக்கீடு

பெங்களூரு, அக். 6 கல்வி மற்றும்  வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டில்  தனியே சட்டத்திருத்தம் செய்யப்பட்டு இட ஒதுக்கீடு 69 விழுக்காடாக பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு, கருநாடக மாநிலத்தில் 70 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளதாக கருநாடக முதல்வர் சித்தராமையா குறிப்பிட் டுள்ளார்.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக் கீடு வழங்குவதற்காக அரசமைப்புச் சட் டத்தில் 76 ஆவது திருத்தம் செய்யப்பட்டு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டு வருகிறது.

தமிழ்நாடு வழிகாட்டியுள்ளபடி, கரு நாடக மாநிலத்தில் 70 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

விதான் சவுதாவில் வால்மீகி பிறந்த நாள் விழாவில் கருநாடக முதல்வர் சித் தராமையா கலந்துகொண்டு உரையாற்றிய போது  இத்தக வலைத் தெரிவித்தார். அவர் பேசும்போது குறிப்பிட்டதாவது:

இடஒதுக்கீடு அளிப்பதில் உச்சநீதி மன்றம் 50 விழுக்காட்டுக்குமேல் கூடாது என்று உச்ச வரம்பாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், இடஒதுக்கீடு பெறுகின்ற வகுப் பினருக்கு 69 விழுக்காட்டை தமிழ்நாடு அரசு அளிக்க முடிவு செய்து வழங்கி வருகிறது.

வாழ்வாதாரத்துக்காக போராடி வரு கின்ற உழைக்கும் மக்கள் முன்னேற்றம் அடைந்திட, எல்லா நிலைகளிலும் போது மான பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளனர்.

கருநாடக அரசு தாழ்த்தப்பட்ட, பழங் குடி வகுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு கல்வி யிலும், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பிலும் உரிய வாய்ப் புகளைப் பெற்றிட கருநாடக மாநிலத்தில் 70 விழுக்காடு இட ஒதுக்கீடாக  அளிப்பதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவரும்.

நான் இதை செய்வது வாக்குகளுக்காக அல்ல. வாய்ப்பற்ற மக்களுக்கு சமூக நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதை செய்கிறேன்.

இந்த நிதி ஆண்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு நலத்திட்டங் களை செயல்படுத்துவதற்காக ரூ.7ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களின் பேரணியை பல்லாரியில் டிசம்பர் முதல் வாரத்தில் அரசே முன்னின்று நடத்திட உள்ளது.

இவ்வாறு கருநாடக முதல்வர் சித்த ராமையா கூறினார்.

 

 

--------

குஜராத்திலும்  இடஒதுக்கீடு

சங்கர்சிங் வகேலா வலியுறுத்தல்

தமிழகத்தைப் பின்பற்றி குஜராத்தில் படேல்கள் உள்ளிட்ட இதர பிற்படுத்தப் பட்ட சமூகத்தினருக்கு கூடுதலாக 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், ஜன் விகல்ப் முன்னணியின் தலை வருமான சங்கர் சிங் வகேலா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறிய தாவது: இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படாத சமூகத்தினருக்கு கூடுதலாக 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மாநிலங்களில் 49.5 சதவீதத் துக்கு மேல் இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதன் காரணமாக, கூடுதலாக 25 சதவீதம் இடம் ஒதுக்க முடியாது என்று கருதப்படுவது தவறு. ஏற்கெ னவே, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. எனவே, தமிழகத்தைப் பின்பற்றி குஜராத் தும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின ருக்கு கூடுதலாக 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார் அவர்.

குஜராத் சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், இட ஒதுக்கீடு கோரி போராடி வரும் படேல் சமூகத்தினருடன் மாநில பாஜக அரசு பேச்சு வார்த்தை நடத்தி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தினருக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

தேர்தலில் வெற்றி தோல்வியை முடிவு செய் யும் மாபெரும் வாக்கு வங்கியான படேல் சமூகத்தினரைக் கவரவே இந்தச் சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப் படுகிறது. எனினும், படேல்களின் முக்கியக் கோரிக்கையான இட ஒதுக்கீடு குறித்து மாநில அரசு எதையும் தெரிவிக்க வில்லை. இதையடுத்து, இட ஒதுக்கீட்டுக் கான படேல்களின் போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழுத் தலைவர் ஹார் திக் படேல் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சங்கர் சிங் வகேலா வலியுறுத் தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சங்கர்சிங் வகேலா, கட்சியின் மேலிடத்துடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் அணிகளுக்கு மாற்றாகக் கருதப்படும் ஜன் விகல்ப் முன்னணி யில் இணைந்து, அதன் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

குறிப்பு: தமிழ்நாடு அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி  இந்திய அரசமைப்புச் சட்டம் 76ஆவது திருத் தத்தின்படி ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Banner
Banner