ஆசிரியர் அறிக்கை


பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்த தமிழ்நாடு அரசின் செயல் வரவேற்கத்தக்கது. தமிழ் மக்களின் மகிழ்வுக்கு உரியதாகும். போதிய ஆதாரமோ, சரியான விசாரணையோ நியாயப்படி நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் முதல், விசாரணை நடத்திய சி.பி.அய். கண்காணிப்பாளர் தியாகராஜன் வரை - பேரறிவாளன் பற்றி கூறியுள்ள தகவல்கள்படி, 25 ஆண்டு சிறைத் தண்டனைக் கொடுமையை அனுபவித்த பேரறிவாளன் போன்றோரை விடுதலை செய்வதே நியாயங்களை நிறுத்த உதவும் செயல் என்பதை தமிழக அரசுக்கு நாம் வேண்டுகோளாகவும் வைக்க விரும்புகிறோம்.

கி.வீரமணி 
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை
24-9-2017

திருவள்ளூர்மாவட்டத்தில்பா.ஜ.க. பிரமுகர் அரங்கேற்றிய கபட நாடகத்தை பொதுமக்களே புரிந்து கொள்வீர் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எச்சரிக்கை  அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:

கபட நாடகமும் - கைதும்!

திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம் என்ற நபர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. எஸ்.சி. பிரிவு செயலாளராக உள்ளவர். இவர் நேற்று முன்தினம் (21 ஆம் தேதி) அதிகாலை, தன் வீட்டுக்குள்ளே மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதாகவும், அதனால் வீட்டிலிருந்த சோபா தீப்பிடித்து எரிந்ததாகவும் காவல்துறையில் புகார் கொடுத்ததையடுத்து, திருவேற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து, அது அவரே நடத்திய நாடகம் - அப்படி ஏதும் நடக்காமலேயே அவர் செய்தது என்று கண்டறிந்து, நேற்று (22.9.2017) மாலை பரமானந்தத்தினைக் கைது செய்துள்ளனர்.

‘‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’’ என்று ஒரு பழமொழி நம் நாட்டில்  உண்டு. ஆனால், இவரின் புளுகோ ஒரு நாள்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை!

தனது தோல்வியைத்
திசை திருப்புவதற்காக...

அவரிடம் பதிவு செய்த வாக்குமூலத்தில் சில உண்மைகளை காவல்துறையினர் அம்பலப்படுத்தி யுள்ளனர்.

‘‘பரமானந்தத்திற்குச் சொந்தமான நிலத்தருகே பொதுமக்கள், கடந்த ஆண்டு நடந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை பந்தல் அமைத்தனர். இதற்கு எதிராக பரமானந்தம் மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர்கள் பூவிருந்தவல்லி மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் விளைவாக பொதுமக்கள் யாக சாலைக்காக அமைக்கப்பட்ட பந்தலை அகற்றி விட்டு, அதே இடத்தில் கொட்டகை அமைத்தனர். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த பரமானந்தம், தனது தோல்வியைத் திசை திருப்புவதற்காக, தன் வீட்டுக்குள்ளே தானே தீயை வைத்துவிட்டு, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது! (‘தி இந்து தமிழ்’, 23.9.2017, பக்கம் 4)

இது முதல்முறை அரங்கேற்றம் அல்ல!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் செய்யும் இத்தகைய பித்தலாட்ட நாடகம் இது முதல்முறை அரங்கேற்றம் அல்ல. இதற்குமுன் பல இடங்களிலும் இதுபோன்ற பொய்ப் புகார்கள் காவல்துறையினரிடம் தாக்கல் செய்யப்பட்டு, பிறகு பொய் என்று கண்டறியப்பட்டுள்ள சம்பவங்கள் பற்பல ஊர்களில் நடந்துள்ளன.

திண்டுக்கல்லில் பா.ஜ.க. சேர்ந்த ஒருவரின் வீட்டு ஜன்னலை உடைத்து தாக்க வந்தனர் என்று கொடுக்கப்பட்ட புகாரும் கற்பனை - திட்டமிட்ட நாடகம் என்று காவல்துறை கண்டறிந்து  - சில மாதங் களுக்குமுன் இந்நிகழ்வு - கற்பனை, ஜோடிப்புகள் என்பது அம்பலமாகியது!

கோவை வடவள்ளியில் கடந்த இரண்டு ஆண்டு களுக்குமுன்பு ஒரு பொய்ப்புகாரை காவல்துறையினர் விரைந்து, விசாரித்து இதன் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தனது வீட்டில் குண்டு வீசப்பட்டது என்று காவிக் கட்சிப் பிரமுகர் கூறிய புகாரில் உண்மை இல்லை என்று கண்டறியப்பட்டது.

ஈரோட்டை அடுத்த சதுமுகையில் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை போட்டதும் இந்து முன்னணி யினர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

குறுக்குவழியில்
விளம்பரம் தேடுவது!

தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அவரது உடலைக்கூட வாங்கமாட்டோம் என்று சண்டித்தனம் செய்து, பிறகு ஒரு இஸ்லாமிய இளைஞர்மீது கொலைக் குற்றம் சுமத்தியதால்,  ஊரில் பதற்றமான சூழ்நிலை உருவானது. பிறகு தமிழகக் காவல்துறை சில மாதங்களுக்குப் பிறகு இந்த உண்மைகளை அலசி ஆராய்ந்து வெளிப் படுத்தியது!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை வளர்த்தெடுக்க இப்படி ஒரு குறுக்குவழி, விளம்பரம் தேடுவது ஒருபுறம் -

‘திடீர் தேசப் பக்த திலகங்களாக’

மற்றொரு புறம், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பழைய கிரிமினல் பேர்வழிகளுக்கும், பொறுப்புக்கு ஆட்கள் சிக்காத நிலையில், இவர்கள் திடீரென்று காவி உடை அணிந்து, காக்கிகளை மிரட்டி, தாங்கள் ஏதோ மிகப்பெரிய பொது சேவையாளர்கள், ‘திடீர் தேசப் பக்த திலகங்களாக’ வேடமணிந்து உலா வருகின்றனர்.

எனவே, பொதுமக்களுக்கு இது புரிய வைக்கப்படல் வேண்டும்.

எந்த அரசியல் கட்சியானாலும், அவர்களது பூர்வோத்திரம் அறிந்தே தங்கள் அமைப்பில் சேர்த்தால், புது உறுப்பினர்களால் பொது ஒழுக்கம் காப்பாற்றப்பட பெரிதும் உதவிடும். கட்சியை வளர்க்கும் கண்ணோட்டம் தேவைதான் - ஆனால், பொது ஒழுக்கம் அதைவிட முக்கியம் அல்லவா!சென்னை                                                                  தலைவர்
23.9.2017                                                             திராவிடர் கழகம்.


தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்!

மதச் சடங்குகளை உள்ளடக்கிய ‘யோகா'வை பள்ளிகளில் நடத்துவதா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

சென்னை பல்கலைக் கழகத்தில் இன்று (21.9.2017) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் கட்டாயமாகத் தொடங்கப்படும் என்று அறிவித் துள்ளார்.

‘யோகா' என்பது வெறும் உடற்பயிற்சியாக மட்டும் அல்லாமல், அதில் இந்து மத சம்பிரதாயங்கள், சடங்குகள், ‘ஓம்' உள்பட இடம்பெறும் நிலையில், ஒரு மதச்சார்பற்ற அரசின் சார்பில் ‘யோகா'வைக் கட்டாயமாக்குவது சரியானதல்ல - உகந்ததல்ல!

பல்வேறு மத நம்பிக்கை உள்ளவர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங் களில், குறிப்பிட்ட இந்து மத சடங்காச்சாரங்களைத் திணிப்பது சட்டப்படியும் குற்றமாகும்- இது வன் மையாகக் கண்டிக்கத்தக்கது.

மதச் சார்பின்மைக்கு விரோதமான தமிழ்நாடு அரசின் இந்த முடிவு கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


சென்னை                                               தலைவர்
21.9.2017                                         திராவிடர் கழகம்.

 

இவ்வாண்டு பெரியார் பிறந்த நாளில் (17.9.2017) ஒரு மகிழ்ச்சியான செய்தி நேற்று பிற்பகலிலேயே (On the eve of the Thanthai Periyar Birthday) வந்துவிட்டது.

தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கில் உள்ள பள்ளி மாணவர் களிடையே, தொண்டு மனப்பான்மையை வளர்க்கவே தோற்று விக்கப்பட்ட நிறுவனத்தை, இவ்வாண்டு ‘காவி கிரகணம்' மறைத்து கைப்பற்றி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் ஹிந்துத்துவ மதவெறியைப் புகுத்திட, பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள எப்போதும் மற்ற தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து, ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் என்பதால், சட்டத்தின் - நீதியின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டுவரும் எச்.இராஜா என்ற பார்ப்பனர் - கல்வித் துறையினர் மட்டுமே பொறுப்பு வகித்த தமிழ்நாடு சாரணியர் இயக்கத் தலைமையைக் கைப்பற்றிட தேர்தலில் நின்று, தமிழ்நாட்டின் கல்வி அமைச்சக இயந் திரத்தையும் பெருமளவில் பயன்படுத்தினார்.

மதவாதத்திற்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்கள், தளபதி மு.க.ஸ்டாலின் உள்பட இதற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்த்து, அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கோரினர். நாமும் கோரினோம்.

நேற்று நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள், தமிழ் நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எச்.இராஜா வெறும் 52 வாக்குகள் மட்டுமே பெற்று (அதுவும் ‘‘பகீரதப் பிரயத் தனத்’’துக்குப்பின்) படுதோல்வி அடைந்துள்ளார். 2 வாக்குகள் செல்லாதவையாகும்

ஏற்கெனவே அப்பதவிக் குப் போட்டியிட்ட ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் டாக்டர் மணி அவர்கள் 232  வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்!

தனது தோல்வியைக்கூட கண்ணியத்துடன் ஏற்றுக் கொள்ளாத பண்பற்ற ஓர் மனிதர் இவர். தேர்தல் சரியாக நடைபெறவில்லை என்று பழிபோட்டு தேர்தல் முடிவு வந்த பிறகு கூறுவதிலிருந்தே இவர்எப்படிப்பட்டவர் என்பதை நாடும், மக்களும் அறிந்துகொள்வர்.

தமிழ்நாட்டில் காவிக் கடையை விரிக்க முயன்றவர்களுக்கு ‘‘போணியாகாத’’ முதல் தோல்வி - முற்றாகத் தொடருமே தவிர, அவர்களின் பதவி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதற்கு இது ஒரு மாபெரும் பாடம் - சுவரெழுத்து!

தந்தை பெரியார் உள்பட பலரையும் தாறுமாறாக விமர்சித்த ஒருவருக்குத் தக்க பாடத்தை - தமிழ்நாடு அரசு இயந் திரத்தையும் தாண்டி பாடம் கற்பித்த வாக்காளர்களுக்கு நமது பாராட்டு!

வெற்றி பெற்ற டாக்டர் மணி அவர்களுக்கு நமது மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள்.

காவிகளின் தோல்விகள் தொடரட்டும்!

 

 

கி.வீரமணி
தலைவர்,           திராவிடர் கழகம்

சென்னை
17.9.2017

அணி திரண்டு பணி முடிப்போம் வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியாரின் “மண்டைச் சுரப்பை” (சிந்தனைகளை) உலகம் இன்று தீவிரமாகப் பின்பற்றுகிறது!

இன்று 139ஆம் ஆண்டு அவர்தம் பிறந்த நாள்!

இளைஞர்கள், மாணவர்கள், மகளிர்  மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகரமான லட்சியங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டார்கள்!

இந்தியாவின் இதர மாநிலப் பரப்புகளில் மட்டுமல்ல; உலக வரைபடத்தில் உள்ள பற்பல கண்டங்களிலும், தந்தை பெரியார்,  உருவத்தால் மறையாது வாழ்ந்த காலகட்டத்தையும் தாண்டி, இப்போது அவர் தத்துவங்களாக உயர்ந்து நின்று வழிகாட்டும் - ஒளியூட்டும் நிலையில் ஒப்பற்ற கலங்கரை வெளிச்சமாகக் கூட அல்ல; பகலவனாகவே ஒளிவீசித் திகழ்கிறார்!

இந்த சுயமரியாதைச் சூரியனின் கதிர் வீச்சின் ஒளி “அய் இரண்டு திசை முகத்தும்‘’ பாயத் தொடங்கிவிட்டன!

அறியாமை, சமத்துவமின்மை, பேத வாழ்வு என்ற இருள் அகலத் தொடங்கி, அகிலத்திலும் அய்யாவை - அவர் தந்த தத்துவங்களை - தங்களது தன்மானம் காத்து, மானுட நேயத்தை வளர்த்து உலகம் ஓர் குலம்; யாவரும் கேளிர், என்ற பரந்து விரிந்துபட்ட பேதமற்ற புதுஉலகு சுயமரியாதை மலர்களாகப் பூத்துக் காய்க்கத் துவங்கிவிட்டன!

“பெரியார் ஒரு சகாப்தம்‘’ என்பதையும் தாண்டி பெரியார் ஒரு தனிமனிதரல்ல; அவர் ஒரு சமூக விஞ்ஞானம் என்பதை அகிலம் உணர்ந்து அவர்வழி நிற்க முயலுகிறது!

அறிவியல் வளர்ச்சியை எவர்தாம் புறக் கணித்து விடமுடியும்?

எவ்வளவுதான் வேதம் - இதிகாசம் என்று வாயளவில் அளந்தாலும், நடைமுறையில் பயணத்திற்கு விமானம், போருக்கு - வில்லும் வேலும் அல்ல - மாறாக புதுப்புது சக்தி வாய்ந்த போர்க் கருவிகள் - கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள் - இவைகளைத்தானே பயன்படுத்தி வெற்றிகாண மனிதகுலம் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறதே!

அதுபோலத்தான் தந்தை பெரியார் அறிவித்த அறப்போர் - ஜாதிக்கு எதிரான, மூடநம்பிக்கை - மதவெறிக்கு எதிரான, பெண்ணடிமைக்கு எதிரான  - போராக இன்றும் வெற்றிகரமாக முன் னெடுத்துச் செல்லப்படுகிறது!

‘ஜாதிகள் இல்லா நாடு’ - “சாமியார் இல்லா நாடு” என்பது நோய்க்கிருமிகள் அண்டா வீடு போன்றது என்பதை ஏற்காதோர் எவருமிலர்!

மானுடம் தழைக்க மாமருந்தாய் வந்தார் பெரியார்; தந்தார் தன்னை மெழுகுவர்த்தியாய்!

அவரது வாழ்வு - அவருக்காக அல்ல! நமக் காக,

அவரது சிந்தனை - நம் சந்ததிக்காக,

அவரது போராட்டங்கள் - நம் உரிமைகளைக் காப்பதற்காக,

அவரது வெற்றி - அடிமைகளின் விடுதலைக் கான வாகை!

எனவே

அணிதிரண்டு அய்யாவின் பணி முடிப்போம்!

வாரீர்! வாரீர்! வாரீர்!


கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்


சென்னை17.9.2017

Banner
Banner