ஆசிரியர் அறிக்கை

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

பொள்ளாச்சியில் கடந்த ஆறு ஆண்டுகாலமாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களும், பணியாற்றும் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வளர்ந்த ஒரு சமுதாயத்தில் நாம் இருக் கிறோமா என்ற கேள்வியை எழுப்பி, வெட்கமடையவும் செய்கிறது.

இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்று எண்ணும்போது, அதிகாரம் எந்த அளவுக்குக் கேவலத்தின் உச்சியையும் எட்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

இந்தக் கேவலமான குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்ட னைக்கு ஆளாக்கவில்லை என்றால், பெண்களுக்கு இந்த நாட்டில் பாது காப்பு என்பதே இல்லையோ என்ற பேரச்சத்தைத்தான் ஏற்படுத்தும். உலக நாடுகள் மத்தியில் நாம் தலைக்குனியும் அவலத்தை உண்டாக்கும். திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பில் சென்னையில் மிகப் பொருத்தமாக அன்னை மணியம்மையாரின் நினைவு நாளான மார்ச் 16 ஆம் தேதி  (சனிக்கிழமை) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

கட்சிக் கண்ணோட்டம், அரசியல் நிறம் எவையும் உண்மைகளை வெளியே கொண்டுவருவதற்குக் குறுக்கே நின்று,  குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை அளிப்பதில் முட்டுக்கட்டை போட்டுவிடக் கூடாது!

அன்னை மணியம்மையார் நூற் றாண்டு ஆண்டான இந்தாண்டில், பெண்கள் மத்தியில் இந்த வகையில் விழிப்புணர்வுப் பணி வீறுகொண்டு எழும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வழக்கு என்ற பெயரால் பல யுக்தி களைக் கையாண்டு காலத்தை நீட்டிக் கொண்டு போகாமல், நிர்பயா வழக்கில் நடந்ததுபோல, வெகுவிரைவில் குற்ற வாளிகள் தண்டிக்கப்படட்டும்!

பெண்களை மய்யப்படுத்தி விளம் பரங்கள், கலை என்ற பெயரால் நடக்கும் சீர்கேடுகள், ஆபாசங்கள், இருபொருள் வசனங்கள், ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மைகள் மறுபரிசீலனைக்கும், நட வடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டும். காவல்துறையில் இதற்கென்று ஒரு தனிப் பிரிவையும் ஏற்படுத்தி, பெண்கள் மத்தியில் ஏற்படும் அச்சத்தைப் போக்கிடவேண்டும்.

இது மிகவும் அவசரம், அவசியம்!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

12.3.2019

அன்னையார் அவர்களின் இந்த நூற்றாண்டில் (2019-2020) கீழ்க்கண்ட அறிவிப்புகளை தமிழர் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி பெரியார் மணியம்மை ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. பலரும் இதற்கு நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இதற்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு 50 விழுக்காடு வரி விலக்கு (80G) கிடைக்கும். அன்னையார் அவர்களுக்கு தந்தை பெரியார் எழுதி வைத்திருந்த சொத்துக்கள், அன்னை மணியம்மையாரின் சொத்துகளை உள்ளடக்கிய அறக்கட்டளை ஒன்றினை அன்னை மணியம்மையார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் இருந்தபோது  உருவாக்கினார்.

மேனாள் சட்டமன்ற செயலாளர் சி.டி. நடராசன், சென்னை பொது மருத்துவமனை கண்காணிப்பாளர், தந்தை பெரியாரின் தனி மருத்துவர் டாக்டர் கே. இராமச்சந்திரா, சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு, வழக்குரைஞர் கோ. சாமிதுரை, மேட்டூர் டி.கே. இராமச்சந்திரன் ஆகியோர் சாட்சி கையொப்பமிட்டனர். 1974 செப்டம்பரிலேயே பெரியார்  மணியம்மை கல்வி அறப் பணிக் கழகம் என்று சட்டதிட்ட விதிகளுடன் பதிவு செய்யப்பட்டது.

அன்னையார் அவர்களின் நூற்றாண்டையொட்டி லால்குடி வட்டத்தைச் சேர்ந்த தச்சன்குறிச்சி என்னும் ஊரில் ஓர் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட உள்ளது. அதே போல வேலூர் லத்தேரியில் உள்ள உயர்நிலைப் பள்ளியை இந்த நிறுவனம் தத்தெடுக்கும் என்று அறிவித்துக் கொள்கிறோம் (பலத்த கரஒலி).

1919-1920 கல்வியாண்டில் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்புக்குச் சேரும் இருபால் மாணவர்களுக்கும் முதலாண்டில் முதல் செமஸ்டரில் கல்விக் கட்டணம் (டுயூஷன்ஃபீஸ்) கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அன்னை மணியம்மையார்  பிறந்த இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைத் தங்களின் சொந்த கல்வி நிறுவனமாகக் கருத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு  நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். தந்தை பெரியார்  அவர்களுக்கு இந்த மருத்துவமனையில் தான் டாக்டர் பட் அவர்கள் 5 மணி நேரம்  அறுவை சிகிச்சைகள் செய்தார்  என்பதை நினைவு கூர்கிறோம் என்றார். விழா மேடையில் அன்னை மணியம்மையார் பவுன்டேஷனுக்கு நிதி அளித்தனர்.

சென்னையில் நான் பங்கேற்கிறேன்: தமிழர் தலைவர் அறிக்கை

கடந்த 28 ஆண்டுகளாக ஒரு கொலை வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட எழுவரையும் விடுதலை செய்யக் கோரி மார்ச் 9 ஆம் தேதியன்று மாலை 4 மணிமுதல் 6 மணிவரை மனித சங்கிலி அறப்போராட்டம் - சென்னை - கோவை - மதுரை - திருச்சி - நெல்லை - சேலம் - புதுச்சேரி ஆகிய ஏழு இடங்களில் நடைபெற உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு தமிழரும், மனிதநேயர்களும் ஆற்றவேண்டிய அடிப்படையான கடமை இதுவாகும்.

சென்னையில் கலைவாணர் அரங்கம் அருகே நான் கலந்துகொள்கிறேன்.

கழகத் தோழர்கள் குறிப்பிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் திரளாகப் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்கு முன் னுரிமை கொடுத்து வெற்றியடையச் செய்வீர்!

- கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

6.3.2019

மத்திய இடைக்கால பட்ஜெட் என்பது வானவில் போன்றது;

மத்திய பட்ஜெட் குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர்  அறிக்கை

மத்திய இடைக்கால பட்ஜெட் என்பது வானவில் போன்றது; பார்ப்பதற்கு அழகே தவிர, அதனால் பயன் ஏதும் இல்லை என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பதவிக் காலம் இன்னும் 60 நாள்கள் கூட இல்லாத நிலையில், அந்த அரசால் நேற்று (1.2.2019) தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட் -2019-2020 (Interim Budget - 2019-2020) என்பது உலகறிந்த உண்மை.

தேன் தடவிய வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பது எதைக் காட்டுகின்றது?

ஆனால், இந்த வரவு - செலவுத் திட்டத்தினை ஏதோ அடுத்த அய்ந்தாண்டு காலத்திற்கும் இவர்களுக்குப் பட்டா எழுதிக் கொடுத்ததுபோல, பல தேன் தடவிய வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பது எதைக் காட்டுகின்றது?

மலையை நகர்த்தி வைக்க 30 நாள் எனக்கு ஊட்டச் சத்துணவு தந்து பராமரியுங்கள் என்று கூறி, அதை நம்பி 30 நாளும் உணவு கொடுத்து ஊக்கமூட்டினால் - கெடு நாள் வந்தவுடன், அதைத் தூக்கி என் தோளில் வைத்தால் வேறு இடத்தில் அதை மாற்றி வைத்து விடுகிறேன்'' என்று கூறிய மோசடி வித்தைக்காரரைப்போல, மோடி அரசின் பட்ஜெட், பல்வேறு ஒப்பனைகளை வைத்து தாக்கலாகியிருக்கிறது.

பட்ஜெட் அல்ல; பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை

இதை நிதிநிலை அறிக்கை என்பதைவிட, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்று கூறுவதே மிகவும் பொருத்தமாகும்!

முந்தைய தேர்தல் வாக்குறுதிகளில் 15 லட்ச ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் - கறுப்புப் பணத்தை மீட்டுப் போடுவோம் என்பது நடந்ததா?

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்பது நிறைவேற்றப்பட்டதா?

அதன் ரகசியத்தை நிதின் கட்கரி உடைத்தாரே, நினைவில்லையா?

விவசாயிகளின் வேதனைகளும், தற்கொலைகளும் கடந்த நான்கே முக்கால் ஆண்டு மோடி - பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் குறைந்ததா?

தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் குறி வைத்து தாக்கப்படுவதோடு, அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நிகழ்வுகள் அன்றாட கொடுமைகளாகத் தொடரும் நிலையில்,

அடுத்து வந்தால், மீனவருக்கென ஒரு தனி அமைச்சகம் அமைப்பார்களாம்; இது மீனவ சமூகத்தை ஏமாற்றுவதல்லாமல்,  வேறு என்ன? தனி அமைச்சரகம் இல்லாததால்தான் - அவர்களுக்கு எதிராக அன்றாடம் நடைபெறும் அநீதி - அக்கிரமங்களைத் தடுக்க முடியவில்லையா?

எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை. அதுவும் கடந்த நான்கரை ஆண்டுகளில் உதயமாகாத ஞானோதயம் - புது புரூடா - இப்போதுதான் தோன்ற வேண்டுமா?

இந்த வாக்கு வங்கி வித்தைகளால் எந்த மீனவ சகோதரரும் ஏமாறமாட்டார்கள்.

'இந்து' ஏட்டின் தலைப்பு!

வாக்குகளை இதன்மூலம் வாங்குவதற்கான பேர பட்ஜெட்'' என்று இந்து' ஏடு (ஆங்கிலம்) 'Shopping for Votes' என்ற தலைப்பிட்டு எழுதியுள்ளது - நன்கு நிலைமையை விளக்கியுள்ளது.

மரபுகள் மீறப்பட்டு, தங்களது அதிகார எல்லை தாண்டிய வாக்குறுதிகளைப் போலவே, நிதி ஆதாரங்களைப்பற்றிக் கவலையே இன்றி, மெகா' மெகா' திட்டங்களைக் கூறியுள்ளது.

வானவில் போன்றது இது; பார்க்கத்தான் அழகு - பயன் ஏதும் இருக்காது.!

இந்த பட்ஜெட் மூலம் புது வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படுமா என்ற கேள்வியைவிட, நம் இளைஞர்களுக்குப் பறிபோன வேலை வாய்ப்புகளாவது மீண்டும் கிடைக்க வாய்ப்பு உண்டாகுமா? என்ற கேள்விக்காவது விடை இருக்கிறதா? தேடிப் பாருங்கள், புரியும்!

வானவில் போன்றது இது; பார்க்க அழகு - பயன் ஏதும் இருக்காது!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

2.2.2019

தமிழர் தலைவர் ஆசிரியரின் பொங்கல் வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி வருமாறு:

சமூகநீதி, பெண்ணுரிமை, மதச் சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை முறியடித்து, அனைவருக்கும் அனைத்தும் தரும்  உரிமையுள்ள தமிழ்ப் புத்தாண்டாக புதிய பொங்கலோடு மலரும் இந்நாளில் அனைவருக்கும் நமது இதயங்கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துகள்!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

14.1.2019

சென்னை

Banner
Banner