எழுத்துரு அளவு Larger Font Smaller Font

90 ஆண்டு காணும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், வேலூர் மாவட்டத்தில் திராவிடர் கழகம் தழைத்தோங்க ஒல்லும் வகையெல்லாம் அயராது பாடுபட்டவர், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர், பல கல்வி நிறுவனங்களை நடத்தும் குழுவில் அங்கம் வகிப்பவர், ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் (நவம்பர் 6) சென்னையில் உள்ள பெரியார் திடல் - தலைமையிடத்துக்கு வந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அய்யா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து,  கழகத் தலைவரைச் சந்தித்து, வாழ்த்துப் பெற்று கழக நிதியைத் தந்த தாராள உள்ளத்திற்குச் சொந்தக்காரர், செய்யாறு வட்டாரத்திலும், அம்மாவட்டத்திலும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் மத்தியிலே பொது மரியாதையுடையவராக ஒளி வீசியவர், கழகத் தூணாக விளங்கி, தாடி அருணாசலம் என்று அன்பொழுக அழைக்கப்பட்டவர், மண்டலத் தலைவர், மாவட்டத் தலைவர் என்று கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர், கழகப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்; இன்று  (28.8.2017) விடியற்காலை மறைவுற்றார் என்பதை அறிந்து  வருந்துகிறோம்.

ஏழ்மையில் இருந்து தமது அயரா உழைப்பால் செல்வந்தர் ஆனவர். "நான் அதிகம் படிக்கவில்லை, என்றாலும் அய்யா பெரியார் கொடுத்த பகுத்தறிவு, தன்னம்பிக்கை, வாழ்க்கை அனுபவங்கள் எல்லாம் சேர்ந்து என்னைக் கை தூக்கிவிட்டன" என்று எப்பொழுதும் கூறக் கூடியவர்; அவர் இன்று சுயமரியாதைச் சுடரொளியாகிவிட்டார்.

அவருக்கு  மூன்று மகன்கள், நான்கு மகள்கள். அவரது மகன் அ. இளங்கோவன்தான் செய்யாறு மாவட்டக் கழகத்தின் இன்றைய தலைவர். தனக்குப் பின்னாலும் கழகப் பணி தமது குடும்பத்தின் சார்பில் தொடரப்பட வேண்டும் என்ற அவரின் கொள்கை உள்ளத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். தனது இணையர் அமிர்தம் அம்மையாருடன் தமிழ்நாட்டுக்குள் மட்டுமல்ல; டில்லியில் கழக நிகழ்ச்சி என்றாலும் தவறாது வரக் கூடிய கழகக் குடும்பம் அவருடையது.

அவரின் அரும்பெரும் இயக்கத் தொண்டினை நினைவு கூர்ந்து, அந்தப் பெரு மகனாருக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளை காலை, நான் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்துகிறேன்.

அவரது பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கி.வீரமணி
தலைவர்,      திராவிடர் கழகம்


தஞ்சை  
28.8.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner