எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அணி திரண்டு பணி முடிப்போம் வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியாரின் “மண்டைச் சுரப்பை” (சிந்தனைகளை) உலகம் இன்று தீவிரமாகப் பின்பற்றுகிறது!

இன்று 139ஆம் ஆண்டு அவர்தம் பிறந்த நாள்!

இளைஞர்கள், மாணவர்கள், மகளிர்  மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகரமான லட்சியங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டார்கள்!

இந்தியாவின் இதர மாநிலப் பரப்புகளில் மட்டுமல்ல; உலக வரைபடத்தில் உள்ள பற்பல கண்டங்களிலும், தந்தை பெரியார்,  உருவத்தால் மறையாது வாழ்ந்த காலகட்டத்தையும் தாண்டி, இப்போது அவர் தத்துவங்களாக உயர்ந்து நின்று வழிகாட்டும் - ஒளியூட்டும் நிலையில் ஒப்பற்ற கலங்கரை வெளிச்சமாகக் கூட அல்ல; பகலவனாகவே ஒளிவீசித் திகழ்கிறார்!

இந்த சுயமரியாதைச் சூரியனின் கதிர் வீச்சின் ஒளி “அய் இரண்டு திசை முகத்தும்‘’ பாயத் தொடங்கிவிட்டன!

அறியாமை, சமத்துவமின்மை, பேத வாழ்வு என்ற இருள் அகலத் தொடங்கி, அகிலத்திலும் அய்யாவை - அவர் தந்த தத்துவங்களை - தங்களது தன்மானம் காத்து, மானுட நேயத்தை வளர்த்து உலகம் ஓர் குலம்; யாவரும் கேளிர், என்ற பரந்து விரிந்துபட்ட பேதமற்ற புதுஉலகு சுயமரியாதை மலர்களாகப் பூத்துக் காய்க்கத் துவங்கிவிட்டன!

“பெரியார் ஒரு சகாப்தம்‘’ என்பதையும் தாண்டி பெரியார் ஒரு தனிமனிதரல்ல; அவர் ஒரு சமூக விஞ்ஞானம் என்பதை அகிலம் உணர்ந்து அவர்வழி நிற்க முயலுகிறது!

அறிவியல் வளர்ச்சியை எவர்தாம் புறக் கணித்து விடமுடியும்?

எவ்வளவுதான் வேதம் - இதிகாசம் என்று வாயளவில் அளந்தாலும், நடைமுறையில் பயணத்திற்கு விமானம், போருக்கு - வில்லும் வேலும் அல்ல - மாறாக புதுப்புது சக்தி வாய்ந்த போர்க் கருவிகள் - கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள் - இவைகளைத்தானே பயன்படுத்தி வெற்றிகாண மனிதகுலம் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறதே!

அதுபோலத்தான் தந்தை பெரியார் அறிவித்த அறப்போர் - ஜாதிக்கு எதிரான, மூடநம்பிக்கை - மதவெறிக்கு எதிரான, பெண்ணடிமைக்கு எதிரான  - போராக இன்றும் வெற்றிகரமாக முன் னெடுத்துச் செல்லப்படுகிறது!

‘ஜாதிகள் இல்லா நாடு’ - “சாமியார் இல்லா நாடு” என்பது நோய்க்கிருமிகள் அண்டா வீடு போன்றது என்பதை ஏற்காதோர் எவருமிலர்!

மானுடம் தழைக்க மாமருந்தாய் வந்தார் பெரியார்; தந்தார் தன்னை மெழுகுவர்த்தியாய்!

அவரது வாழ்வு - அவருக்காக அல்ல! நமக் காக,

அவரது சிந்தனை - நம் சந்ததிக்காக,

அவரது போராட்டங்கள் - நம் உரிமைகளைக் காப்பதற்காக,

அவரது வெற்றி - அடிமைகளின் விடுதலைக் கான வாகை!

எனவே

அணிதிரண்டு அய்யாவின் பணி முடிப்போம்!

வாரீர்! வாரீர்! வாரீர்!


கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்


சென்னை17.9.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner