விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் கடந்த 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பேசிய பேச்சை திசை திருப்பும் வகையில் கருத்துத் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும், தலைக்கு விலை என்றெல்லாம் காவிகள் கூச்சலிடுகின்றனர். திருமாவளவன் அவர்கள் ‘நான் என்ன பேசினேன்?’ என்பதற்கான விளக்கமும் கொடுத்துள்ளார்.
பவுத்தக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உண்டு. திருப்பதி கோயிலிலிருந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில் என்று நீண்ட பட்டியலே உண்டு. மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘‘பவுத்தமும் தமிழும்'' எனும் ஆய்வு நூலை ஒரு முறை படித்துப் பார்க்கட்டும்.
இதற்கு முன் சில இடங்களில் அவர்மீது வன்முறை ஏவப்பட்டுள்ளது. அதன்மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் அடுத்த கட்டத்திற்கு காவிகள் தாவியுள்ளனர்.
மிரட்டல், உருட்டல் கண்டு அஞ்சக் கூடியவர் அல்லர் மானமிகு திருமாவளவன் அவர்கள். அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது, நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. அவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கை தேவை!
‘‘புலி வாலை மிதிக்க வேண்டாம்'' என்ற சொலவடை உண்டு; அதற்குப் பதிலாக ‘‘சிறுத்தைகளின் வாலை மிதிக்க ஆசைப்படாதீர்’’ என்று எச்சரிக்கிறோம்!
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
9.12.2017