எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடுமலை சங்கர் கொலை வழக்கு: மரண தண்டனை தீர்ப்பு

ஜாதி வெறிக்குத் தரப்பட்ட தண்டனையை வரவேற்றுத் தமிழர் தலைவர் அறிக்கை

ஜாதி ஆணவக் கொலைக்குக் காரணமான பெண் ணின் தந்தை உள்பட, கூலிப்படையைச் சேர்ந்த

6 பேருக்கு சங்கர் (கவுசல்யா துணைவர்) கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் அவர்கள் தந்த நல்ல தீர்ப்பை நாடே வர வேற்கிறது; அதேநேரத்தில், மூவர் விடுதலை ஏன்? என்பதையும்பற்றிய விவாதமும் நடைபெறுகிறது!

ஜாதி வெறிக்கு இரட்டைத் தூக்கு!

இத்தீர்ப்பு ஜாதி வெறிக்கு எதிராக ஜாதி வெறியை இரட்டைத் தூக்கில் போட்ட சரியான தீர்ப்பு - வெறும் நபர்களுக்குத் தரப்பட்ட தண்டனையாக நாம் கருதவில்லை.

வயது வந்த பெண்ணுக்கு, தனது வாழ்விணைய ரைத் தேர்வு செய்யும் உரிமை - சலுகை அல்ல - பெற்றோர் கருணை அல்ல; சட்டப்படிக் கிடைத்துள்ள உரிமை! இதனை ஜாதிவெறியர்களும், மதவெறியர் களும் சல்லடம் கட்டிக் கொண்டு தடுக்க முயலுவது சட்ட விரோதம் மட்டுமல்ல; மனித உரிமை பறிப்புக் கொடுமையும் ஆகும்!

திராவிடர் கழகத்தின் சார்பில்

நடைபெற்ற கருத்தரங்கில்...

சென்னை பெரியார் திடலில் தோழர் கவுசல்யா சங்கர், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முழங்கிய முழக்கம் அவரது நெஞ்சை உருக்கும் உணர்வு பொங்கிய பேச்சு, அடங்கிக் கிடந்த ஆமைகளும், ஊமைகளும், சிங்கங்களாக மாறி கர்ஜிக்கத் தொடங்கி விட்டனர் என்பதையே உலகுக்குப் பறைசாற்றியது.

‘‘முந்தைய கவுல்சயா இறந்துவிட்டாள் - இன்றைய கவுசல்யா பெரியாரின் மகள் - புரட்சிக்காரி - ஜாதி ஒழிப்புப் புரட்சிக்காரி'' என்னும் அவரது வைரம் பாய்ந்த நெஞ்சுரம், சட்டப் போராட்டம் தொடங்கி மக்கள் போராட்டம்வரை அலுப்பு,சலிப்பின்றி போராடுவேன் என்றார்.

அவரது பெண்ணுரிமை - பிறவி அடிமை - ஜாதி ஒழிப்புப் போராட்ட லட்சியப் பயணத்தில் இத்தீர்ப்பு ஒரு துவக்க மைல்கல்!

ஜாதி வெறிக்கு இடமில்லை; ஜாதி, மதவெறியர் களைத் திருத்துவோம்!!

ஜாதிக்குப்

புதைகுழி வெட்டுவோம்!

பெற்றோர்களே, நீங்கள் ஊட்டி வளர்த்து, கண்ணை இமை காப்பதைப்போலக் காத்த பெற்ற பிள்ளைகளையே கூலிப்படை கொண்டு கொல்லத் தூண்டும் ஜாதிவெறியை விட்டொழித்து மனிதம் மலரும் மனிதர்களாக மாறுங்கள்!

காதல் நாடகம் என்று பேசி, ஆணவக் கொலைக்கு வித்திடுவோரும் இந்தத் தீர்ப்புக்குப்பின் திருந்தட்டும்!

பாசத்தை, ரத்த உறவைக் கொல்லும் ஜாதி மத வெறியை புதைக் குழிக்கு அனுப்புவோம்! புதியதோர் உலகு செய்வோம்!

கி.வீரமணி

தலைவர் ,        திராவிடர் கழகம்.

சென்னை
13.12.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner