எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சுயமரியாதை இயக்கத் தீரர் மாணவப் பருவந்தொட்டுக் கழகக் கோட்பாடு - கடப்பாடு மிக்க தொண்டறச் செம்மல்! தொண்ணூற்று நான்கு வயதிலும் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பொன்மலை மானமிகு அ. கணபதி அவர்கள் நேற்று மாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

தென்னக இரயில்வேயில் பணியாற்றும்போது திராவிடர் கழக தொழிற்சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ. அமைப்பில் பங்கு கொண்டு, மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் சி. ஆளவந்தார்; பி.வி. இராமச்சந்திரன் போன்றோரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றியவர்.

அய்யா, அம்மா காலந்தொட்டு இன்று வரை நம்மோடு நல்லன்பு காட்டி, நல்லாதரவு காட்டி, திருச்சியில் இயங்கும் கைவல்யம் முதியோர் இல்லத்தின் காப்பாளராகவும் இருந்து மறைந்த அந்தச் சுயமரியாதை சுடரொளிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

அவ்வப்போது இயக்கத்திற்கு தவறாது நன்கொடைகள் அளித்தும், வைப்பு நிதியாக அவற்றை இயக்கத்திற்குப் பயன்பட வேண்டுமென்று திட்டமிட்ட நன்கொடை அருளாளர் அவர்கள் ஆவார்கள். அவருக்கு இரு மகள்கள் உண்டு. தோழர் திலகவதி பெரியார் மணியம்மை மேனிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

தான்மறைந்தாலும், தன் கண்களையும்,  உடலையும் மருத்துவ மனைக்குக் கொடையாகக் கொடுக்கச் செய்த அந்த உள்ளமானது தந்தை பெரியார் கொள்கையால்  வரித்துக் கொள்ளப்பட்டதாகும்.

அவர் பிரிவால் வருந்தும் அவருடைய  குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத்தின் சார்பில்  பொதுச் செயலாளர்  இரா. ஜெயக்குமார் கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்துவார்.


சென்னை                                                          தலைவர்,
6.2.2018                                                      திராவிடர் கழகம்  


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner