எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் ஒழிப்பு: மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை!

‘நீட்' எதிர்ப்புக் கனல் குறையாமல் செயல்படுவோம்!

தமிழர் தலைவர் ஆசிரியர்  அறிக்கை

 

சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை (அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு) சார்பாக நீட்டை எதிர்த்துத் துண்டறிக்கைகள் விநியோகம், மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் ஆகியவை சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றமைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அடுத்த கட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம் - நீட் எதிர்ப்புக் கனல் ஆறாமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

அறிக்கை  வருமாறு:

நீட் தேர்வுக்காக திராவிடர் கழக அழைப்பின் பேரில், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் பிரிவுகளான - தி.மு.க. மாணவரணி, மாணவர் காங்கிரசு, ம.தி.மு.க. மாணவரணி, அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம் (சி.பி.அய்.), முஸ்லிம் மாணவர் பேரவை (முஸ்லிம் லீக்), முற்போக்கு மாணவர் கழகம் (வி.சி.க.), சமூகநீதி மாணவர் இயக்கம் (ம.ம.க.), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மாணவர் இந்தியா (ம.ஜ.க.), திராவிட இயக்கத் தமிழர் பேரவை, இந்திய சமூகநீதி இயக்கம், அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் 10.2.2018 அன்று சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இரு திட்டங்களும் வெற்றி - பாராட்டு!

அக்கூட்டத்தில்,

1. நீட் தேர்வினைக் கண்டித்து துண்டறிக்கை விநி யோகம்

2. 22.2.2018 அன்று, மாணவர்களே முன்னின்று நாடு தழுவிய ‘நீட்' தேர்வுக்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்ற முடிவின்படி, நேற்று (22.2.2018) திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாணவர் காங்கிரசு பொறுப்பாளர் நவீன், ம.தி.மு.க. மாணவரணி மாநில செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், அனைத் திந்திய மாணவர் பெருமன்றம் மாநில செயலாளர் சீ.தினேஷ், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவர் அன்சாரி, முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் செஞ்சுடர், சமூகநீதி மாணவர் இயக்க மாநில செயலாளர் நூருதீன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் முஸ்தபா, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், தமிழ்நாடு மாணவர் முன்னணி தலைவர் இளையராஜா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி பிரதிநிதி சிறீநாத்,  அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் அமுதரசன் மற்றும் பல்வேறு கட்சிகளின்  மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ஒரு தொடர் அறப்போரின் அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற்றிருப்பது, பாராட்டத்தகுந்ததாகும்.

அத்துணைக் கட்சிப் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்பு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. இனி அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டும்; முதல்வர், துணை முதல்வர் சந்திப்புகளையும், நீதிமன்றத்தில் அடுத்தகட்ட சட்டப் போராட்டங்களையும்பற்றி சிந்தித்து செயலாற்றிட முனையவேண்டும்.

27 ஆம் தேதி மாலை சென்னைப் பெரியார் திடலில் சட்ட வல்லுநர்கள் உரை

27.2.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் சட்ட வல்லுநர்களாகவும், சமூகநீதிக் களத்தில் தக்க மதிஉரைஞர்களாகவும் உள்ள சென்னை உயர்நீதிமன்ற (ஓய்வு பெற்ற) நீதிபதிகளான டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன், ஜஸ்டீஸ் அரிபரந்தாமன் ஆகியோர் எனது தலைமையில் நீட் தேர்வு விலக்கு - அடுத்த கட்டம்பற்றி விளக்க இருக்கும் சிறப்புப் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

நீட் நெருப்பின் கனல் குறையக் கூடாது; கனன்று கொண்டே இருக்கவேண்டும்.

இதற்கு முன்பும்

வெற்றி பெற்றுள்ளோம்!

பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பு ஆணை, நுழைவுத் தேர்வு ஆகியன எப்படி தொடர் அறப்போராட்டங்களின்மூலம் விரட்டப்பட்டனவோ, அதுபோலவே, ‘நீட்' தமிழ்நாட்டு ‘அனிதாக்களை' மேலும் பலி கொள்ளாமல் தடுக்க இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள் அனை வரும் ஜல்லிக்கட்டு எழுச்சியை இந்த மல்லுக்கட்டிலும் ஒருமுகப்பட்ட எழுச்சியாக உருவாக்குவோமாக!

வாழ்த்துகள்!!

 

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.

 

 

சென்னை

23.2.2018