எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மாணவப் பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் பங்கு கொண்டு, பிறகு திமுகவில் இணைந்து, இறுதி மூச்சு அடங்கும் வரை சீரிய சுயமரியாதை வீரராக வாழ்ந்த "சா.க." என்று அனைவராலும் குறிப்பிடப்படும் மானமிகு சா. கணேசன் (வயது 88) அவர்கள் சிறிது காலம் உடல் நலமின்றி இருந்த நிலையில் நேற்றிரவு (13.4.2018) 10.45 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

சென்னை மாநகர மேயராக இருந்து அரும்பணியாற்றினார். சென்னை - தியாகராயர் நகர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.

திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளராகவும் பணி யாற்றியவர். திமுக  நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கு கொண்டவர்.

எளிமை, அடக்கம், பொது நலம், அப்பழுக்கற்ற பொதுத் தொண்டு இவற்றின் இலக்கணம் இவர்.

சென்னை பெரியார் திடலில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தவறாமல் வருகை தந்து முன் வரிசையில் அமர்ந்திருப்பார். பெரியார் திடலுக்கு வரும் பொழுதெல்லாம் புத்துணர்வும், மகிழ்வும் பெறுவதாகக் கூறக் கூடியவர்.

உடல் நலமற்று வீட்டில் இருந்த அவரை 24.3.2018 அன்று நேரில் சென்று உடல் நலம் விசாரித்து வந்தோம்; இவ்வளவு சீக்கிரம்  இந்த முடிவு அவருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்க வில்லை.
ஆனாலும் நிறை வாழ்வு வாழ்ந்தவர்; அவர் மறைவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது மகன்கள் அண்ணாதுரை, அழகிரி ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், திமுகவுக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் கழகத் தோழர்கள் இறுதி  நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள்.

தலைவர்,
திராவிடர் கழகம்