எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் கண்டன அறிக்கை

அண்மைக் காலத்தில் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலை, டாக்டர் அம்பேத்கர் சிலைகளை சேதப் படுத்தப்படுவது கண்டனத்திற்கு உரியதாகும்! இதனை தமிழக காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்த முன் வருதல் அவசரம், அவசியம் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது  - சேலம் ஓமலூர் அருகில் உள்ள வெள்ளாளப்பட்டி என்ற ஊரில் நடைபெற்றது மிகவும் வேதனைக்கும், கண்டனத் திற்கும் உரியதாகும்!

அண்மைக் காலத்தில் தமிழ் நாட்டில் தந்தை பெரியார் சிலை, டாக்டர் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு - திட்டமிட்டு இப்படி நடை பெறுவதற்கு மூலக் காரணம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் குறிப்பாக எச். இராஜா போன்ற காவிகளின் பொறுப்பற்ற தூண்டல் பேச்சுக் களேயாகும்!

தமிழ்நாடு அரசு தேடப்படும் குற்றவாளியான எச். இராஜா வகையறாக்களை கைது செய்து, குண்டர் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுத்தால் ஒழிய இந்த சில்லுண்டித் தன சீண்டல் வேலைகள் நிற்காது!

ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டி விட்டு, அதில் குளிர் காய நினைக்கும் குறுக்கு புத்தியாளர்கள் செயலை தமிழகக் காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்த முன் வருதல் அவசரம் - அவசியம்.

திராவிடர் கழகமோ, விடுதலை சிறுத்தைகளோ, பொறுமை காட்டுவதை பலவீனமாகக் கருதக் கூடாது! உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படா விட்டால், ஆங்காங்கு கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு அதிகம்; அவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்; எனவே தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்!

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

29.9.2018