எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராக்போர்ட், ஆக.28 அமெரிக்காவை சக்தி வாய்ந்த "ஹார்வி' புயல் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை தாக்கிய "ஹார்வி' புயல் பயங்கர சேதத்தை விளைவித்தது. கனமழை பெய்ததையடுத்து மாகாணத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

புயல் மழைக்கு ராக்போர்டில் ஒருவரும், மற்றொருவர் ஹூஸ்டனிலும் பலியானதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், 14 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்ததையடுத்து ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர். நெடுஞ்சாலைகளில் பெரும் வாகனங்களையும் "ஹார்வி' புயல் புரட்டிப் போட்டது.

கட்டட இடிபாடுகள், வேரூடன் சாய்ந்த மரங்கள், பெயர்ந்து விழுந்த மின் கம்பங்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளில் அவசரகால மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக சேதங்களை விளைவித்த புயலாக "ஹார்வி' கருதப்படுகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

புயல் காரணமாக, வரும் நாள்களில் 60 செ.மீ முதல் 90 செ.மீ. வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் மழையளவு 100 செ.மீ.க்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதன் தீவிரத்தை உணர்ந்து, சாலை பயணங்களை தவிர்க்கும்படி ஹூஸ்டன் நகர மேயர் சில்வஸ்டர் டர்னர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மய்யம், "ஹார்வி' புயல் குறித்து வியாழக்கிழமையே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தப் புயல் காரணமாக ஏற்கெனவே தொடர் கனமழை ஏற்பட்டுள்ளது. இதனால், பேரழிவை உண்டாக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று அந்த மய்யம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.