எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இஸ்லாமாபாத், மார்ச் 21 இந்தியா - பாகிஸ்தான் அங்கம் வகிக்கும் சிந்து நதி நீர் ஆணையத்தின் கூட்டம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தில் திங்கள்கிழமை தொடங்கியது.

ஏறத்தாழ இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தொடங்கிய இந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தையில், சிந்து நதி நீர் ஆணையர் பி. கே. சக்சேனா தலைமையிலான இந்தியக் குழுவினரும், மீர்ஸா ஆசிஃப் சயீது தலைமையிலான பாகிஸ்தான் குழுவினரும் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிகளின் குறுக்கே இந்தியா கட்டிவரும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் குறித்து பாகிஸ்தான் தனது கவலையை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செனாப், மியார் நல்லா, கால்னாய் நல்லா ஆகிய நதிகளின் குறுக்கே அந்த மின் உற்பத்தி நிலையங்களை இந்தியா கட்டி வருவது, 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பகால் துல் நீர் மின் நிலையம், 1000 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்டதாக ரூ.7,464 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. மற்ற இரு நீர் மின் நிலையங்களும் முறையே ரூ.396 கோடி, ரூ.1,125 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மின் நிலையங்கள், சிந்து நதி நீர் ஒப்பந்தத்துக்கு எதிரானவை அல்ல என்று இந்தியா கூறி வருகிறது.

திங்கள்கிழமை தொடங்கிய சிந்து நதி நீர் ஆணையக் கூட்டம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட்டதற்குப் பிறகு நடைபெறும் 113-ஆவது கூட்டமாகும். கடைசியாக இந்தக் கூட்டம் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், உரி பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியா வுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்ற நிலை அதிகரித்ததன் காரணமாக 2016-ஆம் ஆண்டுக்கான கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தான் நம்பிக்கை: இதற்கிடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் மிகச் சிறந்த சர்வதேச ஒப்பந்தம் எனவும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நீர் பகிர்வுப் பிரச்சினைகளுக்கு அந்த ஒப்பந்தம் மூலம் சிறப்பான தீர்வு கிடைக்கும் என்றும் பாகிஸ்தான் நதி நீர்-எரிசக்தித் துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடையே திங்கள்கிழமை பேசிய அவர், செனாப் ஆற்றின் குறுக்கே இந்தியா கட்டி வரும் நீர் மின் நிலையம் குறித்து,

இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படும் என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner