எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஜெனீவா, ஏப்.28 வட கொரியாவில் உடல் ஊனமுற்றோர் உரிமைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிக்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

அய்.நா. மனித உரிமைகள் ஆணைய அதிகாரியொருவர் வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக அந்த அமைப்பு வியாழக்கிழமை (ஏப்.27)  வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

வட கொரியாவில் உள்ள உடல் ஊனமுற்றோர் நலன் மற்றும் உரிமைகள் குறித்த நிலவரத்தை அறிய அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் சிறப்பு அதிகாரி கேத்தலீனா அகியார் அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

உடல் ஊனமுற்றோர் நிலை, அதிலும் குறிப்பாக, உடல் ஊனமுற்ற சிறுவர்கள் குறித்தும், அவர்களின் நலனுக்காக அந்நாட்டு அரசு இயற்றியுள்ள சட்டங்கள், எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நேரடியாக அறிய இந்தப் பயணம் உதவும். அவர் 6 நாள் பயணமாக அடுத்த புதன்கிழமை (மே. 3இல்) வட கொரியா செல்கிறார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவில் உள்ள சிறைகள் மிகவும் கொடூரமானவை என்றும் அவற்றில் அடைக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் கைதிகளின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் இதற்கு முன் பல முறை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், வட கொரியாவில் ஒரு வாரம் பயணம் மேற்கொள்ள அந்த அமைப்பின் பிரதிநிதிக்கு அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உடல் ஊனமுற்றோர் உரிமைகள் குறித்த அய்.நா. சார்பிலான சர்வதேச உடன்படிக்கையில் வடகொரியா கடந்த ஆண்டு கையெழுத்திட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner