எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்சிலோனா, ஆக.22 ஸ்பெயினில் கடந்த வாரம் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாக முசுலிம் மதகுருவைத் தேடி வருவதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே, பார்சிலோனாவில் கூட் டத்தில் வாகனத்தை மோதி நிகழ்த்திய தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பார்சிலோனா நகரம் அமைந்துள்ள கேட்டலோனியா மாகாண உள்துறை அமைச்சர் ஜோக்கிம் ஃபோர்ன் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

பார்சிலோனா பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்திய யூனிஸ் அபு யாகூப், கேம்ப்ரில்ஸ் நகரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 நபர்கள், இதுவரை கைதான 4 நபர்கள் ஆகியோர் ரிபோல் என்ற நகரில் உள்ள இமாம் ஒருவரால் தூண்டப்பட்டு இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்று தெரிகிறது. இவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் இந்த இரு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படு கிறது. இவர்கள் அனைவரும் ரிபோல் பகுதியைச் சேர்ந்தவர்கள். பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாக இமாம் அப்தெல்பக்கி எஸ்ஸாட்டி என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவர் தலை மறைவாகிவிட்டார். அவர் தலைமறைவான பிறகுதான் பார்சிலோனா பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. அவரைத் தேடி வருகிறோம். அந்த நபர்களுடன் தொடர்புடைய பல இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

ரிபோல் பகுதியைச் சேர்ந்த இமாம் அப்தெல்பக்கி எஸ்ஸாட்டி ஏற்கெனவே சிறை சென்றவர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2004-ஆம் ஆண்டு மாட்ரிட் நகரில் ரயில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதில் 191 பேர் கொல்லப்பட்டனர். அந்த பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்திய ரச்சீத் அக்லீப் என்னும் பயங்கரவாதி 18 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அதே சிறையில் அடைக்கப்பட்ட இமாம் அப்தெல்பக்கி எஸ்ஸாட்டி, ரச்சீத் அக்லீப் இடையே தொடர்பு ஏற்பட்டது என்று எல்முண்டோ நாளிதழ் தெரிவித்தது.
எனினும் ஸ்பெயின் காவல் துறையினர் அந்த இமாம் பற்றிய கூடுதல் விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் பெல்ஜியம் நாட்டில் இமாம் அப்தெல்பக்கி எஸ்ஸாட்டி சிறைவாசம் அனுபவித்தார் என்று அந்த நாட்டு அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை வீடு ஒன்றில் நிகழ்ந்த வெடி விபத்தில் பலியான இரு நபர்களில் ஒருவர் இமாம் அப்தெல்பக்கி எஸ்ஸாட்டியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த் துவதற்காக வெடிகுண்டுகள் தயாரிக் கும்போது தவறுதலாக குண்டு வெடித் தது என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் அந்த குண்டு வெடிப்பில் பலி யானவர்களின் அடையாளம் இன்னும் வெளியிடாத நிலையில், இறந்தவர்களில் ஒருவர் இமாம் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் 120-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. டிரையாசிடோன் டிரிபெராக்ஸைட் என்னும் ரசாயனப் பொருள் அங்கு இருந்தது. இந்த ரசாயனத்தைத்தான் இசுலாமிய தேச பயங்கரவாதிகள் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்திவருகின்றனர்.

பார்சிலோனா நகரில் மக்கள் நெரிசலில் வாகனத்தை மோதி கடந்த வியாழக்கிழமை நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 120- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனத்தை ஓட்டி வந்து தாக்குதல் நிகழ்த்திய யூனிஸ் அபு யாகூப் இன்னும் தலைமறைவாக உள்ளார். மொரோக்கோ நாட்டிலிருந்து அகதியாக வந்தவர் அவர். பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்திய பிறகு அவர் ஸ்பெயின் எல்லையைக் கடந்து பிரான்சுக்கு தப்பியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. பிரான்சு காவல்துறையினரும் அவருக்கான தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner