எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓட்டாவா, மார்ச் 14- எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து, நார்வே, வியட்நாம், பிரிட்டன், மலேசியா, அய்க்கிய அரபு அமீரகம் உள்பட மேலும் பல நாடுகளும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடைவிதித்தன.

இந்த நிலையில், கனடாவும் போயிங் விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. இதுகுறித்து கனடாவின் போக்கு வரத்துத்துறை அமைச்சர் மார்க் கர்னோவ் கூறும்போது, பாதுகாப்பு கருதி வணிக ரீதியிலான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ மற்றும் ‘போயிங் 737 மேக்ஸ் 9’ விமானங்கள் கனடாவில் இருந்து புறப்படவோ, கனடாவுக்கு வரவோ அல்லது கனடா வான் எல்லையில் பறக்கவோ தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க மத்திய விமான போக்கு வரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலாவி - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு

பிளான்டையர், மார்ச் 14- தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு முக்கிய பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர் என்றும், பலரை காணவில்லை என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், மலாவியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. சுமார் அய்நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner