எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சீரிய சுயமரியாதை வீரருமான மானமிகு பேராசிரியர் டாக்டர் பு.இராசதுரை அவர்கள் தமது 86 ஆம் வயதில் இன்று (5.10.2017) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தோம்.

பேராசிரியர் டாக்டர் பு.இராசதுரை அவர்களின் தந்தையார் கல்லூரணி புன்னைமுத்து அவர்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலம்தொட்டே அணுக்கத் தொண்டர்; ‘வழிகாட்டி' என்ற ஏட்டினையும் நடத்தி, சமூகநீதிக்குப் பாடுபட்ட சிந்தனையாளர், எழுத்தாளர்.

பேராசிரியர் டாக்டர் பு.இராசதுரை அவர்கள் திருச் செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மேனாள் தமிழ்த் துறைத் தலைவராக, அருப்புக் கோட்டையில் எஸ்.பி.கே. கல்லூரியில் பேராசிரியராக, பிறகு அக்கல்லூரியின் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்ற பகுத்தறிவாளர்.

பகுத்தறிவாளர் கழகத்தில் பல பொறுப்புகளை வகித்தவர், பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியின் முதல்வராகவும் பல காலம் தொண்டாற்றியவர்.

நீதிக்கட்சி ஆட்சி - திராவிடர் இயக்க ஆய்வுகளுக்காக, சென்னை ஆவணக் காப்பகத்தில் கடுமையாக உழைத்து பல அரிய தகவல்களைத் திரட்டிய ‘உழைப்புத் தேனீ' ஆவார்.

சிறிது காலம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தொல்லைப்பட்டு வந்தார். அவர் எழுதிய நூல்களை அச்சிட்டுப் பரப்பியதில் அவருக்குப் பெருமையும், மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டு.

சென்னை பெரியார் திடலில் குடும்பத்துடன் தங்கியிருந்தவர். திராவிட மாணவர் கழக நிறுவனரான மறைந்த தோழர் எஸ்.தவமணிராசன் அவர்களின் சம்பந்தியும் ஆவார்!

அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினர் (மகன், மகள், பேத்திகள்) ஆகியோருக்கும், உறவுகளுக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்!

அவருக்கு நமது வீர வணக்கம்!

(கி.வீரமணி)
சென்னை                                                                      தலைவர்
5.10.2017                                                                   திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner