எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் டாக்டர் மா.நன்னன் (வயது 94) அவர்கள் இன்று (7.11.2017) காலை 9.15 மணியளவில் மறைந்தார் என்பதை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர் பருவந்தொட்டு திராவிடர் கழகத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டு கடைசி மூச்சு அடங்கும்வரை தந்தை பெரியார் கொள்கைகளை வாழ்வியல் தடமாகக் கொண்டு வாழ்ந்து காட்டிய சீரியர்!

மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் இருந்து முத்திரை பதித்தவர்.

அருப்புக்கோட்டை கைலாசம் அறக்கட்டளை சொற்பொழிவாற்றிப் பெரியார் பேருரையாளர் என்ற விருது திராவிடர் கழகத்தால் அளிக்கப் பட்டவர். சிறிது காலம் தந்தை பெரியாரோடு ஈரோட்டிலும், சுற்றுப்பயணத்திலும் பங்கேற்றவர். மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும் இருந்தவர்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக் கப்பட்ட பெரியார் வரலாற்று நூல் தொகுக்கும் பணியின் தலைவராகவும் பணியாற்றியவர்.

தி.மு.க. ஆட்சியில் சமூக சீர்திருத்தக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களைத் தனித்தனி தலைப்புகளில் ஏராளமான நூல்களாக வெளியிட்டுச் சாதனை படைத்தவர்.

ஆண்டுதோறும் மகன் டாக்டர் அண்ணல் நினைவு நாளில் 5 சுயமரியாதைத் திருமண இணையர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குவார் - நூல்களை வெளியிடுவார்.

சில வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக் கப்பட்டு இருந்த நிலையில், அவர் அழைப்பின் பேரில்,  அவரை நேரில் சென்று சந்தித்து நீண்ட நேரம் உரையாடினோம்.

‘‘பெரியார் தொண்டராக நிறைவாழ்வு வாழ்ந்தி ருக்கிறேன். பெரியார் பெருநெறிப்பற்றி ஒழுகுபவர் வாழ்வின் முழு வெற்றியை ஈட்டுவர்; நான் ஒரு முழு நாத்திகன் - மனநிறைவோடு என் வாழ்வை நிறைவு செய்துகொள்கிறேன் - இது என் மரண வாக்குமூலம்'' என்று கம்பீரமாகவே சொன்னார். (அவரின் மரண வாக்குமூலம் இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை' மலரில் வெளி யிடப்பட்டுள்ளது).

புலவர் மா.நன்னன் அவர்களின் மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டுல்ல - உலகம் முழுவதும் வாழும் தமிழ், தமிழினம், பகுத்தறிவு உணர்வாளர் களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

அவர்தம் வாழ்விணையர் பார்வதி, மகள்கள் வேண்மா, அவ்வை மற்றும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து அவர்தம் அளப்பரிய அருந்தொண்டுக்குக் கழகத் தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


சென்னை                                                                                    தலைவர்
7.11.2017                                                                              திராவிடர் கழகம்.

குறிப்பு: இறுதி ஊர்வலம் சென்னை சைதாப்பேட்டை அரங்கராசபுரத்தில் உள்ள அவரின் இல்லத்திலி ருந்து நாளை (8.11.2017) காலை 9.30 மணிக்குப் புறப் பட்டு, கண்ணம்மாள் பேட்டையில் எரியூட்டப்படும்.
தொடர்புக்கு: 044-22350193, 9884550166, 9962401195

Comments  

 
#1 ethiraj 2017-11-07 23:51
பகுத்தறிவு கொள்கையினை இறுதிவரை மூச்சாகக் கொண்டு, கூர்ந்த அறிவுடன் சீரிய தமிழ்ப் பணியாற்றிய புலவர் மா.நன்னன் அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஒரு பெரிய இழப்பு. இத்தகைய கொள்கைப்பற்றாளர ்களை இந்நாளில் காண்பது அரிது. இளைய தமிழ்ச் சமுதாயமே இத்தகையோரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங ்கள், அவர்தம் நூல்களைப் படியுங்கள். தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க வழி செய்யுங்கள். அன்னாரின் புகழ் ஒங்க வாழ்த்துக்கள்,
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner