எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்டர் ணி.ஜி.செல்வம் அவர்கள், பிரபல கண் டாக்டர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து முத்திரை பதித்தவர்; சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் கண்காணிப்பாளராகப் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்தவர். அவர் தமது 93ஆவது வயதில் சென்னையில் நேற்று (28.11.2017) காலமானார் என்பது மிகவும் சோகமான துயரச் செய்தி ஆகும்.

'திராவிடர் இயக்கத்தின் தளபதி' என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்ட மகத்தான முன்னோடிகளில் ஒருவராவார் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்.

தந்தை பெரியார் அவர்களிடத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் கொண்டிருந்த நட்பு, பற்று, பாசம், மரியாதை, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை.

அவரது மூன்று மகன்களில் திரு. டாக்டர் ணி.ஜி.செல்வம் அவர்கள் இரண்டாமவர் - நடுவர். மூத்தவர் டில்லியில் தலைமை பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.ஜார்ஜ் செல்வம் அவர்கள். மூன்றாவது மகன் ஆல்பர்ட் அருள்செல்வம் வழக்குரைஞர் தந்தையைப் போல. (இவரது மகன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக சிறப்பாகப் பணிபுரியும் ஜஸ்டிஸ் ஏ.ஏ.செல்வம்) சர்.ஏ.டி.ப. அவர்களுக்கு ஒரு சகோதரியரும் உண்டு.

டாக்டர் ணி.ஜி.செல்வம் அவர்கள், தந்தை பெரியார் அவர்களிடத்திலும், கலைஞர் அவர்களிடத்திலும், நம்மிடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டு பற்பல சமயங்களில் சந்தித்து உரையாடத் தவறாதவர். மனித நேயர். ஏழை, எளிய நோயாளிகளிடம் அன்பும், கருணையும் காட்டும் மருத்துவர்.

அவரது மறைவால் வாடும் அவரது மகன், மருமகள், பேரக் குழந்தைகள், குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் நம் ஆறுதலும், இரங்கலும்!

அவருக்கு நமது வீரவணக்கம்.

சென்னை                                                                                      கி.வீரமணி
29.11.2017                                                                    தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner