எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகமான, பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும், திராவிடன் நல நிதியின் தலைவரும், திராவிடன், பெரியார் புத்தக நிலையத்தின் மேலாண்மையாளருமான மானமிகு டி.கே. நடராசன் அவர்களது வாழ்விணையர் மானமிகு திருமதி.

குஞ்சிதம் நடராசன் அவர்கள் (வயது 75) உடல் நலக் குறைவினால் இன்று காலை 6.30  மணி அளவில் மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துன்பமும், துயரமும் அடைகிறோம்.

மறைந்த தோழர் குஞ்சிதம் அவர்கள் பட்டுக்கோட்டை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் 'மாமுண்டி' என்று கழகத் தோழர்களால் அழைக்கப்பட்ட மானமிகு ராமாமிர்த்தம் அவர்களின் மூத்த மகள் ஆவார்.

பெரியார் அறக்கட்டளையான பெரியார் சுயமரியாதைப்  பிரச்சார நிறுவன நிர்வாகக் குழு உறுப்பினராக இறுதிவரை பொறுப்பில் இருந்தவர். இவருக்கு இரண்டு மகன்கள், மணவாளன், கண்ணுதுரை. அவர்களது வாழ்விணையர்கள் - பேரப்பிள்ளைகள் உண்டு.

தஞ்சையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவின் போது (1979) - இவரது கழுத்தில் இருந்த தாலியை மாநாட்டுப் பொது மேடையிலேயே தனது துணைவர் முன்னிலையில் அகற்றி திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கையில் கொடுக்க முயன்றார்; அவர் அதை வாங்க சங்கடப்பட்டு அதை எனது கையில் கொடுக்கச் செய்தார். அந்தத் தாலியை தந்தை பெரியார்   நூற்றாண்டு பாலிடெக்னிக் துவக்க நிதியாகவே வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டவர்.

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு  தாலிய கற்றும் அமைதிப் புரட்சியை முதலில் நடத்தியவர் அவர். அமைதியும், கொள்கை உணர்வும், சகிப்புத் தன்மையும் நிறைந்த சிறந்த தாயாக, துணைவியாக, குடும்பங்களை வாழ வைத்தவராகத் திகழ்ந்த அமைதியின் உருவம் அவர்.

அவரது மறைவு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; நமது இயக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும்கூட மிகப் பெரிய கொள்கை இழப்பு ஆகும்! எங்கள் குடும்பத்திற்கும் பெரும் இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது அன்பு வாழ்விணையர் தோழர் டி.கே. நடராசன், பிள்ளைகள், மருமகள்கள், பேரப் பிள்ளைகள்,  உற்றார் உறவினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்!

அவரது உடல் இன்று (6.9.2018) பிற்பகல் 2 மணியளவில் பெரியார் திடலில் இரங்கல் கூட்ட நிகழ்வுக்குப்பின், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக அளிக்கப்படவிருக்கிறது!

மறைந்தும் மறையாத மாமனிதம் அல்லவோ இது!

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

6.9.2018


 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner