எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

19.2.2017இல் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்ற, பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை எரிக்கும் மாபெரும் போராட்டம், மகளிரே பங்கேற்று நடத்தும் மகத்தான போராட்டம் குறித்து திராவிடர் மகளிர் பாசறை, திராவிடர் மகளிரணி இணைந்து நடத்திய போராட்ட ஆயத்த விளக்கக் கலந்துரையாடல் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

புறநானூற்றுப் புரட்சித் தாய் புறப்பட்டு விட்டாளோ! வீட்டுக்கொரு வீரமகன் வரிசையிலே அனுப்பப்பட்ட, அந்தத் தாயின் இளவயது மகன் போர்க்களத்திலிருந்து  மீளவில்லை என்ற செய்தியறிந்து, எங்கே என் மகன், என்று வினவ, புறமுதுகிட்டு மாண்டான் என கேலி பேச, துடிதுடித்து ஆவேசங் கொண்டாள் அந்த வீரமங்கை. போர்க்களம் நோக்கிப் புறப்பட்டாள். களத்திலே தேடினாள் தன் மகனை. அவன் நெஞ்சிலே அம்பு பாய்ந்து வீரமரணம் எய்தக் கண்டாள். அவனை மடியிலே தூக்கிப் போட்டு, "என் வீர மகனே! நீ புறமுதுகிட்டு மாண்டு போனால், உனக்குப் பாலூட்டிய என் மார்பகங்களை அறுத்தெறிவேன் என்று சபதமிட்டு வந்தேனடா; உன் வெற்றித் தழும்புகளைப் பார்த்து பூரிப்பு அடைகிறேனடா! தாய் நாட்டுக்காகப் போராடி உன்னுயிரைத் தியாகம் செய்தாயடா; உன்னைப் பெற்றதால் நான் பெருமை கொள்வேனடா!" என்று சொல்லிச் சொல்லி அழுது, தேறினாள் அந்தத் தாய்.

அன்று அந்த புறநானூற்றுத் தாய், இன்று தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட, புரட்சித் தாய்மார்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தட்டியெழுப்பி, வீரத் தாயாம், தியாகத் தாயாம், திராவிடத் தாயாம் அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான மார்ச் 10ஆம் தேதி, பெண்களை  இழிவுபடுத்தும் மனுதர்ம நகல் எரிப்புப் போராட்ட(ம்) களத்திலே இறக்கியிருக்கின்றார்கள்.

கலந்துரையாடலில், மகளிரின் ஆர்ப்பரிப்பையும், கொந்தளிப்பையும் வீராவேசத்தையும் கண்டு பூரிப் படைந்தேன். நகலை எரிப்பதென்ன? வாயால் சொல்ல முடியாத அளவுக்கு கேவலமாக எழுதிய அந்த மனு கையிலே கிடைத்தால் அவனையும் சேர்ந்து எரிப்போம் என சிலர் முழங்கினர். பெண்கள் காமவெறி பிடித்து அலைபவர்களா? இல்லை; மனு, பெண் கிறுக்குப் பிடித்து அலையும் பித்தனா? என்பதை மார்ச் 10இல் மகளிரணியினர், தோலுரிப்பார்கள்.

திராவிடர் மகளிர் பாசறை, திராவிடர் கழக மகளிரணியினர், மண்டல, மாவட்டங்கள் வாரி யாக மகளிர்களைச் சந்தித்து, அமைப்புகளை உருவாக்க வகுத் திருக்கும் திட்டங்கள் மிகவும் நேர்த்தியானவை. அவர்களுடைய பணி சிறக்க அந்தந்தப் பகுதியிலுள்ள பொறுப்பாளர்கள், தோழர்கள் ஒத்துழைப்பு கொடுத்தார்களென்றால், மகளிரணியினர் நிச்சயம் தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் புரட்சி அணியினை உருவாக்குவார்கள் என்பதில் அய்யமில்லை. கலந்துரையாடல் கூட்டத்திற்கு புதிய வரவுகள். ஆம், புதிய மகளிர்கள் வந்திருந்தது மகிழ்ச்சிக்குரியதும், வரவேற்கத் தகுந்ததாகும்.

பெண்களை உதாசீனப்படுத்தும் மத்திய பிஜேபி அரசுக்கு பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வடக்கே, அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கும் பெண் மக்கள், தென்னகத்து மகளிரணியினர் நடத்தும் போராட்டத்தைக் கண்டு பூரிப்படைவார்கள். ஊட கங்களில், வரும் நாடகங்களில், ஒரு ஆண் மகனை, இரண்டு பெண்கள் காதலிப்பது போன்ற கதாபாத்திரங்களை சித்தரிப்பதை; தணிக்கையாளர்கள் தடை செய்ய வேண்டும். பெண்களுக்கான கொடுமைகள் எங்கு நடந்தாலும்,  பெண்களே தட்டிக் கேட்கும் துணிவினை பெரியாரின் புரட்சிப் பெண்கள் இந்தப் போராட்டத்தின் மூலம் உண்டாக்குவார்கள்  என்பதில் அய்யமில்லை.

தமிழ்நாட்டுப் பெண் மக்கள், தங்களின் உரிமைகளைப் பெற்றிடவும், தன்மானங் காத்திடவும், பெண்களின் ஒற்றுமை ஓங்கிடவும், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போரிடவும் பெரியார்  தந்த துணிவோடு, அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையாரின் வழியினிலே போராட்டக் களங்காண வாருங்கள். உங்களின் மகத்தான வெற்றியை; நாளைய சரித்திரம் சொல்லட்டும்.

வெற்றி! வெற்றி!! மாபெரும் வெற்றி! மார்ச் 10இல் மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நன்றி! வணக்கம்!

- கா.நா. பாலு

சேலம் மாவட்ட

திராவிடர் கழக, செயலாளர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner